கர்த்தரின் மறுஉத்தரவு நம்மைத் தைரியப்படுத்தும்
இன்றைய வேதாகம வசனம்
"நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்;
என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்."
(சங்கீதம் 138: 03)
அநேக நாட்களாக நீங்கள் ஒரு தேவைக்காக ஜெபித்துக்கொண்டிருப்பீர்கள். கர்த்தர் நிச்சயம் ஒரு நாள் பதில் தருவார் என்றும் அறிவீர்கள். ஆனாலும் நீங்கள் சோர்ந்துபோயிருக்கக்கூடும். இந்த சோர்வு உங்கள் விசுவாசம் தளர்ந்ததாலேயோ, அல்லது இந்த காத்திருப்பு மிக நீண்டதாக இருப்பதானாலேயோ அல்லாது, இந்த காத்திருப்பின் காலத்தில் நீங்கள் அநேக துன்பங்களை சகித்துக்கொண்டு இருப்பதனால் ஏற்பட்டதாய் இருக்கின்றது. நீங்கள் ஆண்டவரின் பதிலுக்காக காத்திருக்கும் இந்த காலத்தில், பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் சந்திக்கவேண்டியிருப்பதை உணர்வீர்கள். வாழ்வில் தொடர்ந்தும் கடினமாக வீசிக்கொண்டிருக்கும் இவ்வாறான கடும் காற்றை எதிர்கொண்டு பலவீனமடைந்திருக்கின்றீர்கள். இருந்தும், கர்த்தருடைய பதிலுக்காக காத்திருக்கின்றீர்கள்...
நம்முடைய கர்த்தர், நாம் ஜெபித்துக்கொண்டிருப்பதையும், அவருடைய மறுஉத்தரவுக்குக் காத்திருந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட இக்கட்டுக்களினால் நாம் பலவீனமடைந்திருப்பதையும் அறிந்திருக்கின்ற ஆண்டவராய் இருக்கிறார். நம் ஆண்டவர் நமக்குப் பதில் தரும்போது அந்தப் பதிலுடன்கூட அவருடைய பலத்தினால் நம்மைத் தைரியப்படுத்தவும் செய்கிறார் என்பதை நாம் நமக்கு நினைவுபடுத்தவேண்டியவர்களாய் இருக்கின்றோம். ஆம், இது தாவீதினுடைய வாழ்க்கை அனுபவங்களிலும் உண்மையாகின்றதை தாவீது நம்முடன் பகிர்ந்துகொள்வதனூடாக நாம் அறிகின்றோம். சங்கீதம் 138: 03ல் தாவீது, "நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்" என்று ஆண்டவரைப் பார்த்து சொல்கின்றான். இதிலிருந்து, ஆண்டவருடைய மறுஉத்தரவானது நமது தேவைகளை சந்திப்பதும் அவருடைய சித்தத்தின்படி நாம் கேட்பவற்றை அருள்வதும் மட்டுமல்லாது, தொடர்ந்து காரியங்களைச் செய்வதற்கு நம்மைத் தைரியப்படுத்துவதாகவும் இருக்கின்றது என்பதை நாம் அறிகின்றோம்.
இன்றைய நாளிலும், இந்த சங்கீதமானது, நம்முடைய விசுவாசப் பயணத்திற்கு முக்கியமானதொரு காரியத்தை நமக்கு நிச்சயிக்கின்றது. நம்முடைய ஆண்டவரின் பிரசன்னத்திற்கு முன்பாக நாம் நிற்கும்போதும், நம்முடைய ஜெபங்களுக்கான பதிலுக்குக் நாம் காத்திருக்கும்போதும், நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், ஆண்டவருடைய பதில் நம்மைத் தைரியப்படுத்தவும், பெலப்படுத்தவும், புதிய காரியங்களைச் செய்வதற்குத் தேவையான தைரியத்தைத் அளிக்கவும், தொடர்ந்தும் விசுவாசப் பயணத்தில் நாம் நடப்பதற்கான பெலனை அளிக்கவும் ஏதுவானதாய் இருக்கும். நம்முடைய பெலவீனங்கள், இழப்புக்கள், அமைதியாக்கப்பட்ட நேரங்கள், மற்றும், விசுவாச தளர்ச்சிகள் என்பவற்றின் மத்தியிலும் ஆண்டவருடைய மறுஉத்தரவு நம்முடைய வாழ்விலே ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, நம்முடைய விசுவாசத்தில் நாம் வளரவும், ஜெயம் பெறவும் நம்மை வழிநடத்தும். ஆகையால் நாம், நமது சோர்வுகளின் மத்தியிலும் நம்பிக்கையிழக்காதிருப்போம். நிச்சயமாகவே ஆண்டவர் மறுஉத்தரவு அருளிச்செய்வார். அத்தோடு அந்த மறுஉத்தரவானது நம்மைத் தைரியப்படுத்தவும் செய்யும்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
🎶
"என் பெலனெல்லாம் நீர்தான் ஐயா"
by பென் சாமுவேல்