தாழ்மையும் கீழ்ப்படிவுமுள்ள மனிதனாகிய கிறிஸ்து இயேசு
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு,
மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
(பிலிப்பியர் 2: 8)
சிலருக்கு, அவர் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து; மற்றவர்களுக்கு அவர் மனிதனாகிய இயேசு கிறிஸ்து. ஆனாலும் அவரில் விசுவாசம் வைத்துள்ள நமக்கோ அவர் இரண்டுமே ஆவார். அடையாளம் காணக்கூடியதும் உணரக்கூடியதுமான இரண்டுமாக அவர் இருக்கின்றார். கிறிஸ்து நம்முள் வாழ்ந்தார் , நமது குழப்பங்களின் மத்தியில் பணி செய்தார், சரியான வழியைப் பற்றி பேசினார், அவரே அவ் வழியாக இருந்தார். உலகம் ஒரு காலம் கண்டுகொண்டதும், தொடர்ந்து கண்டுகொண்டும் இருக்கும் இயேசு கிறிஸ்து என்னும் மகத்தான பிரசன்னத்திலே நாம் ஒரு இரட்சகரையும் மனிதனையும் நிறைவாகக் காண்கின்றோம்.
ஒரு கணம் தரித்து நின்று உண்மையை உணர்ந்துகொள்வோமா? படைப்பின் காரணராகிய ஆண்டவர், தானும் தனது படைப்பின் ஒரு பங்காக ஆகும்பொருட்டு தன்னைத் தாழ்த்தியவராய் அவர் இருக்கின்றார். கடவுள் மனிதனானார்! இந்த உண்மை நம்மை வியப்படையச்செய்கின்றது. இயேசுவின் வாழ்வையும் பணியையும் நாம் கவனமாகக் கவனிக்கும்போது, கடவுளின் மகனாகிய கிறிஸ்து அவரது அழைப்பை ஏற்று சிலுவை பரியந்தமும் கீழ்ப்படிந்தவராய் வாழ்ந்ததை நாம் காண்கின்றோம். அவர் மனிதனாக, நமது இரத்தமும் உடலுமாக வாழ்ந்து, நாம் எதிர்நோக்கும் அதே மனித சவால்களுக்கு தானும் ஒரு இலக்காக வாழ்ந்தும், ஒருபோதும் ஒரு பாவமும் செய்யாது வாழ்ந்தார்! ஆனாலும், தனக்குள் அடங்கியிருக்கும் தெய்வீகத்தையும் வல்லமையையும் அவர் ஒருபோதும் பெருமைக்குரியதாய் எண்ணாமலும் பயன்படுத்தாமலும், தாழ்மையோடும் கீழ்ப்படிவோடும் இப்பூவில் வாழ்ந்தார்.
கிறிஸ்துவின் விசுவாசிகளாய், நாமும் கிறிஸ்துவின் தாழ்மையை பிரதிபலிக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம். பிலிப்பியர் 2ம் அதிகாரத்தில், அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பிய சபையினரைத் தமது உறவுகள் எல்லாவற்றிலும் கிறிஸ்துவின் தாழ்மையை தமது சாயலாக்க ஊக்கப்படுத்துவதை நாம் காணலாம். பவுல் சொல்வதாவது,
"ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக" (பிலிப்பியர் 02: 01-04).
இதுவோர் மகத்தான தேவ ஊக்கப்படுத்துதல் ஆகும். ஒரே சிந்தையும், ஒரே அன்பும் உடையவர்களாய் இருந்து, எண்ணத்திலும் ஆவியிலும் ஒருமையைக் கடைப்பிடித்து, தன்னலத்தினால் அல்லாது தாழ்மையினால் அனைத்தும் செய்து, ஒருவரையொருவர் மெச்சிக்கொண்டு, தனக்கானவைகளை மட்டுமல்லாமல் பிறருக்கானவைகளையும் மனதில் வைத்து வாழ்வதற்கான ஒரு ஊக்கப்படுத்துதல் ஆகும். இந்த வார்த்தைகளின் மத்தியிலேதான் பவுலும் கிறிஸ்துவின் தாழ்மையை அடையாளம் காண்பதை நாம் உணரலாம். பிலிப்பியர் 02: 06 - 08ம் வசனங்களில் பவுல், "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்" என்பதை உணர்த்தி நிற்பதை காணலாம். பவுல் தொடர்ந்து இது பற்றி விளக்குகையில், இயேசு கிறிஸ்து ஒரு மனிதனாய் உலகில் பிறக்கும் அளவுக்கு தன்னைத் தாழ்த்தினது மட்டுமன்றி, இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலும் தம்மை சிலுவை பரியந்தம் தாழ்த்தி ஒரு குற்றவாளியைப்போல் சிலுவையில் மரணிக்கும் அளவுக்கு தாழ்மையுள்ளவராய் இருந்தார் என்பதைக் குறிப்பதைக் காணலாம். கிறிஸ்து இயேசு பரலோகிலும் பூவுலகிலும் தன்னைத் தாழ்த்துவதற்கு ஆயத்தமாய் இருந்தார்!
பவுல், இவ்விடத்திலே, இரண்டு முக்கிய குறிப்புகளை தருவதை நாம் அவதானிக்கலாம். இன்னுமொரு விதத்தில், இவையே கிறிஸ்துவின் தியாக அன்பின் காரணிகளாய் இருந்தன என்றும் சொல்லமுடியும். ஒன்று தாழ்மை, மற்றது கீழ்ப்படிவு. ஒரு கட்டத்தில் பவுல், "தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்" (பிலிப்பியர் 02: 07) என்று கிறிஸ்துவின் தாழ்மையைக் அடையாளம் காட்டுவதோடு, "அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்" (02: 08) என்றும் கிறிஸ்துவின் கீழ்ப்படிவை உணர்த்துவதை அவதானிக்கலாம். கிறிஸ்துவின் விசுவாசிகளாக, இவ்விரண்டு முக்கிய விடயங்களையும் நாம் மனதில் கொள்ளவும், தாழ்மை மற்றும் கீழ்ப்படிவு ஆகிய இவ்விரண்டும் எவ்வாறு கிறிஸ்துவை இன்று நாம் ஆராதிக்கும் தேவனாக உலக இரட்சகராக அவரை நாம் கண்டுகொள்ள வழியமைத்தன என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள இவ்வசனங்களால் வழிநடத்தப்படுகின்றோம்.
இன்று நமக்கு ஒரு மிகவும் தெளிவானதொரு அழைப்பு உள்ளது. இன்றும் நாம் தனிமனிதர்களாய் திருச்சபையாய் தொடரும் பணியிலே, நாமும் கிறிஸ்துவின் சாயலுடையவர்களாய், கிறிஸ்து இயேசுவில் நாம் கண்டுகொள்ளும் தாழ்மை மற்றும் கீழ்ப்படிவு ஆகிய இந்த இரண்டு பெறுமதிமிக்க இயல்புகளை உடைய பிள்ளைகளாய் வாழ அழைக்கப்படுகின்றோம்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் பி. வீரசிங்கம்
"உம் நாமம் சொல்ல சொல்ல"
by Benny Joshua










