கர்த்தரை நம்பு, அவர் உனக்குக் காரியத்தை வெளிப்படுத்துவார்
இன்றைய வேதாகம வசனம்
பின்பு தானியேல் தன் வீட்டுக்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக, அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான். பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.
(தானியேல் 02: 17-19)
எமது தனிப்பட்ட, குடும்ப, சமூக, தொழில்சார்ந்த மற்றும் ஆன்மீக வாழ்விலே, கிரகிப்பதற்கும் விளங்கிக்கொள்வதற்கும் முடியாத அநேக சம்பவங்களும் உணர்வுகளும் இருக்கின்றன. நாம், நமது உடலிலும், உளத்திலும், உறவுகளிலும், நமது பிள்ளைகள் பற்றியும், நமது கல்வி, தொழில், சமூக வாழ்வு பற்றியும், நமது ஊழியத்தைப் பற்றியும், நமது எதிர்காலத்தைப் பற்றியும் அநேக கேள்விகளோடு நாம் அலைகின்றோம். நிபுணர்களை சந்திக்கிறோம், யாரையாவது வழிநடத்துமாறு கேட்கிறோம், வெவ்வேறு பரிசோதனைகளுக்காய் செல்கிறோம், நண்பர்களிடம் விடயத்தை தெளிவுபடுத்துமாறு கேட்கிறோம், பலவித பதில்களும் மாற்று வழிகளும் நமக்கு முன்மொழியப்படுகிறது, இதையெல்லாம் தாண்டி நாம் Google இடம் கூட பதில்கள் தேடுவதில் உதவுமாறு கேட்கிறோம். சில வேளைகளில், நாம் தேடும் பதில்கள் நமக்குக் கிடைக்காததால் நமது வாழ்வின் சில பகுதிகளில் பெரிதான பாதிப்புகள் ஏற்படுவதைக் காண்கிறோம். நாம் பதில் தேடிச் சென்ற இடங்கள் எதுவுமே நமக்கு பதில் கொடுக்க முடியாத நிலை இருக்கலாம். இப்பொழுது நாம் என்ன செய்யப்போகிறோம்? நமது வாழ்வில் இப்பொழுது என்ன நடக்கின்றது என்பதைக் குறித்து எந்தவித தெளிவுமில்லாமல் இருக்கின்ற இந்த நிலையிலே, நாம் அடுத்து என்னத்தைச் செய்வோம்? ஏன், எப்படி, எதற்கு என்ற கேள்விகளுக்கு நாம் எங்கே பதில் காணலாம்?
தானியேல் தீர்க்கதரிசியின் வாழ்விலும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது. ஒரு இளைஞனாய், யூதா தேசத்திலிருந்து நேபுகாத்நேச்சார் ராஜாவின் காலத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோனிலே வாழ்ந்த காலங்களில் தானியேல் அந்நாட்டின் ஞானிகளில் ஒருவனாய் அறியப்பட்டிருந்தான். அவனது சமூக அந்தஸ்து யாதெனில், அரச ஆலோசகர்களில் ஒருவனாய் இருந்தான். ஆனாலும், அவனது இந்த உயர்வான அந்தஸ்தே ஒரு கட்டத்தில் அவனுக்கு பெரிதானதொரு மரண அச்சுறுத்தலைக் கொண்டுவந்தது. தானியேலின் புஸ்தகம், 2 ம் அதிகாரம், 1 - 12 வசனங்களை வாசிக்கும்படி உங்களை ஊக்குவிக்கிறேன். அன்றைக்கு, தெளிவுகள் இல்லாத, மரண அச்சுறுத்தல்கள் நிரம்பிய நிலையிலும் தானியேல் எவ்வாறு தனது விசுவாசத்திலே நிலையாய் இருந்தான் என்பதை நாம் ஒரு கணம் பார்ப்போமா? இந்தக் கற்றல், நிச்சயமாய், நமது வாழ்விலும் நமக்கு உதவி செய்யும் என நான் நம்புகிறேன்.
