துன்பத்தினூடாக ஆண்டவரின் ஆறுதல்
இன்றைய வேதாகம வசனம்
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
(சங்கீதம் 23: 04)
துன்பங்கள் நமது வாழ்வில் சடுதியாகவும் நாம் அவற்றை எதிர்கொள்ள ஆயத்தமில்லாது இருக்கும் தருணங்களிலும் ஏற்படுகின்றன. நமது எண்ணங்கள் எல்லாம் அந்த துன்ப நிலைமையோடு ஈடுகொடுக்கமுடியாது தவிக்கும். நமது மனநிலை தகன்றுபோய்விடும். எதிர்காலத்தைக் குறித்த நமது கனவுகள் எல்லாம் மங்கிப்போய்விடும். வாழ்க்கை என்னும் ஓடுபாதையிலே நேரே சென்றுகொண்டிருந்த நமது பயணம் மெதுவாக அலைக்களிக்கப்பட ஆரம்பிக்கும். துன்பத்தினூடாக நாம் செல்லும் அதிகமான வேளைகளிலே "இந்த துன்பத்தின் பாதைக்கு ஒரு முடிவு உண்டா?" என்றும், "இந்த இருள் என்னத்தில் சென்று முடியும்?" என்றும் நாம் கேட்பதுண்டு.
இப்படியான நேரங்களில் நாம் மறந்துவிடாது நினைவில் வைக்கவேண்டிய ஒரு உண்மை என்னவெனில், வேதம் நமக்கு கற்றுத்தரும் ஆண்டவரின் மாறாத பிரசன்னத்தையே. நம்மைத் தேற்றும் நமது ஆண்டவர் நமது வாழ்வின் மிகக் கஷ்டமானதும் துன்பமானதுமான காலங்களில் நம்மோடு சேர்ந்து நடக்கின்றார் என்பதையும், அவர் நம்மைத் தேற்றுவதை நாம் அனுபவரீதியாக உணரமுடியும் என்பதையும் நாம் ஒருபோதும் மறக்க முடியாது. நாம் துன்பமான சில நாட்களுக்கூடாக கடந்து வந்து, அவற்றைத் தாண்டிய பின்னரே, நாம் அவற்றின் ஆழங்களை அறிந்து, "என் கடவுளே, நான் இதை எப்படித் தாண்டினேன்? எப்படி இதனைக் கடந்தேன்? இது எப்படி சாத்தியமானது? உம்முடைய பிரசன்னம் என்னுடன் இல்லாது நான் இதைத் தனியே கடந்திருக்கமாட்டேன் என்பது நிச்சயம்" என்று நாம் சொல்வதுண்டு. ஆம், அதன் பின்பு, ஒவ்வொன்றாக நாம் நடந்தவற்றைப் புரிந்துகொள்ளும் நாட்கள் வரும்போதே, நம்மை நமது ஆண்டவரே கடந்து வந்த துன்பங்கள், இழப்புக்கள், குழப்பங்கள், அதிர்ச்சிகள், இயலாமைகள், பலவீனங்கள், திடீர் சூழ்நிலைகள் மற்றும் அநேக தாங்க முடியாத நிலைமைகளுக்கூடாக சுமந்து வந்தார், நம்மோடுகூட நடந்தார், நம்மைப் பாதுகாத்தார் என்பதை அறிந்துகொள்கின்றோம்.
