கிறிஸ்தவ இல்லமொன்றில் கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சி


இன்றைய வேதாகம வசனம்
அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
(லூக்கா 02: 13, 14)

வீட்டின் மூலையொன்றில் நத்தார் மரம் அழகாகக் காட்சியளிக்கும். கேக், மற்றும் இனிப்புப் பண்டங்கள் எல்லாம் பகிரப்பட ஆயத்தமாய் இருக்கும். பரிசுகள் கொடுத்தும் வாங்கியும் மனங்கள் நிறைவாய் இருக்கும். ஆலயத்தில், திருச்சபையில் மிகவும் முக்கிய நிகழ்வுகளான சிறுவர் நத்தார் மர நிகழ்ச்சிகள், திருச்சபையின் கிறிஸ்து பிறப்பு இன்னிசை வழிபாடு, பாடகர்கள் வீடுகளுக்கு கரோல் பாடி வருதல் என்பன நிறைவு கண்டிருக்கும். அயலவர்கள், நண்பர்கள் எனப் பலருடனும் நத்தார் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆயத்தமாய் இருக்கும். இவை அனைத்தின் மத்தியிலும், கிறிஸ்து பிறப்பின் நினைவுகூருதலை மகிழ்ச்சியுடன் அனுஷ்டிக்க நாம் நாளைய தினத்திற்கு ஆயத்தப்பட்டுக்கொண்டிருப்போம். 

நத்தார் கொண்டாட்டம் என்பது நத்தார் மரம் வைக்கப்பட்டிருக்கும், வெளிச்சங்களால் அலங்கரிக்கப்பட்டும், ஒரு மாடடைக் கொட்டில் மாதிரி வைக்கப்பட்டிருக்கும், நத்தார் தாத்தாவின் தொப்பி அணிந்திருக்கும் எந்தவொரு வீட்டிலும் கொண்டாடப்படக்கூடியதாய் மாறிவிட்டது. ஆனாலும், ஒரு கிறிஸ்தவ இல்லத்தில், நத்தார் கொண்டாடப்படும் விதத்திலே ஒரு வித்தியாசம் இருக்கின்றதா? கிறிஸ்துவின் பிறப்பின் சந்தோஷத்தையும், இயேசுவின் பிறப்பின் மான்பையும் எடுத்துரைப்பதாய் அது இருக்கின்றதா? நத்தார் என்பது வெறுமனே ஒரு பனிக்கால, மழைக்கால கொண்டாட்டமாய் அமையாது, கிறிஸ்து இயேசுவின் அன்பையும், இந்த மகிழ்ச்சியின் காலத்தின் ஆசீர்வாதங்களை நமது இல்லங்களுக்குள்ளும் இல்லங்களிலிருந்தும் கொண்டுவரும் ஒரு காலமாய் அமைய, ஒரு கிறிஸ்தவ இல்லத்தில் இக்காலத்தில் அவசியமானவை என்ன என்பதை நாம் நாம் சிந்தித்துப் பார்ப்போம். பரிசுத்த வேதாகமம் நமக்குக் கற்றுத்தரும் கிறிஸ்துவின் பிறப்பின் சம்பவங்களிலிருந்து இரண்டு பெரும் படிப்பினைகளை நான் காண்கின்றேன். ஒன்று, துதித்தல், மற்றையது பகிர்தல்.

லூக்கா எழுதின சுவிசேஷம், 2 ம் அதிகாரம், 08 - 14 வசனங்கள் இப்படியாய்க் கூறுகின்றன: அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். இங்கே இரண்டு முக்கிய சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கலாம். தேவதூதர்கள், உன்னதத்தில் இருக்கும் நமது பிதாவாகிய கர்த்தரைத் துதித்தார்கள். அதேவேளை, கிறிஸ்துவின் பிறப்பின் சந்தோஷத்தை மேய்ப்பர்களோடு பகிர்ந்துகொள்கின்றார்கள்.

