கர்த்தருடைய பர்வதத்திலிருந்து பார்த்துக்கொள்ளப்படும், கொடுக்கப்படும்
இன்றைய வேதாகம வசனம்
"ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது."
(ஆதியாகமம் 22: 14)
நாளைய நாளைக் குறித்துக் கவலையா? அன்றன்றுள்ள அப்பத்தைத் தரும் ஆண்டவரை நாம் ஆராதிக்கின்றோம்!
கடைசியில் இது எப்படியாக முடியுமோ என்ற பயமா? சந்தோஷமான முடிவுகளைக் காணச்செய்யும் தேவன் அவர்!
சூழ்ந்திருக்கும் பிரச்சனைகள் நம்மைப் பயங்கரப்படுத்துகிறதா? கிறிஸ்து இயேசு தன் வார்த்தையினால் புயலை அமைதிப்படுத்தினார்.
அவர் யெகோவா-யீரே! சகலத்தையும் பார்த்துக்கொள்பவர், நமக்குக் கொடுப்பவர்.
ஆபிரகாம், தன் வாழ்வில் கர்த்தர் அருளிய வாக்குத்தத்தம் நிறைவேறுவதைக் காண்கின்றான். அதிசயமான வழியிலே, அவன் மனைவி சாராள், தனது தொண்ணூறாவது வயதிலே, ஈசாக்கைப் பெற்றெடுக்கின்றாள். ஆபிரகாமைக் கர்த்தர் தேசங்களுக்குத் தகப்பனாக ஆக்குவேன் என்ற வாக்குத்தத்தம் இந்த மகனுக்கூடாக நிறைவேறுவதை ஆபிரகாம் காண்கின்றான். ஆனால், ஒரு நாள், கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, "உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு" (ஆதியாகமம் 22: 02) என்றார்.
கர்த்தரின் குரலைக் கேட்டு, ஆபிரகாம் தன் மகனான ஈசாக்கையும், தனது வேலைக்காரரில் இரண்டுபேரையும் கூட்டிக்கொண்டு போகையில், கர்த்தர் ஆபிரகாமுக்குக் காண்பித்த இடம் நெருங்கியதும் தகப்பனும் மகனும் மட்டும் தொடர்ந்தார்கள். பலியிடுவதற்காக தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஈசாக்கு தன் தகப்பனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பதை நாம் அறிவோம். "இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்" (07, 08). ஒரு தகப்பனாக, ஆபிரகாமுடைய மனம் இந்த பதிலைச் சொல்லும்போது எவ்வளவு அங்கலாய்த்திருக்கவேண்டும். ஆனாலும், ஆபிரகாம் ஆண்டவருக்கு தான் கீழ்ப்படிவதிலே தன்னுடைய தகப்பன்-மகன் உறவுகூட இடையே வந்துவிடக்கூடாது என்பதிலே எவ்வளவு உறுதியாய் இருந்தான் என்பதை நினைத்து நான் வியந்து போகின்றேன்.
அப்புறம் இருவரும் கூடிப்போய்,தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே (கர்த்தர் பார்த்துக்கொள்வார்) என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது (08-14).
இந்த சம்பவத்திலிருந்து விசுவாச வாழ்விற்கான இரண்டு உண்மைகளை நான் காண்கின்றேன்.
கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்ற விசுவாசம்
கிறிஸ்தவ விசுவாசமும் பரிசுத்த வேதாகமமும் மீண்டும் மீண்டும் நமக்கு ஞாபகப்படுத்தும் ஒரு உண்மை என்னவென்றால், கர்த்தருக்கு காத்திருப்போருக்கு ஒரு நன்மையும் குறைவுபாடாது கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்பதே. கர்த்தரில் விசுவாசமாய் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். கடைசிவரைக்கும் தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கும் ஒவ்வொருவரையும் கர்த்தர் நன்மைகளால் நிரப்புகின்றார். ஆபிரகாமுக்கோ ஈசாக்கு அவனுடைய எதிர்காலத்தின் ஒரே ஒரு எதிர்பார்ப்பு. ஆனாலும் அந்த மகனைக்கூட ஆண்டவரின் குரலைக் கேட்டு பலியிட அவன் தயாரானான். நாம் கர்த்தரை விசுவாசிக்கவேண்டும். நாம் விரும்பியபடி நிலைமைகளும் ஆசீர்வாதங்களும் நமக்குக் கிட்டாதபோதும் நாம் தொடர்ந்தும் ஆண்டவரிலே நம்பிக்கையாய் இருக்க வேண்டும். கர்த்தர் சரியான நேரத்திலே, சரியான விதத்திலே, அவருடைய வழியிலே நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தருடைய பர்வதத்தித்திலிருந்து பார்த்துக்கொள்ளப்படும், கொடுக்கப்படும் என்ற விசுவாசம்.
