நமது ஜெப பெத்தேல்களும் நமது விசுவாசமும்


இன்றைய வேதாகம வசனம்
யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.
(ஆதியாகமம் 28: 16, 17)

நம் அனைவருக்கும் ஜெபம் பண்ணுவதற்கென நம் மனம் விரும்பிய ஒரு இடம் இருக்கும். நம்மில் பலருக்கு அது நம்முடைய வீட்டிலுள்ள நமது அறையாகும். ஆனாலும், சிலருக்கோ அது தமது தேவாலயத்தின் பலிபீடத்தண்டை  ஆகும். இவ்விரண்டு இடத்திற்கும் இடையே இன்னும் அநேக ஸ்தலங்கள் நமது ஜெப நேரத்துடன் தொடர்பு உடையதாய் இருக்கலாம். 

ஒரு பூங்காவிலே உள்ள ஒரு மரமும் அதன் கீழே இருக்கும் அந்த இருக்கையும் நமக்குப் பிடித்த ஜெப ஸ்தலமாய் இருக்கும். அருகிலுள்ள பாலத்தின் முடிவிலே உள்ள காற்றோட்டமான ஒரு மணல் திட்டியாய் இருக்கலாம். நமது பாடசாலையிலோ பல்கலைக்கழகத்திலோ உள்ள ஜெப அறையாக இருக்கலாம். நமது தோட்டத்திலே அமைத்திருக்கும் சிறிய கூடாரமாய் இருக்கலாம். நீங்கள் தங்கியிருக்கும் மாணவர் விடுதியின் யன்னலோரமாய் இருக்கலாம். நீங்கள் அயல் நாட்டுப் பயணங்களுக்காக பயன்படுத்தும் ஒரு விமான நிலையத்திலுள்ள ஒரு மூலையாய் இருக்கலாம். நீங்கள் அடிக்கடி பயணம் செய்யும் வழியிலே அமைந்திருக்கும் ஒரு ஆச்சிரமமோ தேவாலயமோவாகவும் இருக்கலாம். நீங்கள் வாழும் ஒரு அடுக்குமாடித் தொடர் வீட்டின் உச்சியிலுள்ள திறந்தவெளி மாடியாக இருக்கலாம். இப்படியாக, நமது மனதுக்குப் பிடித்த சில ஜெப ஸ்தலங்கள் இருப்பதற்கான காரணம், அவைகளில் நமக்கு ஏற்பட்ட மறக்க முடியாத சில அனுபவங்களும், பதிலளிக்கப்பட்ட ஜெபங்களும், நம்ப முடியாத அற்புதங்களும், அந்த ஸ்தலங்களில் நாம் உணர்ந்துகொண்ட கர்த்தரின் பிரசன்னமுமே ஆகும்.

இலங்கையின் மட்டக்களப்பு நகரிலிருந்து ஒலுவில் என்ற பிரதேசத்தை நோக்கி பயணம் செய்யும் பாதையிலே என் மனதுக்குப் பிடித்த ஒரு ஜெப ஸ்தலம் உண்டு. 2014ம் ஆண்டு தொடக்கம் 2016ம் ஆண்டுவரை, மட்டக்களப்பிலிருந்து ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் வழங்குவதற்காக நான் அடிக்கடி பயணித்து வந்தேன். எனது மோட்டார் சைக்கிளில் ஆறுதலாக மெதுவாக பயணிக்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செல்லும். இப்படியான பயணங்களின்போது நான் ஓந்தாச்சிமடம் என்னும் இடத்திலே இருக்கும் ஒரு மரத்தடியிலே எனது போக்கிலும் வரத்திலும் ஒரு சில நிமிடங்கள் தரித்து நின்று, ஒரு சிறு ஜெபம் பண்ணிவிட்டு எனது பயணத்தை தொடர்வதுண்டு. காலப்போக்கில் இந்த பயணத்திலே செல்லும்போது அந்த இடம் நெருங்குகின்றது என்றாலே ஒரு விருப்பம், ஒரு சந்தோஷம், ஒரு ஆர்வம் வந்துவிடும். ஆறுதலாக அந்த வேப்பமர குளிர்ச்சியின் கீழ் நின்று "என் போக்கையும் வரத்தையும் காத்து, நான் செல்லும் காரியத்தையும் வாய்க்கப்பண்ணும் ஆண்டவரே" என்று ஜெபம் பண்ணி பயணத்தைத் தொடருவேன். தொடர்ந்து வந்த வருடங்களில், அந்த வழியாக மோட்டார் சைக்கிளிலும் சரி, காரிலும் சரி கடந்து செல்லும்போதெல்லாம் சில நிமிடங்கள் தரித்து ஜெபம் பண்ணி செல்லுவேன். என்னோடு பயணம் செய்பவர்களின் மனதில் எழக்கூடிய கேள்வி அறிந்து, "இது என்னுடைய பெத்தேல்" என்று சொல்லுவேன். 