கிறிஸ்தவ இல்லங்கள்  ஒவ்வொன்றிலும் துதித்தல் இடம்பெறட்டும். 
கிறிஸ்மஸ் நாளும், அதைத் தொடர்ந்து புதுவருடம் வரும்வரை உள்ள அந்த ஒரு  கிழமையும் கிறிஸ்தவ இல்லங்களுக்கு மிக முக்கியமானவையாகும். கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் இந்த நாட்களில் உங்கள் இல்லங்களில் துதித்தல் இடம்பெறுவது மிகவும் ஒரு ஆசீர்வாதத்தைத் இல்லங்களில் அளிக்கும்.  நத்தார் மரத்திற்கு அருகிலிருந்தோ, அல்லது இல்லத்தில் விரும்பிய எந்த ஒரு இடத்திலோ குடும்பமாய்ச் சேர்ந்து, கிறிஸ்து இயேசுவை, தம் சொந்த மகனை நமக்காக தந்தருளின அன்பை நினைந்து கர்த்தரைத் துதித்தல் மிகவும் அவசியமாகும். இந்நாட்களில் நாம் பாடுவதற்குக் கிடைக்கும் அருமையான பிறப்பின் காலத்துப் பாடல்களைப் பாடி கர்த்தரைத் துதிப்போமாக. அதே போல, இந்த கிழமையின் நாட்கள் ஒரு வருட இறுதியின் நாட்களாய் இருப்பதால் இந்த வருடத்திலே கர்த்தரின் வல்லமையான வழிநடத்தல்களை நினைத்து குடும்பமாய் அவரைத் துதிப்போம். நீங்கள் வீட்டில் தனிமையாகவோ, அல்லது வீட்டில் னெண்கள் ஒருவரே விசுவாசியாய் இருப்பீர்களானால், அந்த நிலையிலும், நீங்கள் தனியாய் இருந்து கர்த்தரை பாடித் துதியுங்கள். அது வீட்டிலும், அருகிலும் உள்ளவருக்கு உங்கள் சந்தோஷத்தை நீங்கள் பகிர்ந்துகொள்ளுவதாயும் அமையும்.  

கிறிஸ்தவ இல்லங்கள்  ஒவ்வொன்றிலும் பகிர்தல் இடம்பெறட்டும்.
நிச்சயமாகவே இந்நாட்களில் நம்மில் அநேகர் பகிர்ந்து களைத்துப்போயிருக்கலாம். உணவு வகைகளும், பரிசுகளும், வாழ்த்துக்களும் பகிரப்பட்டு முடிந்திருக்கலாம். ஆனாலும், இன்று நீங்கள் ஒரு கிறிஸ்தவ குடும்பமாய், கிறிஸ்து என்ற நற்செய்தியையும், கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட அன்பையும் பகிர அழைக்கப்படுகின்றீர்கள். நாம் வாழும் இவ்வுலகில், அன்பு என்பது மிகவும் தேவை உள்ளதாய் இருக்கின்றது. அநேகர் இந்நாட்களில் அன்பையும் அரவணைப்பையும் உறுதுணையையும் தேடியவர்களாக இருக்கின்றனர். இயற்கை அனர்த்தங்கள், அழிவுகள், போர், வறுமை, போதை, தனிமை, இழப்பு, வேதனை, ஏமாற்றங்கள், தோல்விகள், பணத்தேவைகள் மற்றும் நாம் குறிப்பிடக் கூடிய அநேக பாரங்களைச் சுமந்தவர்களாக இன்று நம் மத்தியில், நமது நண்பர்கள், அயலவர்கள், உடன் வேலை செய்பவர்கள் மத்தியில் இருக்கின்றனர். இந்த நாட்களில் நீங்கள் அவர்களை உங்களிடத்தில் அழைத்து உங்கள் அன்பையும், அரவணைப்பையும் காட்டுவதன்மூலம் கிறிஸ்து இயேசு உங்கள் மேலே காட்டின அன்பை நீங்கள் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இதுவே இந்த நாட்களில் நாம் பகிர்ந்துகொள்ளக்கூடிய கிறிஸ்துவின் அன்பு. 

இந்த கிறிஸ்து பிறப்பின் நாட்கள் நமக்குள் பெரும் மகிழ்ச்சியையும், உண்மையான அன்பின் அர்த்தத்தை உணரும் நாட்களாக அமையட்டும். நமது வீடுகளில் தினமும் துதியும் பகிர்தலும் இந்நாட்களில் அதிகமாக இடம்பெறட்டும். நமது குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவரும் நமது விசுவாசத்தின் மிகமுக்கிய பங்காகிய கிறிஸ்து இயேசுவின் பிறப்பின் அர்த்தத்தையும் ஆழத்தையும் மீள் தூக்கிப் பார்க்கும் ஒரு காலமாய் இருக்கட்டும். அதைத் தொடர்ந்து, இந்த பிறப்பின் மகிமையைப் மற்றவரோடு பகிர்ந்துகொள்ளும் நேரமாய் இந்நாட்கள் அமையட்டும்.

நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக்  கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்


எனது மனைவி தர்ஷினியும் நானும்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 
ஒரு ஆசீர்வாதமும் மகிழ்ச்சியுமான நத்தார் அமைய 
எமது வாழ்த்துக்களைத் 
தெரிவித்துக்கொள்கின்றோம்



🎶
கிறிஸ்து பிறப்பின் தமிழ் பாடல் தொடர்
by
டிஷோன் சாமுவேல் & ArcD 




Global Reach of 'Weekly Devotions with Ebenezer'

Like and Follow Our Facebook Page For Regular Updates

Like and Follow Our Facebook Page For Regular Updates
Click on the picture above to reach our FB page

Popular Posts