உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால்

இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.

- உபாகமம் 28: 1 - 3 -

இன்றைய தியானத்தின் ஒலிவடிவத்தை 
YouTube இல் கேட்க


கடந்த வாரம் எனக்கு மிகவும் மும்முரமான, அதேசமயம் சுவாரஸ்யமான வாரமாக அமைந்தது. பல்கலையில் முதலாம் ஆண்டு இளமானி மாணவர்களுக்கு, ஆங்கில கவிதை நுணுக்கங்களையும் இலக்கிய உத்திகளையும் கற்பித்துக் கொண்டிருந்தேன். அவர்களுக்குப் புரியவைப்பதற்குச் சற்றே கடினமான சில கவிதைகளை நாங்கள் அணுகினோம். அதில் ஒன்று ருட்யார்ட் கிப்ளிங்கின் "If" (ஒருவேளை) என்ற கவிதை. அந்தக் கவிதையில் வரும் ஒவ்வொரு 'If" என்ற சொல்லும், கவிதையின் இறுதியில் எழுதப்படாத ஒரு 'Then' (அப்படியானால்) என்ற முடிவிற்கு எப்படி வலுசேர்க்கிறது என்பதை மாணவர்களுக்குப் புரியவைக்க நான் சற்றே சிரமப்பட்டேன். 'If' என்று தொடங்கும் ஒவ்வொரு வலிமையான ஆரம்பமும், அதன் இறுதியில் 'Then' என்ற ஒரு வாக்குத்தத்தத்தைக் கொண்டிருக்கிறது. அந்தத் தத்துவார்த்தமான சிந்தனை மாணவர்களை மட்டுமன்றி, என்னையும் மீண்டும் ஒருமுறை 'If' என்ற சொல்லின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டியது.

இது காரணமும் காரியமும் போன்றது. நிபந்தனையும் அதன் விளைவும், தகுதியும் அதற்கான பலனும், உடன்படிக்கையும் அதன் அங்கீகாரமும், அழைப்பும் அதற்கான பதிலும் ஆகும். நான் இதனை வகுப்பறையில் கற்பித்துக் கொண்டிருந்தபோது, ஒரு மூலையில் சேர்  ஐசக் நியூட்டன் தனது மூன்றாவது விதியுடன் புன்னகைப்பதைப் போலத் தெரிந்தது; ஆனால்,அதையும் தாண்டி, இயேசு கிறிஸ்து தனது கிருபை எனும் ஈவுடன் அங்கே நிற்பதையும் உணரலாம்!

உபாகமம் 28-ஆம் அதிகாரம் முழுவதுமே நிபந்தனைக்குட்பட்ட வாக்குத்தத்தங்களால் நிறைந்துள்ளது. இது ஒரு மாபெரும் 'If' (எனில்) என்ற சொல்லுடன் தொடங்கி, கர்த்தருக்கு முழுமையாய்க் கீழ்ப்படிகிறவர்களுக்கு அவர் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களின் வாக்குத்தத்தங்களைப் பட்டியலிடுகிறது. பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் என்ற இரண்டு துருவ எல்லைகளுக்குட்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களையும் இது உறுதிப்படுத்துகிறது.

இந்த அதிகாரத்தில் உள்ள ஆசீர்வாதங்களை நாம் இவ்வாறு வகைப்படுத்தலாம்: பொதுவான மற்றும் இடஞ்சார்ந்த ஆசீர்வாதங்கள் (வசனங்கள் 3, 6), தனிப்பட்ட மற்றும் குடும்ப ஆசீர்வாதங்கள் (வசனம் 4), பொருளாதார மற்றும் வாழ்வாதார ஆசீர்வாதங்கள் (வசனங்கள் 5, 8, 12), தேசிய மற்றும் பாதுகாப்பு ஆசீர்வாதங்கள் (வசனங்கள் 1, 7, 10), ஆவிக்குரிய மற்றும் அந்தஸ்து ரீதியான ஆசீர்வாதங்கள் (வசனங்கள் 9, 13, 14). முதல் 14 வசனங்கள் கீழ்ப்படிதலுக்கான ஆசீர்வாதங்களைப் பற்றிக் கூறினாலும், இந்த அதிகாரத்தின் பெரும் பகுதி (வசனம் 15 முதல் 68 வரை) கீழ்ப்படியாமையினால் வரும் சாபங்களைப் பட்டியலிடுகிறது.

ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நாம் வாசிக்கும்போது, முதல் வசனத்தின் ஆரம்ப வரிகள் ஒரு அழைப்பையும் அர்ப்பணிப்பையும் நம் காதுகளில் ஒலிக்கச் செய்கின்றன.

இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால்" (உபாகமம் 28:1-a) என்று கூறுகின்றது. இதைத் தொடர்ந்து வரும் ஆசீர்வாதங்களின் பட்டியல், தேவன் தம் பிள்ளைகளுக்காக வைத்திருக்கும் உன்னதமான மற்றும் பூரணமான திட்டத்தைப் பறைசாற்றுகின்றன. அந்த 'If' (செவிகொடுப்பாயானால்) என்ற அழைப்பு, உடனே 'Then' (அப்பொழுது) என்ற வாக்குத்தத்தத்துடன் முடிகிறது: "...உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்." (வசனம் 1-b). இந்த நிபந்தனைக்குட்பட்ட வாக்குத்தத்தம் அடுத்த வசனத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது: உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும் (வசனம் 2). இங்கே வசனங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்துவது ஒன்றைத்தான்: கீழ்ப்படியுங்கள், முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். "நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்" (வசனம் 3). என்ற இந்த வாக்குத்தத்தம், நீங்கள் எங்கே சென்றாலும், உங்கள் தொழில் எதுவாக இருந்தாலும், தேவனுடைய தயவு உங்கள் மேல் மாறாமல் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

இன்று கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் அழைப்பும் வாக்குத்தத்தமும் இதுவே: அவருக்குக் கீழ்ப்படியுங்கள். முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். விசுவாசிகளாகிய நம் வாழ்வில் இதுவே மிக முக்கியமானது—சந்தேகமற்ற கீழ்ப்படிதல். இதுவே கர்த்தர் வாக்குத்தத்தம் செய்த ஆசீர்வாதங்களை நோக்கி நம்மை வழிநடத்தும். இது ஒரு உடன்படிக்கையின் உறவு (Covenant relationship); கர்த்தர் உங்களை இந்த அன்பிற்குள் அணைத்துக்கொள்கிறார். கர்த்தரை நம்புங்கள். அவருக்கு முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள். அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுங்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட எல்லா ஆசீர்வாதங்களும் உங்கள் மேல் வந்து உங்களைப் பின்தொடரும்.

நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக்  கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக. ஆமேன்.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் பிறேமன் வீரசிங்கம்



"உம்மையே நம்பியுள்ளேன்🎶"
Pastor Jebamani & Sister Vinodhini


Click & Follow

The Weekly Devotions WhatsApp Channel

for Regular Updates



Click & Follow 
The Weekly Devotions YouTube Channel
for Regular Updates on Audio Versions






Topics Popular Among the Readers