ஒரு மகதலேனா மரியாளாக வாழ்வதற்கான அழைப்பு
இன்றைய வேதாகம வசனம்
மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.
(யோவான் 20: 18)
ஒவ்வொரு உயிர்த்த ஞாயிறும் நமக்கு ஞாபகப்படுத்தும் ஒரு நபர். அந்த அதிகாலையிலே, மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும் பூங்காவிலுள்ள கல்லறையை நோக்கி விரைகின்றனர். ஆண்டவரின் உடலுக்கு சுகந்தவர்க்கமிடும்படி தைலங்களையும் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். நேற்றைய தினமே அவர்கள் ஒரு அசைக்கப்பட்ட, வெறுமையான, தெளிவுகளற்ற ஆயத்த நாளை, ஒரு சனிக்கிழமையை சந்தித்திருந்தனர். இப்படியானதொரு நம்பிக்கையற்ற, பயம் நிறைந்த, பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் தமது ஆண்டவரும், தமது போதகரும், தமது இரட்சகருமானவருக்கு தம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள். மகதலேனா மரியாளுக்கோ தன்னைப் பிசாசின் பிடியிலிருந்து மீட்டு தன் வாழ்வை முழுவதுமாய் மாற்றிய கிறிஸ்து இயேசுவுக்கு மனம் நிறைந்த நன்றியுணர்வும் இருந்தது.
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற சம்பவங்களில் மகதலேனா மரியாளின் பிரசன்னமானது கிறிஸ்தவ வாழ்வையும் ஊழியத்தையும் குறித்து மூன்று முக்கியமான படிப்பினைகளை எடுத்துரைப்பதை நான் காண்கின்றேன். மகதலேனா மரியாள், நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் தன்னுடைய விசுவாசத்திலே உறுதியாய் இருந்தாள்; அவள் உயிர்த்தெழுந்த ஆண்டவரைக் கண்டுணர்ந்து அவருடைய உயிர்த்தெழுதலுக்கு சாட்சி ஆனாள்; உயிர்த்தெழுதலின் நற்செய்தியை நம்பிக்கையிழக்கும் நிலையிலிருந்த சீஷர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்கிறாள். உயிர்த்தெழுதலின் நாளான இன்று, மகதலேனா மரியாள், ஆன்மீக வாழ்வின் சில முக்கிய படிகளை எடுத்துணர்த்தி நம் முன்னே நிற்கிறாள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத உலகத்தின் நடுவே மகதலேனா மரியாள் நிற்கிறாள் என்பதை மறவாதிருப்போம்.
நம்பிக்கையிழந்த சூழ்நிலையிலும் விசுவாசத்தில் உறுதியாயும் அர்ப்பணிப்போடும் இருப்பதற்கான ஒரு அழைப்பு.
எனது சிந்தனைகள் எல்லாமே அந்த ஆயத்த நாளான சனிக்கிழமையை நோக்கி செல்கிறது. அதுவொரு நம்பிக்கையிழந்த சனிக்கிழமை. இயேசுவின் சீஷர்களோ, அவருடன் மூன்று வருடங்கள் பயணித்து, அவர் உபதேசம் பண்ணவும், ஊழியம் செய்யவும், அற்புதங்கள் செய்யவும், அன்பையும் நிச்சயத்தையும் பகிர்ந்து கொண்டதையும் பார்த்து, கடைசியாக அவர் சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டதை கண்டும் அறிந்தும் இருந்தார்கள். இப்பொழுது இந்த தேவ பணிக்கு என்ன ஆகுவது? ஆண்டவர் இயேசு ஆரம்பித்த இந்த மாற்றத்திற்கு அடுத்து நடப்பது என்ன? யாதும் அறியாத சூழ்நிலையிலே இருந்தார்கள். இந்த எண்ணங்களும், நிச்சயமில்லாத நிலைமையும் நிறைந்திருந்த அதே சனிக்கிழமையில்தான் மகதலேனா மரியாள் "இயேசுவை வைத்திருக்கும் கல்லறைக்கு நாளை போவோம்" என்று சிந்தித்து ஆயத்தமும் பட்டிருக்கக்கூடும். கல்லறையினிடத்தில் மகதலேனா மரியாள் என்னத்தை எதிர்பார்த்தாள்? அவள் ஆண்டவரிலே வைத்திருந்த உறுதி அவளுக்கு ஏதாவது வகையிலே உதவுமா? அவளுடைய ஆண்டவர் சிலுவையிலே தொங்கி மரித்துவிட்டார் அல்லவா...? ஆனாலும், இந்த சூழ்நிலை எதுவுமே அவளை தடுக்கவில்லை. அவளுடைய மனதில் இருந்ததெல்லாம் ஆண்டவருக்கு தன்னுடைய வாழ்வின் அர்ப்பணிப்பே! இன்று, இந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு நாளிலும், உங்கள் அர்ப்பணிப்பிலே உறுதியாய் இருக்க கர்த்தர் உங்களை அழைக்கிறார். உங்களைச் சுற்றி இருக்கும் நிலைமை என்னவாக இருந்தாலும், நிச்சயமுள்ளதோ நிச்சயமற்றதோ, பிரயோஜனம் உள்ளதோ அற்றதோ, எந்த நிலையிலும், மகதலேனா மரியாள் போன்று உங்கள் விசுவாசத்தில் உறுதியாகவும் அர்ப்பணிப்போடும் இருந்து, இரட்சகராம் ஆண்டவருக்கு உங்களால் முடிந்த சேவையை செய்ய இன்று கர்த்தர் உங்களை அழைக்கிறார்.