இக்கட்டான சூழ்நிலைகளின் பாதையின் முடிவில், என்றோ ஒரு நாள், இவ்வாறான துன்பங்களின் காலங்களில், ஆண்டவர் நம்மை அந்த நிலைமைகளுக்கூடாக இலகுவாக கடந்து செல்ல, ஒரு தட்டில் வழுக்கிக்கொண்டு செல்வதைப்போல, நம்மை ஆண்டவர் கடந்துவரப்பண்ணினார் என்பதை அறிவோம். கர்த்தரே நம் காரியங்களை நம் சார்பாக நின்று நடாத்தி வைத்தார் என்பதையும் நாம் அறிகிறோம். கர்த்தர் நம் வாழ்வில் நம்மோடு இருப்பதன் தாற்பரியத்தையும், அவர் நம்மோடு சேர்ந்து நடப்பதன் மகிமையையும் நாம் அறிந்துகொள்கிறோம். இந்த அறிதலானது, எதிர்வரும் காரியங்கள் எல்லாவற்றிலும் கர்த்தரின் "ஆம்" என்ற தலையசைவை நாம் எதிர்பார்த்து, அதன்பின்பே காலடி எடுத்து வைக்கும் வழக்கத்திற்கு எம்மை மாற்றுகிறது. நமது சுய புத்தியின்மேல் சாயாமல், ஆண்டவரில் நாம் எல்லாவற்றிற்காகவும் தங்கியிருக்கும் தன்மையை நம்மில் இந்த அறிதல் வளர்த்துவிடும். இதன் பதிலாக, ஆண்டவருக்கும் நமக்கும் ஒரு நெருக்கமானதும் நாள்தோறும் வளர்ந்துகொண்டிருப்பதுமான ஒரு புதிய உறவு உண்டாகுவதை நாம் உணரலாம். நெருக்கமானதும், சார்ந்திருத்தலானதும், அழகானதுமான ஒரு உறவு!
23ம் சங்கீதம் என்பது நம்மில் அநேகருக்கு மிகவும் பரிச்சயமான ஒரு சங்கீதமாகும். நம்மில் அநேகர் முதலாவது மனனம் செய்து கற்றுக்கொண்ட ஒரு வேத வசனமும் அதுவாகும். நாம் அறிந்தும் அறியாமலும், இந்த சங்கீதமானது நம்மில் அநேகரோடு வாழ்நாள் முழுவதும் பயணித்ததொன்றாகும். நமது வாழ்வின் வெவ்வேறு படிகள், காலங்கள் ஊடாக இந்த சங்கீதம் விளங்கிக்கொள்ளப்படுவதும், மீள் வாசிக்கப்படுவதும் இன்றியமையாததாகும்.
தாவீதின் இந்த சங்கீதத்திலிருந்து 'துன்பங்கள் நம்மை ஆண்டவருக்கு அருகிலே கொண்டுசெல்பவை' என்ற உண்மையை எடுத்துக் காட்டும் ஒரு சங்கீதமாகும். உலகில் அநேகர் தங்கள் அனுபவத்தினூடாக அறிந்து கொண்ட இந்த உண்மையை இந்த சங்கீதத்திலும் நாம் வாசித்து உணரலாம். துன்பங்கள், ஒரு விசுவாசியை ஆண்டவரிடத்திலிருந்து தூர அனுப்புபவையாக அல்லாது, மாறாக, அநேகரின் ஆச்சரியத்தின் மத்தியில், ஆண்டவருக்கு அருகிலே கொண்டுவருபவையாய் இருக்கின்றன! துன்பங்களின் காலங்கள் கடப்பதற்கு கஷ்டமானவையாக இருந்தாலும், அவைகள் ஆண்டவரிலே முழுவதுமாக சார்ந்து, அவரிலேயே தங்கியிருந்து கடந்த வேளைகள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஆகையால், இப்படியான துன்பத்தின் காலங்களில், நாம் கைகொடுக்கும் துணைநிற்கும் என நம்பியிருந்த காரியங்கள் நம்மைச்சுற்றி இல்லாதவிடத்து, நமது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மாறாத கன்மலையும் நம் ஆண்டவர் ஒருவரே என்ற அறிதல் நமக்குள்ளே உண்டாகின்றது. கடைசிவரை நீடிக்கும் ஒரேயொரு உறவு இதுவொன்றே என்ற உண்மையும் நமக்குப் புரிகிறது. இந்த அறிதலும் உணர்தலும் புரிதலுமே ஆண்டவரோடு நாம் ஒரு புதிய உறவைக் கட்டியெழுப்புவதற்கு மூலைக்குத் தலைக்கல் ஆகின்றது.