நேபுகாத்நேச்சார் ராஜா ஒரு முறை, தான் கண்ட சொப்பனங்களைக் குறித்து மிகவும் கலங்கியவனாக, தனது ஞானிகளை வரவழைத்து, அவர்களிடம் தான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் கூறுமாறு பணிக்கின்றான். அதற்கு அவர்கள், ராஜா எங்களிடம் தனது சொப்பனத்தைக் கூறினால் அதின் அர்த்தத்தை கூற நாம் தயார் என்றனர். "ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை" (தானியேல் 02: 10) என்று கூறி, ராஜாவின் கோபத்திலிருந்து தப்பிக்க வழி தேடினார்கள். ஏமாற்றமும், கோபமும் அடைந்த ராஜா, "பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான். ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது," தானியேலும் அவருடைய தோழர்களும் பாபிலோனின் ஞானிகளில் சிலராக இருந்தபடியால், அவர்களையும் "கொலைசெய்யத் தேடினார்கள்" (02: 12, 13). ஆனாலும், தானியேல், இந்த சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொண்டான் என்பதை நாம் காண்கிறோம். வேதம், மிகத் தெளிவாக கூறும் ஒரு காரியம் என்னவெனில், பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசினான் என்பதே (02:14). தானியேலின் விசுவாசத்தின் வெளிப்பாட்டை ஒவ்வொன்றாக பார்ப்போமா?
தானியேல், நிலைமையை திட்டமாய் விசாரித்து அறிகின்றான்.
தன்னைக் கொல்லும்படி அனுப்பப்பட்டவர்களிடம் தானியேல் முதலாவதாக நிலைமையையும் அதன் காரணத்தையும் திட்டமாய் விசாரித்து, இதிலே தன்னுடைய விசுவாசப் பங்களிப்பு என்னவாய் இருக்கலாம் என்பதை அறிகிறான். "இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்" (02: 15). இதுவே அவனிடத்தில் இருந்த முதலாவது விசுவாசப் பண்பு. பயப்படாமல், கலங்காமல், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டதே என்றும் கூட பயப்படாமல், இந்த சந்தர்ப்பத்தில் கடவுளின் அதிசயமான செய்கைக்கு இடமுண்டோ என அவன் பார்க்கிறான். நிச்சயமாகவே கர்த்தர் இடைப்படும் ஒரு இடம் இந்தக் குழப்பத்திலே உண்டு என்பதை தானியேல் அறிந்திருந்தான். கர்த்தரின் மகிமை வெளிப்பட தான் என்ன செய்யமுடியும் என்பதைப் பார்க்கிறான். இன்று நாம், நமக்கு எதிரே வரும் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்கிறோம்? கர்த்தரின் அதிசயமான கரம் இதிலே இன்னும் வெளிப்படும் இடம் உண்டு என்பதை உணர்ந்து முதலாவது அதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை சிந்திக்கின்றோமா?
தானியேல், ராஜாவிடம் சென்று பேசுகின்றான்.
மனித எண்ணத்திலும் கோணத்திலும் இதை பார்த்தால், கோபமடைந்திருக்கும் ராஜாவுக்கு முன்னர் சென்று பேசுவதென்பது தானியேலின் கடைசி வழியாகத்தான் இருந்திருக்கவேண்டும். மற்ற எல்லா தப்பிச்செல்லும் வழிகளையும் பரீட்சை பார்த்து, யாதும் வாய்க்கவில்லை என்றால்தான் இந்த முடிவு இறுதியானதாய் இருந்திருக்கும். ஆனால், தானியேலுக்கு கர்த்தர்மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கை ஸ்திரமானதாய் இருந்ததால், அவன் முதலாவதாகவே நேரே ராஜாவை சென்று சந்திக்கிறான். அரச சேவையிலே, அவன் வேறு யாரிடமும் செல்லவில்லை. எங்கே பிரச்சனை உள்ளதோ, எங்கே பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமோ, அங்கேயே நேரடியாக சென்று, கர்த்தரின் பெலத்தோடும், அவரில் விசுவாசத்தோடும் சென்று ராஜாவுடன் பேசுவதைக் காணலாம். கர்த்தரில் வைத்திருக்கும் விசுவாசமானது, சாதாரண மனிதர்களால் சந்திக்க முடியாத நிலைமைகளையும் நாம் சந்திக்கக்கூடியதாய் நம்மை மாற்றும்.
தானியேல், தனக்குத் தவணை கொடுக்க விண்ணப்பம் பண்ணினான்.
