நமக்கு அழைப்பு விடுக்கும் ஆண்டவர்.
கடந்த 12 வருடங்களாக கடவுளின் உதவியோடு எழுதி வந்த WEEKLY DEVOTIONS WITH EBENEZER என்ற இந்த வாரந்தோறும் தியானங்களை இவ்வாரத்திலிருந்து தமிழிலும் வெளியிட கடவுள் உதவியிருக்கிறார். இத்தியானங்களை தமிழிலும் வெளியிடும்படி கடந்த சில வருடங்களாக என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி. இந்த எழுத்து ஊழியத்தை தொடர்ந்தும் உங்கள் ஜெபத்தில் தாங்கவும்.
"வாருங்கள்"
(மத்தேயு 11: 28)
(மாற்கு 6: 31)
(யோவான் 21:12)
கர்த்தரின் அழைப்பின் சத்தங்களில் ஆதியானதொரு சத்தம் பெருவெள்ளத்தின் பின் உண்டானது. அத்தனை அழிவுகள், குழப்பங்கள், சுத்திகரிப்பு, புதுப்பித்தல், மற்றும் புது வாழ்விற்கான ஒரு நிச்சயம் என்பவற்றிற்கு பின்பு கர்த்தர் நோவாவை நோக்கி "நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்" (வெளியே வாருங்கள்) (ஆதியாகமம் 8: 16) என்று சொல்லி அழைக்கிறார். மனித வரலாற்றில், சற்று பின்னர், ஆண்டவர் மோசேயைப் பார்த்து "நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன்" (யாத்திராகமம் 24: 12) என்று அழைப்பதைக் காண்கிறோம். இதன் பின்னர், ஏசாயாவின் தீர்க்கதரிசன அதிகாரங்களில் "ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்" (ஏசாயா 55:1) என்று கர்த்தர் அழைக்கிறார். தொடர்ந்து, கர்த்தர் "உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்" (ஏசாயா 55:3) என்று அழைப்பு விடுப்பதை அறிகிறோம். இப்படியாக தொடரும் இந்த "வாருங்கள்" என்ற தேவ அழைப்பு மனித வரலாற்றில் தொடர்வதையே காண்கிறோம்.
தேவ குமாரனாகிய, மேசியா, இயேசுக் கிறிஸ்துவும் இதனையே தன் நாட்களிலே தொடர்ந்தார். கலிலேயாக் கடலோரமாய் நின்ற மீன்பிடிக்கிறவார்களைப் பார்த்து இயேசு "என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்" (மத்தேயு 4:19). களைத்துப்போயிருந்த தன்னுடைய சீஷரைப் பார்த்து "வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்" (மாற்கு 6:31). கஷ்டப்பட்ட நிலைமையில் வாழ்ந்த அனேகருக்கு கிறிஸ்துவின் அழைப்பு "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28). இயேசுவைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையோடு மரத்தில் ஏறி மௌனமாய் அமர்ந்துகொண்ட சகேயுவைப்பார்த்து "சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்" (லூக்கா 19:5). நான்கு நாட்களாக கல்லறையில் வைக்கப்பட்டிருந்த இறந்துபோன உடலைப் பார்த்து, "லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்" (யோவான் 11:43). இயேசு பேதுருவைப் பார்த்து "வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான்" (மத்தேயு 14:29). "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" (லூக்கா 18:16) என்றார். இதே போன்றே, தனது உயிர்த்தெழுதலின் பின்னர், கலிலேயாக் கடலோரமாய் தனது சீஷர்களுக்குத் தோன்றி, "வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார்" (யோவான் 21:12). இப்படியாக, தேவனிடத்திலிருந்து நமக்கு எப்போதுமே ஒரு அழைப்பு விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எவ்வளவு ஒரு அன்பான, ஏற்றுக்கொள்ளும் தன்மையுடைய, வாழ்வின் வெவ்வேறு நேரங்களிலும் தன்னுடைய குடும்பத்தில் ஒரு பங்காக இருந்து, தன்னோடு ஒரு உறவை வைத்திருக்கும்படி அழைக்கும் கடவுளை நாம் வணங்குகிறோம். கர்த்தரின் இவ்வழைப்பானது, நமது நிறம், குணம், சமூக அந்தஸ்து, ஆவிக்குரிய நிலமை என்பவற்றையெல்லாம் தாண்டி, அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. தன்னுடைய இரண்டு கரங்களையும் அகல விரித்து தன்னுடைய மகிமையிலே ஒரு பங்காவதற்கு "வா" என்று அழைக்கும் ஆண்டவரைக் காண்கிறோம். அவருடைய பிள்ளைகளாய், அவரின் மகிமையிலே பங்குபெற நம்மை அழைக்கின்றார். நாம் இப்போது உள்ளவாரே அவரிடம் வரும்படி அவரின் அழைப்பு விடுக்கப்படுகிறது. எம்மிடத்தில் எந்த வித மாற்றங்களையோ, மேம்படுத்தல்களையோ செய்துவிட்டு அவரிடம் வரும்படி கர்த்தர் அழைக்கவில்லை. தேவை ஒன்றே. ஆண்டவரிடத்தில், ஒரு சமர்ப்பணத்தோடும் அர்ப்பணிப்போடுமான உள்ளத்தோடு வருவதை மட்டுமே அவர் எதிர்பார்க்கிறார், மற்றவையெல்லாம் கர்த்தர் பார்த்துக்கொள்வார். கடவுளின் அழைப்பு நமக்கு எப்போதும் உள்ளது.