உயிர்த்தெழுந்த ஆண்டவரை கண்டுணர்ந்து சாட்சிபகரும் வாழ்வு வாழ ஒரு அழைப்பு.
உயிர்த்தெழுந்த ஆண்டவரை முதன்முதலாக தரிசிக்கும் பேறுபெற்றிருந்தவள் மகதலேனா மரியாளே. யோவான் எழுதின சுவிசேஷம் கூறுவதாவது: "மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்" (யோவான் 20: 11-16). ஆம்! மகதலேனா மரியாள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை கண்டுணர்ந்தாள். இன்று, கர்த்தர் உங்களையும் இதற்கே அழைக்கிறார். உயிர்த்தெழுந்து ஜீவனோடு வாழும் ஆண்டவரை உணரவும், அவரோடு பேசவும், அவரோடு உறவாடவும், அவரின் மகிமையை உணரவும், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு ஒரு சாட்சியாய் இருக்கவும் ஆண்டவர் இன்று உங்களை அழைக்கிறார்.
நம்பிக்கையிழந்த உலகிலே உயிர்த்த கிறிஸ்துவை பகிர்ந்துகொள்வதற்கான ஒரு அழைப்பு.
மகதலேனா மரியாள், தான் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்டுணர்ந்த நிச்சயத்தை தன்னுள் பெருமதியானதொரு அனுபவமாய் பாதுகாத்தது மட்டுமல்லாது, இந்த உயிர்த்தெழுதலின் நற்செய்தியை பகிர்ந்துகொண்டாள். தனக்கு முன்னாக நிற்பது உயிர்த்தெழுந்த கிறிஸ்து இயேசுவே என்பதை அறிந்த அவள், மெய்மறந்து "போதகரே" என்கின்றாள். அதற்கு இயேசு அவளை நோக்கி: "என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு" என்றார். மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள் (யோவான் 20: 17, 18). இதுவே மகதலேனா மரியாளின் வாழ்வின் ஓர் பெரும் நோக்கமாய் மாறியது; உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்ணாரக் கண்டுணர்ந்ததை பகிர்ந்து கொள்வதேயாகும். இன்று, கர்த்தர் உங்களையும் அழைக்கிறார். நம்பிக்கையிழந்து இருக்கும் சூழ்நிலைகளின் மத்தியில் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் உண்மையையும் மகிமையையும் பகிர்ந்துகொள்ள அவர் அழைக்கிறார்.
ஆகையால், இந்த உயிர்த்த ஞாயிறு ஒரு பெரும் அழைப்பை நம்முன் ஞாபகப்படுத்தி நிற்கிறது. ஒரு மகதலேனா மரியாளாக வாழ்வதற்கான அழைப்பு. நம்பிக்கையிழந்த சூழ்நிலையிலும் விசுவாசத்தில் உறுதியாயும் அர்ப்பணிப்போடும் இருப்பதற்கும், உயிர்த்தெழுந்த ஆண்டவரை கண்டுணர்ந்து சாட்சிபகரும் வாழ்வு வாழவும், நம்பிக்கையிழந்த உலகிலே உயிர்த்த கிறிஸ்துவை பகிர்ந்துகொள்வதற்குமான ஒரு அழைப்பு. இந்த அழைப்பை உணர்ந்து கர்த்தரின் ஊழியத்தை தொடருவோமாக.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உயிர்த்தெழுந்த ஞாயிறு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
கர்த்தரின் ஆசீர்வாதம் உங்களோடு தங்கட்டும்.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வரிகள்:
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந் துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரியா மக்தலேனா
நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்'.
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்.
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்.
கிருபாவதி டானியேல் அவர்களின் பாடல்
சிம்றா பாடல் குழுவினருடன் சேர்ந்து
"ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் 🎶"