கர்த்தரின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளுதலும் பாராட்டுதலும்
இன்றைய வேதாகம வசனம்
அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
(ஆதியாகமம் 32: 10)
(ஆதியாகமம் 32: 10)
சில நேரங்களில், மிக விரைவாக செயற்படும் அவசர உலகத்தில், கர்த்தர் நம் வாழ்வில் எவ்வளவு உண்மையுள்ளவராய் இருக்கின்றார் என்பதை நினைந்துபார்க்க நாம் தவறுகின்றோம். நாம் வெவ்வேறு இலக்குகளையும் நோக்கங்களையும் மனதில் வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டு, அநேக சாதனைகளையும் கர்த்தரின் உதவியோடு புரிந்துகொண்டு முன்னேறிக்கொண்டு இருக்கின்றோம். ஆனாலும், கர்த்தர் இவை எல்லாவற்றுக்கூடாகவும் எவ்வளவு உண்மையுள்ளவராய் இருந்துவருகின்றார் என்பதை நாம் பாராட்ட மறந்துவிடுகின்றோம்.
நீங்கள் ஒரு முறை எல்லாவற்றையும் இடைநிறுத்திவிட்டு கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கவேண்டும். நானும் சில நிமிடம் தரித்து நின்று எங்கே ஆரம்பித்தேன் என்பதை நினைக்கவேண்டும். நாங்கள் எல்லோரும் நமது அவசர ஓட்டங்களிலிருந்து ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டு நேரம் ஒதுக்கி கர்த்தர் எவ்வளவு உண்மையும் நல்லவருமாய் இருந்திருக்கிறார் என்பதை நினைந்து பார்ப்போம்.
ஆதியாகமம் புத்தகத்திலே, யாக்கோபு, தன்னுடைய வீட்டை விட்டு வெகுதூரம் சென்று, தன் சகோதரனின் ஏசாவின் கோபத்துக்கு தப்பித்து அலைந்து, அநேக வருடங்களின் பின்னர் தனது குடும்பம், வேலையாட்கள், ஆடு மாடுகள் மற்றும் தனக்குண்டான யாவற்றோடும் திரும்பி வருகின்றான். பயமடைந்தவனாய், தனது ஆட்களை அழைத்து தன் சகோதரனிடத்தில் தயவு கிடைக்கும்படியாக அவர்களை முன்னரே அனுப்பி வைத்தான். அவர்களோ திரும்பி வந்து ஏசா யாக்கோபுவை சந்திக்க நானூறுபேரோடே சந்திக்க வரும் செய்தியை அறிவித்தார்கள். கலங்கிக் குழப்பமடைந்த யாக்கோபு தன் ஜனத்தையும் தனக்கு உண்டான யாவற்றையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து, ஏசா இவைகளில் ஒன்றின்மேல் தாக்கினாலும், மற்றைய பகுதி தப்பியோடிக்கொள்ளட்டும் என்று சொல்லி அவர்களை ஆயத்தப்படுத்தினான். என்னவோரு மன நிலை! "பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்" (ஆதியாகமம் 32: 09, 10) என்று ஜெபிப்பதைப் பார்க்கின்றோம். இவற்றிலிருந்து நாம் இரண்டு முக்கிய வேத படிப்பினைகளைக் காண்கின்றோம்.
யாக்கோபு, தன் மேல் கர்த்தர் காட்டும் உண்மைத்தன்மைக்கு தான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல என்பதை ஒப்புக்கொள்கின்றான்.
இவ்வளவு ஒரு பயமான, நிர்க்கதியான சூழ்நிலையிலும், யாக்கோபு கர்த்தரை நோக்கிப் பார்க்கின்றான். அந்த இடத்திலே அவன் பெயரிலே அவனுக்கு அநேகம் உண்டு. மனைவிமார், பிள்ளைகள், வேலையாட்கள், ஆடு மாடுகள், மற்றும் இத்தனை வருடங்களாக தன் சேர்ந்து வந்த சொத்துக்கள் அனைத்துடனும் அங்கு நிற்கின்றான். ஒரு செல்வந்தனாக நிற்கும் யாக்கோபு, தான் கர்த்தர் தன் மேல் காட்டும் உண்மைத்தன்மைக்கு தான் பாத்திரன் அல்ல என்று ஒப்புக்கொள்வதை காண்கிறோம். யாக்கோபு கர்த்தரை நோக்கி "அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல" (ஆதியாகமம் 32: 10) என்று ஜெபிப்பதை அறிகின்றோம்.
யாக்கோபு, தன் கடந்துவந்த வருடங்களில் கர்த்தரின் உண்மைத்தன்மையைப் பாராட்டுகின்றான்.
வருடங்களுக்கூடாக யாக்கோபு ஒரு விசுவாசத்தின், இக்கட்டுக்களின், சவால்களின், பயங்களின் பயணத்தில் தொடர்ந்திருக்கிறான். அவன் வீட்டை விட்டு, சகோதரனாகிய ஏசாவுக்கும் பயந்து எந்த வழியாக ஓடினானோ அதே வழியாக இப்பொழுது திரும்பி வந்துகொண்டிருக்கிறான். தன்னுடைய போக்கின் நிலைமையை தன்னுடைய வரத்திலே நினைவுகூருகிறான். அவன் ஒன்றும் இல்லாதவனாய் சென்றான். இப்பொழுது எல்லாவற்றுடனும் திரும்பி வருகின்றான். கர்த்தர் அவனை சந்தித்து அவன் புறப்பட்டு சென்ற வேளை அவனைப் பத்திரமாக மீண்டும் கொண்டுவருவேன் என்ற நிச்சயத்தையும் கொடுத்து அனுப்புகின்றார். அதை நினைவுகூர்ந்தவனாக, யாக்கோபு, "நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்" (ஆதியாகமம் 32: 10) என்று கர்த்தரை நோக்கி, அவரின் உண்மையை நினைந்து நன்றியுடன் அதைக் கூறுகின்றான்.
இன்றைக்கு, நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், எவ்வளவு தாழ்வானதோ உயர்வானதோ நமது நிலைமை என்றாலும், கர்த்தரின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளலும் பாராட்டலும் நமது வாழ்வில் என்றும் மாறாததாக இருக்கவேண்டியது அவசியமாகும். நாம் கர்த்தரின் மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் உடையவர்களாய் இருப்பதற்கு நாம் எம்மாத்திரம் என்பதை நினைவில் வைத்திருந்து நம்மை அறிந்துகொள்ளுதல் முக்கியம் ஆகும். அடிக்கடி நம் வாழ்வில் இதற்கென நேரம் ஒதுக்கி, கர்த்தரின் அன்பினதும் உண்மைத்துவத்தினதும் ஆழத்தை அறிந்து வாழவோமாக.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
🎶
"நான் எம்மாத்திரம்"
by பென்னி ஜோஷுவா