கர்த்தரின் பிள்ளைகளாய், அவருக்காக காத்திருக்கும்பொழுது கர்த்தர் அருளும் ஆசீர்வாதங்களானது அவருடைய உயர்ந்த பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படுபவையாகவும் நமக்குக் கொடுக்கப்படுபவையாகவும் இருக்கின்றன. இந்த ஆசீர்வாதங்கள் வெறுமனே நமது தேவைகளை சந்திப்பவையாய் இராமல், நிரம்பவே ஆசீர்வாதங்களும் ஆச்சரியங்களும் அதனுள் அடங்கியவையாக, நாம் பார்த்து கர்த்தர் இவ்வளவு மெச்சிக்கொள்ளக்கூடியதை நமக்குத் தந்தார் என்று நினைக்கும்வண்ணம் இருக்கும், ஏனெனில், இது கர்த்தருடைய பர்வதத்திலிருந்து, அவருடைய உயர்ந்த ஸ்தானத்திலிருந்து வருவதாய் இருக்கும். கடைசிவரைக்கும் கர்த்தரோடு பயணித்து, வாழ்வின் எதிர்பார்ப்புகளின் கடைசி நம்பிக்கையும் அழிந்துபோகும் நிலைமையிலும், கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருக்கிறவர்களுக்கு அவர்களுடைய தேவைகள் எல்லாம் கர்த்தருடைய பார்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்.
ஆகையால், நம் கர்த்தர் யெகோவா யீரே ஆக இருக்கின்றார் என்பதை மறவாதிருப்போம். எவ்வளவு மோசமான கஷ்டமான நிலையிலும், நம்பிக்கை எல்லாம் அழிந்து போகும் நிலையிலும், அவரிலே நாம் விசுவாசமாய் இருப்போம். கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்பதை மறவாது இருப்போம். நம் தேவைகள் எல்லாம் அவருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படுவதால் அவைகள் உயர்ந்ததும் பல மடங்கு ஆசீர்வாதம் உள்ளதாகவும் இருக்கும் என்பதை அறிவோம். ஆபிரகாமுக்கு அன்று, அந்த பர்வதத்திலே, கர்த்தர் பலியிடுவதற்கு ஒரு ஆட்டுக்கடாவை மாத்திரம் கொடுக்கவில்லை. அதற்கும் மேலாக ஆபிரகாமுக்கு அவன் சந்ததிகளையும் தேசங்களுக்கு தகப்பனாக இருக்கும் மேன்மையையும் கர்த்தர் கொடுத்தார். இதுவே கர்த்தரின் பர்வதத்திலே இருந்து வரும் ஆசீர்வாதம். இன்று நீங்களும், உங்களுடைய இன்றைய தாகத்துக்கான தண்ணீரைக் கர்த்தரிடத்திலே கேட்டு நிற்கலாம். ஆனாலும், கர்த்தரில் முழு நம்பிக்கை வைத்து அவரிலே விசுவாசமாய் இருக்கும்போது, அவருடைய மேன்மையான பர்வதத்திலே இருந்து இன்றும், இன்னும் பல சந்ததிகளுக்குமான நீர் ஊற்று உங்கள் எல்லைகளெல்லாம் பாய்ந்து ஓட கர்த்தர் ஆசீர்வாதம் அருளுவார்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
🎶
"யெகோவா யீரே"
by கதரின் எபனேசர்