கர்த்தர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்
இன்றைய வேதாகம வசனம்
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
(நீதிமொழிகள் 03: 5, 6)
வாழ்வின் சில தருணங்களிலே நாம் தரித்து நின்று "நான் எங்கே சென்றுகொண்டிருக்கிறேன்?" என்று கேட்பதுண்டு. சில நேரங்களில் நாம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கின்றோமா என்று நினைத்து நாம் பயப்படுவதுமுண்டு. நமக்கு எதிரே, நாம் பயணிக்கவேண்டிய பாதையானது கரடுமுரடானதும், குழப்பமானதும், நேரற்றதும், நம்மைக் கவலைக்கு உள்ளாக்குகின்றதுமான ஒன்றாக இருக்கக்கூடும். எதிரே பாதை இரண்டு மூன்று பாதையாக பிரியும் சந்தர்ப்பங்கள் நெருங்கும்போது எது சரியானது என்றுகூட முடிவெடுக்கமுடியாது நாம் தவறுவதுண்டு. அதுபோன்றே, சில வேளைகளில் சில பயங்களினால் பாதையில் முன்னோக்கிப் பயணிக்கத் துணிவில்லாமல் நாம் ஓரிடத்தில் தரித்து நிற்பதுண்டு. நாளைய தினத்தையும், அடுத்த மாதங்களையும், அடுத்த வருடங்களையும் பற்றி நாம் சிந்தித்து, பல சுமைகளோடு களைத்துப்போயும் இருக்கக்கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேதம் நமக்கு ஒரு உண்மையை ஞாபகப்படுத்துகிறது. நாம் இன்றைய தியானத்துக்கென தெரிவுசெய்திருக்கும் வசனங்கள் (நீதிமொழிகள் 03: 05, 06) கர்த்தரில் நாம் பெற்றுக்கொள்ளும் ஒரு நிச்சயத்தை நமக்குக் கற்பிக்கின்றன. இந்த வசனங்கள் "அவர் (கர்த்தர்) உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்" (06) என்ற நிச்சயத்தை நமக்கு வாக்குப்பண்ணுகின்றன. ஆமென்! ஆனாலும், ஆண்டவரின் பிள்ளைகளாய், நாம் செய்ய வேண்டிய மூன்று முக்கிய காரியங்கள் உண்டு. வேதம், கர்த்தருக்குள் உதவியையும், கவனிப்பையும், வழிநடத்தலையும் எதிர்பார்க்கும் நமது விசுவாசத்தின் தூண்கள் போல இந்த மூன்று காரியங்களையும் நமக்கு நினைவுபடுத்துகின்றன. அவற்றை ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.
உன் சுயபுத்தியின்மேல் சாயாதே.
நீதிமொழிகள் 03ம் அதிகாரம் நமது சுயபுத்தியின்மேல் நாம் சாயாமல் இருக்க நமக்கு நினைவுபடுத்துகின்றது (வசனம் 05). சில நேரங்களில், மனிதர்களாக, நமது வாழ்வைக்குறித்தும் அதின் நோக்கத்தைக்குறித்தும் நமக்கு இருக்கும் அறிவானது ஆழமற்றது என்பதை நாம் மறந்துவிடுகின்றோம். நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு காரியத்தையும் நமது கண்ணோட்டத்திலேயே நம்மால் பார்க்க முடியும். நமது வரையறுக்கப்பட்ட அறிவோடுடன்தான் நம்மால் அவற்றை விளங்கிக்கொள்ள முடியும். நாம் இன்றைய நாளையும் நிகழ்காலத்தையும் வைத்தே நமது எதிர்கால திட்டங்களைப் போட அறிந்திருக்கிறோம் தவிர, நாளைய நாள் நமக்கு என்னத்தை வைத்திருக்கிறது என்பதை நம்மால் சிறிதளவும் அறிந்துகொள்ளத் தெரியாதவர்களாகவே நாம் வாழ்கிறோம். இவ்வளவுதான் நமது மனித அறிவும் விளங்கிக்கொள்ளுதலும். ஆனால், கர்த்தரின் எண்ணங்களோ ஆதியும் அந்தமுமானவை. அவருக்கு நம் தொடக்கமும் முடிவும் நன்றே தெரியும். ஆகையால், நமது புத்தியின்மேல் சாயாமல் கர்த்தரின் திட்டத்தை ஏற்று வாழ்வதே உண்மையான விசுவாச வாழ்வாகும்.
உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு.