தன்னை நேசிக்கும்படி, பணிந்துகொள்ளும்படி, ஆராதிக்கும்படி, தனக்குப் பணிசெய்யும்படி ஆண்டவர் அழைக்கிறார். நோவாவைப் போல முன்னோடிகளாகவும், மோசேயைப் போல தலைவர்களாகவும் இருக்க ஆண்டவர் நம்மை அழைக்கிறார். நமது தாகம் தீர்த்து நமது பசியை போக்க அவர் அழைக்கிறார் (ஏசாயா 55:1). நாம் அவரித்தில் செல்லவும், அவரிடத்தில் வாழ்வைக் கண்டடையவும், அவர் நம்மோடு ஒரு உடன்படிக்கையைப் பண்ணவும் அழைக்கிறார் (ஏசாயா 55:5). இயேசுக் கிறிஸ்துவும் இதே விருப்பத்தையும் நம்மைத் திரித்துவ ஒன்றியத்துக்குள் அழைக்கும் ஆவலையும் நம்முடன் பகிர்கிறார். நாம் கடவுளின் பணியில் ஒரு அங்கமாயிருந்து மனுஷரைப் பிடிக்கிறவர்களாக இருக்க (மத்தேயு 4:19), ஆறுதல் அடைய (மாற்கு 6:31, மத்தேயு 11:28), சகேயுவின் வீட்டைப்போல் நமது வீட்டுக்கு இரட்சிப்பு வர (லூக்கா 19:9), பழைய, உயிரற்ற வாழ்விலிருந்து லாசருவைப் போல உயிர்பெற (யோவான் 11:43), பேதுரு தண்ணீர் மேலே நடந்ததைப் போல கண்முன் அதிசயங்கள் காண, உணர (மத்தேயு 14:29), ஒரு சிறுபிள்ளைபோல் நீ ஏற்றுக்கொள்ளப்பட (லூக்கா 18:16), உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை முகமுகமாய் தரிசித்து அவரின் உயிர்தெழுதலுக்கு சாட்சியாய் நிற்க (யோவான் 21:12) ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
இன்று, இதை வாசித்துக்கொண்டு இருக்கும் உங்கள் வாழ்வில், காரியங்கள் தொலைவிலும், நிலைமைகள் கட்டுப்பாடு இழந்தும், அடைக்கலம் கண்ணெட்டும் தூரத்தில் இல்லை என்றும் இருக்கும் ஒரு நிலைமை இருக்கலாம். ஆனாலும், "வாருங்கள்" என்று அழைக்கும் கர்த்தரின் மெல்லிய சத்தம் நம் இருதயங்களில் எப்போதும் கேட்டுக்கொண்டு இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. வெறுப்புக்குப் பதிலாக அன்பையும், சுட்டிக்காட்டுதலுக்கு மேலாக மன்னிப்பையும், நிராகரிப்புக்கு பதிலாக ஏற்றுக்கொள்ளுதலையும் தெரிந்தெடுக்கும் ஒன்றியமாம் நம் பரலோக தகப்பனின் குடும்பத்தில் சேரும்படி கிறிஸ்து இயேசு நம்மை அழைக்கிறார். இரு கரம் விரித்து நம்மை அவர் அழைக்கிறார். வாருங்கள்! இன்றே அவர் பிரசன்னத்துக்குள் ஓடி வாருங்கள். உங்களை சமர்ப்பணம் செய்யுங்கள். உங்களைக் கவலையடையச்செய்யும் வாழ்வின் பகுதிகளை கர்த்தரிடம் கொடுங்கள். தேவனின் சாயலில் வாழவும், வளரவும் உங்களை அர்ப்பணியுங்கள். நீங்கள் செய்யவேண்டியது இதுவொன்றே. மற்றையதெல்லாம் கர்த்தர் பார்த்துக்கொள்வார். கிறிஸ்து இன்று நம்மை அழைக்கிறார். தேவையானதோ, தீர்மானமும், எழுதலும், அவரிடத்தில் ஒடுதலுமே. தேவன் நம்மை அரவணைக்க காத்திருக்கிறார்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து நாம் அவரிடத்தில் வரவும், அவரின் மகிமையிலே பங்கெடுக்கவும் நம்மை வழிநடத்துவதாக.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
"இயேசு அழைக்கிறார்"
by Ben Samuel