உங்களைக் காண்கிற தேவன்
இன்றைய வேதாகம வசனம்
அப்பொழுது அவள் (ஆகார்): என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
(ஆதியாகமம் 16: 13)
அப்பொழுது அவள் (ஆகார்): என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
(ஆதியாகமம் 16: 13)
நமது தேவனாகிய கர்த்தரிடத்தில் நமக்கு இருக்கும் மிகப்பெரிய உறுதிகளில் ஒன்று என்னவெனில் அவர் நம்மைக் காண்கின்றார் என்ற நிச்சயமே. இக்கட்டுகள், நோவுகள், இழப்புகள், சுகவீனங்கள் மற்றும் தோல்விகள் போன்ற, வாழ்வின் சவாலான அநேக தருணங்களில், நாம் புலம்பி, "கடவுள் உண்மையாகவே எமக்கு நடப்பதைப் பார்க்கின்றாரா? நாம் கடக்கும் நிலைமைகள் உண்மையிலேயே அவர் கண்களுக்குப் படுகின்றதா?" என்றெல்லாம் கேட்கின்றோம். ஆனாலும், ஒவ்வொருமுறையும், துன்ப நாட்கள் கடந்து சென்றபின்பு, கர்த்தருடைய கண்கள் எங்கள் மேல் எப்போதும் நோக்கமாயிருந்தது என்பதும், கர்த்தர் நமது வாழ்வில் மிகச் சிறந்ததை செய்ய அறிந்திருக்கின்றார் என்பதும் நம் எண்ணங்களுக்குத் தென்படுகின்றது. வாழ்வின் சில தருணங்களில் கர்த்தர் பதில்கள் ஏதும் கொடாமல் அமைதியாய் இருந்தார் என்பது உண்மையாய் இருப்பினும், நிச்சயமாகவே அவர் கண்கள் நம்மை விட்டு ஒருபோதும் விலகியதில்லை; நம் தேவன் நம்மைக் காண்கின்றார். அவர் நம்முடைய வாழ்வின் நிலைமைகள், உடல் நிலைமைகள், நம்முடைய தோற்றங்கள், சுற்றுப்புறங்கள், நிதி நிலைமைகள், நம்முடைய தேவைகள், கடன்கள் மற்றும் இன்னும் அநேக காரியங்களைக் காண்பது மட்டுமல்லாது, நம்முடைய இருதயத்தையும் அதன் சிந்தையையும் காண்கின்றார் என்பதை அறிந்துகொள்ளல் முக்கியமாகும். 1 சாமுவேல் 16:07 "மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" என்பதை நமக்குக் கற்றுத் தருகிறது. அதேபோல, சங்கீதம் 44: 21 ல் "இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே" என்பதையும், சங்கீதம் 139: 04 ல் தாவீது "என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்" என்று சொல்வதையும் நாம் காண்கின்றோம்.
ஆதியாகமம் 16ம் அதிகாரம், உண்மையான கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் விசுவாசிகளாய், விசுவாசத்தைக் குறித்து நாம் ஞாபகம் வைத்திருக்கவேண்டிய ஒரு முக்கிய விடயத்தை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. தன்னுடைய நாச்சியாரால் கடினமாக நடத்தப்பட்டு, நாச்சியாரின் வீட்டை விட்டு ஓடி, வனாந்தரத்தில் உள்ள நீரூற்றண்டையிலே ஆகார் நிற்கின்றாள். அவள் கர்ப்பவதியாகவும் இருந்ததால், தனது உடல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவளுக்கு இருந்த பாதுகாப்பின்மையானது அவளால் விளங்கப்படுத்த முடியாததும் அவளை முழுவதும் உடைத்துப்போடுவதுமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும். ஆகார் இந்நிலையிலே இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் வானாந்தரத்தின் ஒரு துரவுக்கு அருகிலே அவளைக் கண்டு, அவளோடு பேசி, அவளை அவள் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய் அவள் கையின்கீழ் அடங்கியிரு என அறிவுறுத்தி, அவள் பிரசவிக்க இருக்கும் ஆண் குழந்தையைப் பற்றியும் சில காரியங்களைக் கூறுவதைக் காணலாம். அதற்கு ஆகார் "என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்" (ஆதியாகமம் 16: 13). இந்தப் வேதப் பகுதியிலிருந்து விசுவாசத்தின் இரண்டு முக்கியமான பகுதிகளை நாம் காணக்கூடியதாயுள்ளது. முதலாவது, கர்த்தர் என்னைக் காண்கின்ற தேவன் என்ற ஆகாரின் அனுபவரீதியான விசுவாசப் படிப்பினை. இரண்டாவது, தன்னைக் காணும் கர்த்தரைத் தானும் கண்டு கொண்டேன் என்ற அவளின் விசுவாசத்தின் பிரதிபலிப்பாகும். ஒருபுறம், தன்னைக் கர்த்தர் காண்கின்றார் என்பதை ஆகார் அறிகின்றாள், மறுபுறம் தன்னைக் காண்பவரைத் தானும் கண்டேன் என்பதில் அவள் மகிழ்கின்றாள். காணப்படலும், காணுதலும்!
