கர்த்தருக்குக் காத்திருக்கும் பக்குவம்


கர்த்தருக்குக் காத்திரு; 
அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; 
திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
(சங்கீதம் 27: 14)

இந்த புதிய வருடத்தின் முதல் இரண்டு வாரத்தைக் கடந்துவந்திருக்கும் நம் அநேகரின் எண்ணங்களில் இருப்பதெல்லாம் புதிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளுமே. எம்மில் பலருக்கு புதிய வருடத்தைக் குறித்தும் புதிய காரியங்களைக் குறித்தும் புதிய சிந்தனைகள் இருப்பினும், நம்மில் இன்னும் அநேகர் இனிமேல் ஒன்றும் எதிர்பார்ப்பதில்லை என்று தீர்மானித்து, "ஒவ்வொன்றும் வரும்போது, நிகழும்போது பார்த்துக்கொள்ளுவோம்" என்று நினைத்து புதிய வருடத்தை ஆரம்பித்தும் இருக்கக்கூடும். கடந்து வந்த சில வருடங்கள், விசேடமாக, கோவிட் - 19 ன் உலகளாவிய பரவலும், அதைத் தொடர்ந்து பல நாடுகளுக்கும் குடும்பங்களுக்கும் நேர்ந்த நிர்க்கதியான நிலமைகளும் இருந்த காலங்கள், அநேகருடைய மனங்களிலே பெரிதானதொரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். வருடத்தின் ஆரம்பத்திலேயே வருடத்திற்கான திட்டங்களைப் போடுவதை நிறுத்திவிட்டனர். ஓடுகின்ற நீரோட்டத்தில் நாமும் ஓடிக்கொண்டிருப்போம், அவ்வப்போது ஒவ்வொரு காரியமும் வெளிப்படும்போது அதற்குத் தேவையானதைச் செய்வோம் என்று தீர்மானித்து இருப்பதையும் நாம் காணலாம். மனிதர்கள், கர்த்தர்மேல் நம்பிக்கையாய் இருந்து அவருக்காய்க் காத்திருக்கக் கற்றுக்கொள்ளும் காலமோ என்னவோ என சிந்திக்கத் தோணுகின்றது. 

இந்த வருடம் ஆரம்பித்தபொழுது, நானும் கர்த்தரிடத்தில் எதைக் கேட்பேன் என அங்கலாய்த்தேன். அண்மையில் நான் கடந்து வந்த சில அனுபவங்கள் நான் எதையும் விசேடமாக ஆண்டவரிடம் கேட்கமுடியாதபடி என்னைத் தடுத்தது. எதைக் கேட்பேன், என்னவென்று சொல்லிக் கேட்பேன் என்று, "கர்த்தாவே, அனுதினமும் நீர் எனக்காய் வைத்திருக்கும் வழியை நான் பக்குவத்தோடு நடக்க எனக்கு உதவும்" என்று சொல்லி என்னுடைய திகதிகள், சவால்கள், திட்டங்கள், செய்து முடிக்க வேண்டிய வேலைகள், பயணங்கள், தீர்மானங்கள் என அனைத்தையும் கர்த்தரிடம் ஒப்படைத்தேன். "கர்த்தாவே உம்மிடத்திலே ஒரு வெறுமையான கூடையை இவ்வருடம் ஒப்படைக்கின்றேன். நீர் அதை என்னென்ன பழங்களால் நிரப்ப சித்தமாய் இருக்கின்றீரோ, அதைத் நீரே ஈவாகத் தாரும், நான் காத்திருப்பேன்" என்று சொல்லி ஒப்படைத்தேன்.  கர்த்தருக்கு காத்திருத்தல் என்பது ஒரு உணர்வுள்ள தீர்மானமாகும். அது வெறுமனே, சோர்ந்து போகும்போதோ அல்லது மனம் தளர்ந்து போகும்போதோ எடுக்கும் தீர்மானமல்லாது, சூழ்நிலைகள் எல்லாம் நாம் வேண்டியதற்கு சாதகமாய் இருக்கும்போதும் கர்த்தரின் உத்தரவுக்காய்க் காத்திருப்பேன் என தீர்மானிப்பாதே கர்த்தர்மேல் நாம் வைத்திருக்கும் பெரும் விசுவாசத்தைக் காண்பிக்கின்றது. 

காத்திருத்தல் இலேசானதல்ல. அது நம்மில் பலருக்கும், விசேடமாக வயதில் மூத்தவர்களுக்கும், தாம் வாழ்ந்த அனுபவங்களினூடாக தெரிந்த ஒரு விடயமாகும். ஆகையால், கர்த்தருக்குக் காத்திருத்தல் ஒரு ஆன்மீக பக்குவத்தின் அடையாளமாகும். இந்தப் பக்குவம் நமக்கு அடிக்கடி, நாம் சாதாரணமாக காத்திருக்கவில்லை, கர்த்தருக்கே காத்திருக்கின்றோம் என்பதை நமக்கு ஞாபகப்படுத்தும். ஆகையால், கர்த்தருக்குக் காத்திருக்கும் பக்குவம் என்பது எதனைக் குறிக்கின்றது? அது எவ்வாறு எமது வாழ்வில் உண்மையாகும்? எனக்கு எழுந்த இந்த கேள்விகளுக்கு, பிரபல பிரசங்கியாரான சார்ள்ஸ் ஸ்பேஜன் (Charles Spurgeon) இனுடைய காத்திருத்தல் பற்றிய வேத குறிப்பு எனக்கு பதில்களைக் கொடுத்தது. ஸ்பேஜன் குறிப்பிட்டிருப்பதாவது:
கர்த்தரின் கதவண்டையில் ஜெபத்துடன் காத்திரு;
அவரின் பாதத்தண்டையில் தாழ்மையுடன் காத்திரு;
அவரின் மேசையண்டையில் சேவையுடன் காத்திரு;
அவரின் யன்னலண்டையில் எதிர்பார்ப்புடன் காத்திரு. 