23ம் சங்கீதத்தின் முதல் மூன்று வசனங்களையும் நாம் வாசிப்போமானால் (1-3), தாவீது ஆண்டவரை, "கர்த்தர்" , "அவர்", "தம்முடைய" என்ற வார்த்தைகளைப் பாவித்து குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்... அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றார்... அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்... அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்... தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்..." என்று எழுதுவதைப் பார்க்கின்றோம். ஆனாலும், அடுத்த வசனங்களில், தனது துன்பத்தின் காலங்களை நினைவுகூர்ந்து, மரண பள்ளத்தாக்குகளிலும் பொல்லாத பயங்கரங்களிலும் ஆண்டவர் தன்னைத் தாங்கியதை நினைந்து எழுதும்போது சடுதியாக தாவீதிலே தன்னை மறந்து ஆண்டவரோடு இருக்கும் அந்த நெருக்கத்தை மனதில் உணர்ந்து எழுதுவதைக் காண்கிறோம். 4ம் 5ம் வசனங்களில், தாவீது "தேவரீர்", "உமது", "நீர்" என்ற வார்த்தைகளைப் பாவிப்பதைப் பார்க்கிறோம். "தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்... உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்... என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்..." என்ற வசனங்களை வாசிக்கின்றோம். பயம், சத்துரு, மரணம் என்ற பொல்லாத உணர்வுகளும் நினைவுகளும் வந்தவுடன், தாவீது உடனே கர்த்தர் தன்னைத் தாங்கியதை நினைவுகூர்ந்தது மட்டுமல்லாது, தான் கர்த்தரோடு கொண்டுள்ள நெருக்கத்தையும், துன்பங்களுக்கூடாக வளர்ந்த இந்த நெருக்கமான உறவையும் நினைத்து, தனது சங்கீதத்திலே அதனை வெளிப்படுத்துவதைக் காண்கின்றோம். ஒவ்வொரு துன்பங்களின் காலங்களின் முடிவிலும் தாவீதுக்கும் ஆண்டவருக்கும் இடையிலான உறவானது, நெருக்கமானதும், சார்ந்திருத்தலானதும், அழகானதுமான ஒரு உறவாக மாறியதையும், அந்த உறவு மேலும் வலுப்பெறுவதையும் நாம் உணர்கின்றோம். இதுவே ஆண்டவரில் நாம் காணும் ஆறுதல். இந்த உறவே, "துன்பத்தினூடே நாம் காணும் சொல்லி முடியாத ஆறுதல் கிருபை என்பதாகும்."
இன்று, இதை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்களும், துன்பமான, இக்கட்டான, குழப்பமான, தோல்விகள் பயங்கள் நிறைந்த, இழப்புகள் சூழ்ந்த நிலைகளுக்கூடாக சென்றுகொண்டிருக்கலாம். இன்றைக்கு உங்கள் மத்தியில் கர்த்தரின் ஆறுதல் என்னும் நிச்சயத்தை நான் வைத்து உங்களை விசுவாசத்தில் தளராது இருக்க நான் ஊக்குவிக்க விரும்புகின்றேன். கர்த்தரே நம் மேய்ப்பர்! அவரின் மந்தையில் ஆடுகளாய் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு மேய்ப்பர் இருக்கிறார் என்பதை ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்த அழைக்கப்பட்டிருக்கின்றோம். பயப்படவேண்டாம். கலங்கவேண்டாம். நம் மேய்ப்பராம் கர்த்தர் உங்களோடு சேர்ந்து நடப்பார். கர்த்தரின் பிரசன்னம் உங்களை சூழ்ந்துகொண்டு நீங்கள் கடக்கும் கஷ்டமான பாதையை உங்களோடு சேர்ந்து கர்த்தர் நடப்பார். அதை நீங்கள் இப்போது உணராவிட்டாலும், இந்த கஷ்டங்களைத் தாண்டி முடித்த பின்னர், கர்த்தரின் கைவிடாத கரமே என்னைத் தாங்கி தூக்கி வந்திருக்கிறது என்பதை உணருவீர்கள். கர்த்தரின் தேற்றுதல் உங்கள் வாழ்வில் அவ்வளவாக நிறைந்து இருந்ததையும், இந்த காலங்களுக்கூடாக ஆண்டவரோடு உங்களுக்கு இருக்கும் உறவானது நெருக்கமானதும், முழுவதும் சார்ந்திருத்தலானதும், அழகானதுமான ஒரு உறவாக மாறியதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இதை உணர்ந்தே, தாவீது, "உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்..." என்று பாடுவதை நாம் காண்கிறோம். இன்றும் கர்த்தரின் கோலும் தடியும் உங்களை வழி விலகாது தேற்றும். கர்த்தரை நம்புங்கள், அவர் உங்களைத் தேற்றுவார்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
"சோர்ந்து போகாதே மனமே🎶"
ஹரால்ட் சத்தியசீலன்