காணப்படல்: "என்னைக் காண்கிற தேவன்"
ஆகாரின் வார்த்தைகள் நம் உள்ளத்தில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ஆண்டவரின் பிள்ளைகளாய் அவரின் அன்பையும் கரிசனையையும் பற்றி சாட்சிகூற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்மைக் காணும் கர்த்தரில் நாம் நம்பிக்கையாய் இருக்கின்றோம். இன்றைக்கு கர்த்தர் நமது பலதரப்பட்ட சூழ்நிலைகளையும் காண்கின்றார். அவற்றுக்குக் கர்த்தரின் சரியான நேரத்திலே அவர் பதில் கொடுப்பார். அந்தப் பதில்களுக்குக் காத்திருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள நாம் பொறுமையோடும் பக்குவத்தோடும் காத்திருத்தல் அவசியம். கிறிஸ்துவின் விசுவாசிகளாய், அவர் நம்மைக் காண்பதை அனுபவரீதியாகக் கண்டு அதை சாட்சிபகருவது மிகவும் முக்கியமானதொன்றாகும். மற்றவர்கள் நம்மைக் காண்பதுபோல் நம் தேவன் நம்மைக் காணாமல், நமது மனதின் ஆழத்தில் இருக்கும் ஒவ்வொரு விருப்பத்தையும் ஏக்கத்தையும் அவர் காண்பவராய் இருக்கிறார். அவருக்கு நம் உணர்வுகள் நன்றே தெரியும். அதே நேரம், நம் கர்த்தருக்கு அவரின் சரியான வேளையும் தெரியும். நாம் வேண்டிக்கொள்பவைக்கும் ஜெபிப்பவைக்கும் சரியான பதிலின் நேரம் வரும்பொழுது அவருடைய சித்தத்தின்படி நமக்குப் பதிலளிப்பார். அவர் நம்மைக் காண்கிறவர் என்ற விசுவாசத்தின் முதல் பகுதி என்னவெனில், இந்த உண்மையை அறிந்து, விசுவாசித்து, அனுபவித்து அதை சாட்சியாகவும் பகிர்ந்துகொள்ளுவதே. "இயேசுவே என்னைக் காணும் தேவன்" என்று சாட்சிபகர நாம் அழைக்கப்படுகிறோம்.
காணுதல்: "என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்"
ஆகாரின் வார்த்தைகளின் இரண்டாம் பகுதி நமக்கு காண்கின்ற தேவன் என்ற விசுவாசத்தின் பிரதிபலிப்பைக் காட்டுகின்றது. கர்த்தர் நம்மைக் காண்கின்றார் என்பதை ஏற்கனவே அனுபவரீதியாக உணர்ந்து அறிந்துகொண்ட நாம், இப்பொழுது அதன் பிரதிபலிப்பாக ஆண்டவரையும், அவர் வழியையும், அவரின் சத்தியத்தையும் தேட, காண எத்தனிக்க அழைக்கப்படுகின்றோம். இந்த இரண்டாவது பகுதியை நாம் பல நேரங்களில் புறக்கணித்துவிடுகின்றோம். ஆண்டவர் நம்மைக் காண்கின்றார் என்றதை அறிந்ததும், நாம் நமது நிலைகள் மற்றும் தேவைகள் பற்றி நம்பிக்கையாய் இருந்துவிடுகின்றோம் தவிர, கர்த்தரையும் அவர் வழிகளையும் நாம் தேடவேண்டும், அதைக் கண்டடைய வேண்டும் என்ற ஆவலும் நமக்குள் இருப்பதில்லை. கர்த்தர் நம்மைக் காண்கின்றார் என்ற விசுவாசம் நமக்குள் வளர வளர கர்த்தரை நாமும் காணவேண்டும் என்ற தேவையும் நமக்குள் வளரவேண்டும். ஆகாரின் "என்னைக் காண்பவரை நானும் கண்டேன்" என்ற வார்த்தைகளிலுள்ள திருப்தியும் நிறைவும் நமக்குப் புரிகிறதா? நாம் எப்போது இந்த வார்த்தைகளைச் சொல்லப்போகின்றோம்?
"பெயர் லகாய்ரோயீ" (ஆதியாகமம் 16: 14) என்ற வார்த்தைகள் நம்மையும் இந்த சம்பவம் இடம்பெற்ற அந்த வனாந்தரத்தின் துரவின் அருகிலே கொண்டுசெல்லட்டும். ஆகாரின் வாழ்விலே இந்த வார்த்தைகள் "ஜீவனுள்ளவாராய் இருந்து என்னைக் காண்பவரின் துரவு." நம்முடைய வாழ்விலே இது காணப்படுதலையும் காணுதலையும் ஞாபகப்படுத்தட்டும். "பெயர் லகாய்ரோயீ" என்று ஆகார் சொன்ன வார்த்தைகள் நம்மையும் ஆண்டவரோடு ஒரு நிச்சயத்தின், உறுதியின், நெருக்கத்தின் உறவுக்குள் வழிநடத்தட்டும். கர்த்தர் உங்களைக் காண்கின்றார். அதே போல் நீங்களும் இந்த நிச்சயத்துக்கு சாட்சியாக வாழ்ந்து கர்த்தரையும் உங்கள் வாழ்வில் நீங்கள் தேட, கண்டடைய அழைக்கப்படுகின்றீர்கள்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
🎶"என்னைக் காண்பவரே"
தந்தை S. J. பேர்க்மான்ஸ்