இந்தக் குறிப்பானது கர்த்தருக்கு காத்திருத்தலின் சாராம்சத்தை மட்டும் நமக்கு விளக்காது நம்மைப் பக்குவமான காத்திருத்தலுக்கு ஊக்கப்படுத்துவதைக் நாம் காணலாம். 

முதலாவதாக, கர்த்தருக்குக் காத்திருக்கும் பக்குவமானது ஜெபம் நிறைந்த ஒரு காத்திருப்பாயிருக்கும். இடைவிடாத ஜெபம். நம்மைப்பற்றியும், நாம் யாருக்காகவெல்லாம் ஜெபிக்கின்றோமோ அவர்களைப்பற்றியும், ஒவ்வொரு காலத்திலும் நிறைவேறும் கர்த்தரின் திட்டங்கள்பற்றியதாகவும் இருக்கும். இந்த இடைவிடாத ஜெபம், நாம் கர்த்தருக்குள் வைத்திருக்கும் அசையாத விசுவாசத்தைத் எடுத்துக்காட்டும். 

இரண்டாவதாக, இது ஒரு தாழ்மையின் காத்திருப்பு ஆகும். நமக்கு என்னென்ன உலக காரியங்கள் மீதெல்லாம் நம்பிக்கை உள்ளதோ, நமது என்னென்ன பலத்தின் மேல் நம்பிக்கை உள்ளதோ, அவற்றையெல்லாம் ஒருபக்கம் தள்ளி வைத்துவிட்டு, நமது தகுதியின்மையை உணர்ந்து, நாம் கர்த்தரே எனது எல்லாமாய் இருக்கின்றார் என விசுவாசித்து காத்திருக்கவேண்டும். எமது சிந்தையும் ஆத்துமாவும் கர்த்தருக்கு முன் அனைத்தும் தாழ்த்தி, சரணடைந்து, கர்த்தரின் பாதத்திலே காத்திருக்கவேண்டும். 

மூன்றாவதாக, கர்த்தருக்குக் காத்திருக்கும் நேரம் ஒரு சேவையின் நேரமாகும். கர்த்தருக்காய் காத்திருப்பதென்பது, "கர்த்தர் எனக்கு இதைச் செய்தால், அவருக்கு நான் இதைச் செய்வேன்" என்றோ, "கர்த்தர் எனக்குப் பதில் கொடுத்தால் அவருக்காக நான் இந்த சேவையில் ஈடுபடுவேன்" என்றோ கூறுவதொன்றல்ல. மாறாக "நான் கர்த்தருக்காக காத்திருக்கும்போதே அவரின் சேவையைச் செய்துகொண்டிருப்பேன்" என்று, கர்த்தரின் மேசையண்டையில் பணிசெய்து காத்திருக்கும் காத்திருப்பே ஒரு ஆன்மீக பக்குவத்தின் வெளிப்பாடாகும். 

இறுதியாக, இது ஒரு எதிர்பார்ப்பின் காத்திருத்தல் என்பதை அறிந்துகொள்ளுவோம். இந்த எதிர்பார்ப்பு வெறுமனே "கர்த்தாவே எனக்கு நீர் இக்காரியத்தை இப்படியாக இந்த வழியிலே செய்வீர் என எதிர்பார்க்கிறேன்" என்று கூறுவதை விட, "கர்த்தாவே நீர் எனக்காய் இக்காரியத்தை உம்முடைய நேரத்திலே, உம்முடைய வழியிலே செய்ய வல்லவராய் இருக்கின்றீர்" என நம்பி எதிர்பார்த்து இருப்பதே ஆன்மீக பக்குவத்தின் காத்திருத்தலாகும். 

ஆகையால், இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே, நாம் அனைவரும், ஜெபத்துடனும், தாழ்மையுடனும்; சேவையுடனும்; எதிர்பார்ப்புடனும் காத்திருந்து ஒரு ஆன்மீக பக்குவத்தின் காத்திருத்தலை நம் வாழ்வில் கொண்டு, கர்த்தருக்குள்ளாக வளருவோமாக. கர்த்தருக்காகவும், அவரின் வேளைக்காகவும் காத்திருப்பது நல்லது. 

நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக்  கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்


🎶
"காத்திருப்பேன்"
by
Pastor Alwin Thomas


 

Global Reach of 'Weekly Devotions with Ebenezer'

Like and Follow Our Facebook Page For Regular Updates

Like and Follow Our Facebook Page For Regular Updates
Click on the picture above to reach our FB page

Popular Posts