அமைதியானதொரு மாலை ஆறு மணி ஜெபம்
இன்றைய வேதாகம வசனம்
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
(1 சாமுவேல் 03: 10)
எனது அனுதின ஜெப வாழ்வில் நான் கடைப்பிடிக்கும் ஒரு முக்கிய ஒழுக்கம் யாதெனில் மாலை ஆறு மணிக்கு எனது செல்லிடத் தொலைபேசி அலாரத்தை ஆயத்தமாக்கி வைத்தலும், அந்நேரத்தில் எங்கிருந்தாலும் என்ன செய்துகொண்டிருந்தாலும் ஒரு கணம் ஜெபித்தலுமாகும். சில நேரங்களில், நான் ஆறு மணிக்கு வீட்டிலிருப்பேன், ஆகையால் ஒரு விளக்கை அல்லது ஒரு மெழுகுதிரியை ஏற்றி, அந்த வெளிச்சத்தின் அருகிலே நின்று, கைகளைக் கூப்பி ஜெபிப்பேன். ஆனால், அநேகமான நேரங்களில், இந்த அலாரம் அடிக்கும்போது நான் ஏதோவொரு காரியத்தின் நடுவில் நிற்பதுண்டு; மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருப்பதுண்டு, நீண்டுகொண்டே செல்லும் ஒரு விரிவுரையில் அமர்ந்திருப்பதுண்டு, கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி பணத்தை செலுத்துவதற்காய் நீண்ட வரிசையிலே நிற்பதுண்டு. அது என்ன இடம், என்ன சூழ்நிலையானாலும் நான் ஒரு இரகசிய வார்த்தையிலாவது மனதில் ஜெபிப்பதுண்டு.
சிறுவயது தொடக்கம் திருச்சபையின் பாடகர் குழுவில் நானும் ஒருவனாக இருந்து வந்ததின் காரணத்தால், சனிக்கிழமைகளில் ஆறு மணிக்கு ஆலயத்தில் நின்று அடுத்த நாள் ஆராதனைக்குரிய பாடல்களை ஒத்திகை பார்க்கும் சந்தர்ப்பங்கள் அநேகம் ஏற்பட்டதுண்டு. சரியாக மாலை ஆறு மணிக்கு ஆலயமணி ஒலிக்கும். சுற்றி இருக்கும் சூழல் எல்லாம் ஒரு கணம் அப்படியே அமைதியாய்ப் போய்விடும். பாடல் நிற்கும், இசை அமைதியாய்ப் போகும், சிரிப்புகள் இடைநிற்கும். வயதில் மூத்தவர்கள் அந்நேரங்களில் சிரம் தாழ்த்தி ஜெபம் பண்ணுவதை சிறுவயதில் நான் பார்த்திருக்கிறேன். காலப்போக்கில், மாலை நேர ஆலயமணியின் ஓசையிலே நாம் இரண்டு முக்கிய ஜெபங்களைச் செய்கிறோம் என அறிந்துகொண்டேன். ஒன்று, நம்மோடு இவ்வுலகில் வாழ்ந்து கர்த்தரோடு நித்திய வாழ்வுக்குள் அழைத்துக்கொள்ளப்பட்ட நம் அன்பானவர்களை நினைந்து, அவர்கள் வாழ்வுக்காக நன்றி செலுத்தி, அவர்களின் நித்திய இளைப்பாறுதலை மனதில் கொள்ளுவதாகும். இரண்டாவது, இரவு நேரம் நெருங்கி இருள் நம்மை சூழ்ந்துகொள்வதால், இந்த இருட்டில், இந்த தூக்கத்தின் நேரத்தில் தீமைகள் அணுகாது எம்மைக் காத்துக்கொள்ளும் ஆண்டவரே என்று நாம் ஜெபிப்பதாகும்.
மாலை நேர ஆறுமணி ஜெபமானது மிகவும் முக்கியமானதொன்றாகும். இந்த ஜெபம், நமது அறிவையும், உணர்வுகளையும் உடலையும் மாற்றுவதாய் அமைகிறது. இந்த ஜெபம் கடந்து வந்த நாளை நினைத்து ஆண்டவருக்கு நன்றி சொல்லும் தருணமாய் மட்டுமல்லாது, எதிர்கொள்ள இருக்கும் இரவிலே எந்நேரத்திலும் ஆண்டவர் நம்மோடு பேச, அவர் நம்மோடு இடைப்பட நம்மை நாம் ஆயத்தப்படுத்தும் ஒரு நேரமாகவும் இது அமைகின்றது. மாலை நேர ஜெபங்கள் இரவு முழுவதும் எரிவதற்காய் நாம் ஏற்றி வைக்கும் விளக்குகள் போன்றவை. இந்த விளக்குகள், எங்கோ ஒரு மூலையிலே இரவு முழுவதும் எரிந்துகொண்டிருப்பது மட்டுமல்லாது, நாம் நம்பிக்கையுடனும் துணிவுடனும் நித்திரை கொள்ள உதவுகின்றன. மாலை நேர ஜெபங்களும் இது போன்றே, அந்த நாளின் முடிவுகளின் மத்தியிலும், நம்மை சூழவுள்ள இருளான எண்ணங்களின் நடுவிலும், அணையாமல் எரியும் வெளிச்சமும் நம்பிக்கையுமான நமது ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை நமக்கு கண் முன் நினைவுபடுத்துகின்றன.