இதுபோன்றே, கொழும்பு விமான நிலையத்திலும் எனக்கு பிடித்தமான ஒரு ஜெப ஸ்தலம் உண்டு. பெங்களூரில் ஐந்து வருடங்கள் படித்த காலங்களிலும், இப்பொழுது சில வருடங்களாக இங்கிலாந்து நோக்கிய பயணங்களின் போதும், இவைக்கு முன்னரும் பின்னரும் செய்த விமான பயணங்களின்போதும் ஒரு விஷேடமான ஒரு மூலையிலே நான் தனியாகவும் சரி, எனது பெற்றோருடனும் சரி, நண்பர்களுடன் பயணித்த நேரங்களிலும் சரி, அண்மையிலே எனது மனைவியுடன் பயணித்த வேளையிலும் சரி, நான் அந்த இடத்தில் நின்று ஜெபம் பண்ணிவிட்டே எனது பயணத்தை தொடர்வேன். ஆரம்ப காலத்திலே என்னுடைய தாயார் எனக்காக ஒவ்வொரு முறையும் அவ்விடத்திலே ஜெபம் பண்ணி அனுப்பி வைத்த அந்த வழமை எனக்குள் இப்போதும் நிலைத்து நிற்கின்றது. இதுவும் என்னுடைய வாழ்வில் இருக்கும் எனது பெத்தேல் என்றே கூற வேண்டும்.

நிச்சயமாக உங்களது வாழ்விலும் இப்படியான பெத்தேல்கள் இருக்கக்கூடும். இப்படியான ஸ்தலங்களில் நின்று நாம் பண்ணும் ஜெபங்கள் வெறுமனே நமது ஜெப வாழ்வைப் பிரதிபலிப்பது மட்டுமல்லாது, நாம் இன்னுமொரு முறை இந்த இடத்திற்கு வருவதென்பது கர்த்தரின் சித்தம் என்பதை உணர்த்துவதோடு, நமது விசுவாச வாழ்வைப் பண்படுத்துவதற்கு அவசியமாகின்றது. 

யாக்கோபு, ஆரானை நோக்கி பயணிக்கின்றான். தன்னுடைய வீட்டிலிருந்து புறப்பட்டு, தன்னுடைய சகோதரன் ஏசாவிடமிருந்து தப்பி ஓடுகின்றான். அநேக பாதுகாப்பின்மையும் எதிர் காலம் பற்றிய எந்த அறிவும் இன்றி, மனக்குழப்பங்களுடன் போகும் வழியிலே, மாலை நேரமாகி இருள் சூழவும், அவன் ஒரு இடத்திலே தரித்து நின்று, அவ்விடத்தில் இருந்த கற்களில் ஒன்றின்மேல் தலைசாய்த்துத் தூங்கினான். அப்பொழுது அவன் ஒரு சொப்பனங் கண்டான். "இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று" (ஆதியாகமம் 28: 12, 13) யாக்கோபுக்கு அவனது வாழ்வில் கர்த்தர் அருளும் செழிப்பும், பாதுகாப்பும், பத்திரமாக வீடு திரும்பும் வாய்ப்பும், மாறாத தேவ பிரசன்னமும் எப்போதும் உடனிருக்கும் என்ற நிச்சயத்தை அளிக்கின்றார். வேதம் தொடர்ந்து இப்படியாக சொல்லுகிறது: "யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது. அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்" (ஆதியாகமம் 28: 16 - 22). இதுவே யாக்கோபின் வாழ்வில் பெத்தேலின் முக்கியத்துவம்!

