கர்த்தர் உன் கூப்பிடுதலைக் கேட்பார்
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
சங்கீதம் 40:01
***
இன்றைய தியானத்தின் ஒலிவடிவத்தை
YouTube இல் கேட்க
***
நீங்கள் ஒரு காரியத்திற்காக நீண்ட காலமாக ஜெபித்துக் கொண்டிருக்கலாம். சில நேரங்களில் நீங்கள் சோர்வடைந்து விடுகிறீர்கள்; உங்கள் ஆவி பாரமடைகிறது. இனிமேல் ஜெபிப்பதற்கு எனக்குத் தெம்பு இருக்குமா என்று நீங்கள் அஞ்சத் தொடங்குகிறீர்கள். ஒரு பதிலுக்காக நீங்கள் காத்துக்கொண்டே இருக்கிறீர்கள். ஒரு கட்டத்தில், "தேவன் என் ஜெபங்களைக் கேட்கிறாரா? அவர் என் கூப்பிடுதலைக் கேட்கின்றாரா? எனக்கு எப்போதாவது பதில் கிடைக்குமா?" என்ற கேள்விகள் உங்களுக்குள் எழுகிறது.
இப்படித் தோன்றுவது இயல்பான ஒன்றுதான் என்பதை நாம் நினைவில் கொள்வோம். நாம் உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்; எனவே, இதுபோன்ற கேள்விகள் எழுவதில் ஆச்சரியமில்லை. இன்று நீங்களும் இதே போன்ற கேள்விகளோடு இருந்தால், ஆண்டவர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை இன்று அனுப்புகிறார்.
இன்றைய தியானத்திற்காக நாம் எடுத்துக்கொண்ட சங்கீதம் 40:1-ஐப் பார்த்தால், தாவீது எழுதிய இந்தச் சங்கீதத்தில் இரண்டு முக்கியமான ஆன்மீக உண்மைகள் பிணைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த சங்கீதத்தின் முதல் பகுதி "பொறுமையுடன் காத்திருப்பதைப்" பற்றியும், இரண்டாம் பகுதி "ஆண்டவர் நம் பக்கம் திரும்பி நம் கதறலைக் கேட்பதைப்" பற்றியும் கூறுகிறது. தாவீது எழுதுகிறார்: "கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்," பின்னர் அவர் தனது சாட்சியைப் பகிர்ந்து கொள்கிறார்: "அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூக்குரலைக் கேட்டார்."
இந்த வெளிப்பாடு உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறதல்லவா? காத்திருத்தல்! ஆம், பொறுமையோடு காத்திருத்தல்! ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருப்பதன் அவசியத்தை இந்தச் சங்கீதம் நமக்கு நினைவூட்டுகிறது. இந்தப் பொறுமையான காத்திருப்புதான், நம் அன்பு இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நம் விண்ணப்பத்தைக் கேட்கும் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட தருணத்திற்கு நம்மை வழிநடத்துகிறது.
ஆண்டவர் நிச்சயமாக நம் பக்கம் திரும்பி, நம் கதறலைக் கேட்பார் என்ற வாக்குத்தத்தத்தை இன்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, அதே வேளையில் கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருக்கும்படி உங்களை ஊக்குவிக்கிறேன். ஆண்டவர் நம் ஜெபத்தைக் கேட்கிறார் என்ற வாக்குத்தத்தம் கேட்பதற்கு இனிமையாகவும், மனதிற்கு இதமாகவும், நம்பிக்கையைக் கொடுப்பதுமாக இருக்கிறது. ஆனால், அந்த வாக்குத்தத்தத்துடன் ஒரு ஆன்மீகப் பொறுப்பும் இணைந்தே வருகிறது. அதுதான் 'ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருப்பது'.
ஆகவே, சோர்ந்து போகாதீர்கள். உங்கள் உள்ளத்தில் பாரமடைய வேண்டாம். நம்பிக்கையை இழக்காதீர்கள். நிச்சயமாக ஆண்டவர் உங்கள் பக்கம் திரும்புவார், உங்கள் கூப்பிடுதலைக் கேட்பார். ஆனால், நீங்கள் தேவனுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தால் மட்டுமே அந்த வாக்குத்தத்தம் நிறைவேறக் காண்பீர்கள். கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருங்கள்!
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் பிறேமன் வீரசிங்கம்
"துயரத்தில் கூப்பிட்டேன்🎶"
by Fr. S. J. Berchmans
Click & Follow
The Weekly Devotions WhatsApp Channel
for Regular Updates
Click & Follow
The Weekly Devotions YouTube Channel
for Regular Updates on Audio Versions