நீதிமொழிகள் 03ம் அதிகாரம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் இன்னுமொரு விசுவாசத்தின் வெளிப்பாடு என்னவெனில், கர்த்தரில் எல்லாவற்றிலும், எல்லாவற்றைக்குறித்தும் ,முழு இருதயத்தோடு நம்பிக்கையாயிருத்தல். சில நேரங்களில் நாம் கர்த்தரில் நம்பிக்கை வைக்கின்றோம் என்று கூறிவிட்டு மாற்று வழிகளும் ஆயத்தமாக வைத்திருப்போம். "இது சரிவராவிட்டால்.." "இல்லாவிட்டாலும்.." "எதற்கும் தயாராக இருப்போம்..." "ஜெபம் பல வழிகளில் ஒன்று" "அதே நேரம்.." "ஆனாலும்.." என்றெல்லாம் ஏகப்பட்ட பல திட்டங்களை மனதில் வைத்துக்கொண்டு கர்த்தரிலும் நம்பிக்கை வைப்பதென்பது நம்மை எங்கேயும் கொண்டுசெல்லாது. ஆண்டவரின் பிள்ளைகளுக்கு அதுவல்ல சரியான விசுவாசத்தின் வெளிப்பாடு. கர்த்தரில் விசுவாசம் வைப்பதென்பது நூறு சதவீதம் முழுமையானதாக இருக்கவேண்டும்! நமது மனதில் உள்ள எல்லாவற்றையும்குறித்து ஆண்டவரிலே முதலாவது முழு நம்பிக்கை வைக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நமது திட்டங்கள், நமது நிகழ்ச்சி நிரல்கள், நமது கட்டமைப்புகள், நமது மதிப்பீடுகள், நமது மனதின் விருப்பங்கள் போன்ற நமது எதிர்கால சிந்தனை அனைத்திலும் ஆண்டவரில் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.
உன் வழிகளிலெல்லாம் கர்த்தரை நினைத்துக்கொள்.
நீதிமொழிகள் 03ம் அதிகாரம் நமக்கு நினைவுபடுத்தும் இன்னுமொரு விசுவாசத்தின் வெளிப்பாடு என்னவெனில் நமது வழிகளிலெல்லாம் கர்த்தரை நினைவில் வைத்திருந்து அவரிடத்தில் அனைத்தையும் ஒப்புக்கொடுத்தலாகும். பல நேரங்களில் நாம் நமது மனதின் விருப்பங்களின் படியும், தனிப்பட்ட தேவைகளைப்பொறுத்தும் நமது வழிகளை தெரிவு செய்து, பல காலங்கள் பயணித்த பின்பு ஏதாவது தாக்கங்கள் பிழைகள் தோல்விகள் ஏற்படும் வேளையிலே "ஏன் ஆண்டவர் இதை என் வாழ்வில் அனுமதித்தார்?" என்று கேட்டு அங்கலாய்ப்பதுண்டு. அப்படியான நேரங்களில் நாம் கடந்து வந்த நமது பாதையை ஒரு கணம் திரும்பிப் பார்த்தால் எங்கோ எப்போதோ நமது விருப்பங்களுக்கு ஏற்ப எடுத்த முடிவுகளின் விளைவுகளே இவைகள் என்பதை அறியலாம். ஆகையால்தான், வேதம் நமது எல்லா வழிகளிலும் நாம் கர்த்தரை நினைவில் வைத்திருந்து, அவர் நமது வாழ்வுக்கூடாக என்னத்தை விரும்புகின்றார் என்பதை அறிந்து அவரோடு பயணிக்க நம்மை அழைக்கிறது. இந்த அர்ப்பணிப்பு நமது விசுவாசத்தின் ஒரு முழுமையான வெளிப்பாடாகும்.
இன்றைக்கு, இந்த தியானத்தை வாசித்துக்கொண்டிருக்கும் உங்கள் வாழ்விலும் அநேக குழப்பங்கள், கேள்விகள், பயங்கள், நாளைய தினத்தைக் குறித்தும் எதிர்காலத்தைக் குறித்தும் குழப்பமானதும் விளங்கிக்கொள்ள முடியாததுமான அநேக எண்ணங்களும் இருக்கலாம். உங்களுக்கு முன் இருக்கும் பாதையானது கரடுமுரடானதும் கோணலானதுமாக இருக்கலாம். ஆனாலும், இன்று உங்களுக்கு கர்த்தரைத் தேடும்படியானதொரு அழைப்பாக இன்றைய தியானம் அமையலாம். நீதிமொழிகள் 03: 05, 06 ல் நாம் வழிநடத்தப்படுவதைப்போல, கர்த்தரில் முழுமையாக தங்கி வாழும் வாழ்வானது சிறந்ததும் கனிகொடுப்பதுமாய் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்வோமாக. கர்த்தரே நம்மை வழிநடத்தி பாதைகளை நமக்கு செவ்வைப்படுத்துவார். நமது சுயபுத்தியின்மேல் சாயாமல், நமது முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, நமது வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்வோமாக; அப்பொழுது அவர் நமது பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நமது வாழ்வும் வெற்றியுள்ளதாய் கனிகொடுப்பதாய் அமையும்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
🎶"கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்"
by கத்தரின் எபனேசர்