தானியேல் கர்த்தாரால் வழிநடத்தப்பட்டதால், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவனுக்கு கர்த்தரின் உதவி பற்றியதான ஒரு நிச்சயம் இருந்தது. ஆகையால், அவன் ராஜாவிடம் தான் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் சொல்லும்படி தனக்கு இன்னும் சில காலம் கொடுக்கும்படி கேட்கிறான். இப்படியானதொரு நிலைமையிலே, தானியேலின் எண்ணத்திலே என்ன ஓடிக்கொண்டு இருந்திருக்கும் என நான் சிந்தித்துப் பார்க்கிறேன். ஏதாவது திட்டங்கள் இருந்தனவா என்றெல்லாம் சிந்திக்க தோணுகிறது. ஆனாலும் ஒரு காரியம் தெளிவாகின்றது. தானியேல் தன்னையோ, தன்னிடத்திலிருக்கும் ஞானத்தையோ வைத்து சொல்லவில்லை. மாறாக கர்த்தரில் அவனுக்கு இருந்த உறுதியான நம்பிக்கையை வைத்தே இந்த கால அவகாசத்தை கேட்பதை நாம் உணர்கின்றோம். யார் இந்த சொப்பனத்தை அறியாவிட்டாலும் கர்த்தர் அதை நிச்சயம் அறிந்திருக்கிறார் என்பதையும், அதை அவர் நிச்சயம் வெளிப்படுத்துவார் என்பதையும் தானியேல் உறுதியாய் நம்பினான். "ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்" (நீதிமொழிகள் 21: 1) என்பதைப் போன்று, நிச்சயமாகவே ஆண்டவர் ராஜாவின் மனதை அறிந்திருக்கிறார் என்பதை தானியேல் நம்பினான். இன்று, நமது வாழ்விலும், எத்தனை விதமான கஷ்டங்கள் நம்மை சூழ்ந்தாலும், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" (சங்கீதம் 46:10) என்ற கர்த்தரின் சத்தம் நம் காதுகளில் கேட்கட்டும்.
தானியேல், தனது மனப் பாரத்தை ஜெபிக்கும் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டான்.
தானியேல், கர்த்தரில் விசுவாசமுள்ள ஒருவனாய், ராஜாவினிடம் சொப்பனத்தை விளக்க இன்னும் சில நாட்கள் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டு வீடு திரும்பியபோது, அவன் செய்த முதல் காரியம், தனது உத்தம நண்பர்களும் தனது ஜெப சகாக்களுமாயிருந்தவர்களிடம் இதற்காக ஆண்டவரின் இரக்கத்தை வேண்டிக்கொள்ளும்படி கேட்கிறான். வேதம் சொல்லுகிறபடி, "பின்பு தானியேல் தன் வீட்டுக்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக, அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்" (02:17, 18) என்பதைப் பார்க்கிறோம். இங்கேதான், தானியேலின் விசுவாச வாழ்வையும் ஜெபத்தின் மேலே அவனுக்கு இருந்த எதிர்பார்ப்பையும் உணர்கிறோம். தான் மாத்திரம் ஜெபிக்காமல், ஒருமனப்பட்டு ஜெபித்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன் நண்பர்களிடமும் இதைத் தெரியப்படுத்துகிறான். இது ஒரு பெரிய விசுவாச உதாரணமாகும். "பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்" (02: 19).
தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான்.
அனைத்தின் முடிவிலும் தானியேல் கர்த்தரை ஸ்தோத்திரிக்க மறக்கவில்லை. கர்த்தரின் பதிலும், மறைபொருளை அறிந்துவிட்டோம் என்ற பூரிப்பும், தானியேலைத் துதிப்பதிலிருந்து நிறுத்தவில்லை. தானியேல் புஸ்தகம், 2 ம் அதிகாரம், 20-23 ம் வசனங்களில், தானியேல் மகிழ்ந்து செய்த துதியின் வார்த்தைகளைக் காணலாம். சிறு காரியங்களிலும்கூட தானியேல் கர்த்தரை மகிமைப்படுத்தத் தவறவில்லை என்பதால், கர்த்தர் ஒரு பெரும் காரியத்தில் தானியேலுக்கு பதில் கொடுக்கிறார். தானியேல் நேபுகாத்நேச்சார் ராஜாவிடம் சென்று, சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் தெரிவித்ததும், "ராஜா முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான். ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான். பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான். தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மகாநகரத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்" (02: 46 - 49) என்பதை நாம் வாசிக்கிறோம்.
இன்று, நமது வாழ்வில், நமக்குப் புரியாததும், அறியாததும், விளங்காததும் நம்மை வேதனைக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கும் காரியங்களும் அதிகம் இருக்கலாம். நாம் செய்ய வேண்டியது ஒன்றே. கர்த்தரில் நம்பிக்கை வைத்து, விசுவாசத்தோடு அவரிடம் கேட்டு, அவர் வெளிப்படுத்தும்வரையும் நம்பிக்கையோடு காத்திருப்போம். அவர் நமக்கு விளங்காததை, புரியாததை வெளிப்படுத்துவார். மனிதனால் முடியாதது கர்த்தாரால் முடியும்!
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கர்த்தரின் ஆசீர்வாதம் உங்களோடு தங்கட்டும்.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
கிவ்சன் துரை அவர்களின் பாடல்
"விடை அறியா காலங்கள்🎶"