சிறுவானாகிய சாமுவேல் கர்த்தர் தன்னை அழைக்கும் குரலை அறியாதிருந்தான். வேதம் சொல்கிறது, "அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப்படுத்துக்கொண்டான்" (1 சாமுவேல் 3: 4, 5). இதே காரியம் மூன்று முறை மீண்டும் மீண்டும் நடந்தது. ஒவ்வொருமுறையும் கர்த்தர் சாமுவேலை அழைத்ததும் சாமுவேல் ஏலியினிடத்தில் ஓடிப்போவான். "அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து, சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்" (1 சாமுவேல் 3: 8 - 10). இந்த சம்பவத்தைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியம் ஏற்படுவதுண்டு. கர்த்தரின் அழைப்பை உணரும் அளவுக்கு அந்த சூழலில் எந்த அளவுக்கு ஆயத்தம் இருந்தது என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த இடமும் அங்கிருந்த நபர்களும் கர்த்தரின் சத்தத்தைக் ஒருவர் கேட்கவும், அது கர்த்தரின் அழைப்பு என்பதை மற்றையவர் உணரவும்கூடிய அளவுக்கு அந்த ஆயத்தம் இருந்தது. கர்த்தரோடு அந்த இரவிலே சாமுவேலின் காதுகளையும் ஏலியின் மனதையும் தொடர்பில் வைத்திருந்தது அந்த இரவுக்கு முன்னான மாலை நேர ஜெபவேளை என்றே எனக்கு சிந்திக்கத் தோன்றுகின்றது. இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் முன் இந்த வேதப்பகுதி அழகாக சொல்வதாவது.. "ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார்" (1 சாமுவேல் 3: 2 - 4a). இந்த ஒரு சூழ்நிலை நமக்கு ஜெபத்துடன் கூடிய ஒரு இரவின் ஆயத்தத்தைக் காட்டுகின்றது அல்லவா?
இன்று உங்களையும் இந்த வேதப்பகுதிக்கூடாக நான் உற்சாகப்படுத்த விரும்புகின்றேன். அலாரம் வைப்பதோ, அனைத்தையும் இடைநிறுத்திவிட்டு ஆறுமணிக்கு ஜெபம் பண்ணுவதோ அல்ல இங்கு முக்கியம். இவற்றிற்கெல்லாம் மேலாக ஆயத்தமாகுதலே முக்கியம். நித்திரைக்குச் செல்லும் தருணத்திலும் கர்த்தரின் குரல் கேட்க நாம் எவ்வளவு தயார் ஆகின்றோம்? பகல் நேரங்களில் நமது உடலும், சிந்தையும் விழிப்பாகவும் பலதரப்பட்ட காரியங்களிலே ஈடுபட்டதாகவும் இருக்கும். ஆனாலும் நித்திரைக்குச் செல்லும் நேரத்திலே அந்த நாளில் நடந்தவற்றைக் குறித்து சிந்தை மீளாய்வுகளை செய்துகொண்டிருக்கும். புதிய காரியங்களை யோசிப்பதைவிட நடந்தவற்றையெல்லாம் மனம் நிறுத்துப் பார்க்கும். இன்றைய நாளுக்கும் நாளைய நாளுக்கும் இடையே சிந்தையிலே ஒரு வெறுமை ஏற்படும் நேரம். இந்த வெறுமையின் நேரத்திலே கர்த்தர் ஒரு புதிய காரியத்தை ஒரு புதிய தரிசனத்தை உங்கள் வாழ்வில் கொடுக்க ஆசையாய் இருக்கலாம். இதுவே கர்த்தர் உங்களைப் பெயர் சொல்லி அழைக்கும் நேரமாய் இருக்கலாம். நீங்கள் ஆயத்தமா? இன்றுமுதல் மாலை நேரங்களில் கர்த்தரோடு உங்கள் உறவைப் புதிப்பித்துக் கொள்ள, இன்னும் கிட்டிச் சேர, எதிர்கொள்ள இருக்கும் இரவுக்கு உங்களை ஆயத்தப்படுத்த நான் உங்களை ஊக்குவிக்க விரும்புகின்றேன். கர்த்தருக்கு நாளுக்காக நன்றி சொல்லி, உங்கள் காதுகளையும், இருதயத்தையும், சிந்தையையும் கர்த்தரின் குரல் கேட்க ஆயத்தப்படுத்துவீர்களாக. மாலை ஆறு மணி ஜெபமானது நன்றிக்கும் ஒப்புக்கொடுத்தலுக்கும் ஒரு பொருத்தமானதொரு நேரமாகும். விரும்பினால் இப்பொழுதே உங்கள் அலாரத்தை ஆயத்தம் செய்யலாம்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
🎶
"என் இரவோ என் பகலோ"
by கிவ்சன் துரை