முதலாவது, யாக்கோபு கர்த்தரின் பிரசன்னம் அவ்விடத்தில் இருப்பதைப் புரிந்துகொண்டான். 
இரண்டாவது, அவன் கர்த்தரின் மகிமையைப் பார்த்து பயந்து பிரமிப்படைந்தான். 
மூன்றாவது, அந்த இடம் கர்த்தருடைய வீடாக இருக்கிறதையும், வானத்தின் வாசல் என்பதையும் உணர்கிறான்.
நான்காவது, கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்தான்.
ஐந்தாவது, அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்.
ஆறாவதாக, ஒரு பொருத்தனைபண்ணிக்கொண்டான்.
புரிந்துகொள்ளுதல், பயபக்தி, பிரமிப்பு, நினைவுபடுத்தல், பெயரிடல், பொருத்தனைபண்ணுதல், என்பவையே அன்று யாக்கோபுக்கு அவனின் பெத்தேலிலே நடந்த அனுபவங்களும் காரியங்களும் ஆகும். 

இன்றைக்கு உங்களுடைய வாழ்விலும், உங்களுடைய பெத்தேல்கள், உங்கள் மனம் விரும்பிய ஜெப ஸ்தலங்கள் உங்கள் விசுவாச வாழ்வில் எவ்வளவு முக்கியமுள்ளதாய் இருக்கிறது என்பதை அறிகின்றீர்களா? அந்த ஸ்தலங்களில் கர்த்தரின் பிரசன்னம் உள்ளது என்பதை அறிகின்றீர்களா? அந்த இடங்களில் நீங்கள் பயபக்தியுடனும் கர்த்தரின் மகிமையை எண்ணிய பிரமிப்புடனும் நிற்கின்றீர்களா? அந்த ஸ்தலங்கள் கர்த்தர் வாசம்பண்ணும் வீடும் பரலோகத்தின் வாசல் என்பதையும் அறிந்திருக்கின்றீர்களா? அந்த இடத்தை நினைவுபடுத்தி உங்கள் மனதிலே வைத்து அதின் பரிசுத்தத்தை உணர்ந்துகொள்ளுகின்றீர்களா? என்ன பெயர் வைத்திருக்கின்றீர்கள்? அந்த இடத்தில் என்ன பொருத்தனை பண்ணினீர்கள்? இந்த அழைப்பு ஒரு முக்கியமானது. நமது பெத்தேல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது அவற்றை நமது விசுவாச வாழ்வின் மிகமுக்கிய பங்காக எடுத்துக்கொண்டு வளருவோமாக. விசுவாசத்திலே வளர்ந்து, ஜெப ஸ்தலங்களை பரிசுத்தமாக பேணி, கர்த்தருடன் நெருக்கமானதொரு பயணத்திற்கு அழைக்கப்படுகின்றோம்.

நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக்  கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்


🎶
"என் சாமி இயேசுவே"
by கதரின் எபனேசர்

Global Reach of 'Weekly Devotions with Ebenezer'

Like and Follow Our Facebook Page For Regular Updates

Like and Follow Our Facebook Page For Regular Updates
Click on the picture above to reach our FB page

Popular Posts