கிறிஸ்தவ ஐக்கியத்தில் ஒருமனப்பாட்டின் ஜெபம்
இன்றைய வேதாகம வசனம்
"அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மத்தேயு 18: 19)
"ஞாயிற்றுக் கிழமைகளில் நாங்கள் ஏன் ஆலயத்திற்கு செல்லவேண்டும் ? என் வீட்டு அறையிலேயே நான் ஜெபித்துக்கொள்வேனே! என்று சில இளம் கிறிஸ்தவ பிள்ளைகள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். இந்த கேள்விகள் நியாயமானதாய் இருக்கலாம்; நாம் அதைத்தான் கிழமை முழுவதும் செய்துகொண்டிருக்கிறோமே. நாம் தனியாக நேரம் செலவழித்து, ஆராதித்து, ஜெபிக்கிறோம். நாம் நமது வீட்டில் குடும்பமாய் சேர்ந்து ஜெபிக்கிறவர்களாகவும் இருக்கின்றோம். நாம் இருவராகிலும் மூவராகிலும், ஜெபத்திலே கேட்கபோகின்றவற்றைக் குறித்து ஒருமனப்பட்டு, ஒரே ஜெபசிந்தையோடும் , கேட்பவற்றை குறித்ததான ஒரே எதிர்ப்பார்ப்போடும் ஒருமித்து ஜெபிப்போம். அப்படியான ஜெபங்களுக்கு நிச்சயம் பதில் உண்டு. இவை நமது குடும்ப உறவுகளுக்கு, நண்பர்களுக்கு , நமது சபைக்கு அதன் ஊழியத்திற்கு, தேவ ஊழியர்களுக்கு, மற்றும் தங்களுடைய வெவ்வேறு தேவைகளுக்காக ஜெபிக்கும்படியாக நம்மிடம் கேட்டுக்கொண்டவர்களுக்கு, ஏறெடுக்கப்படும் ஜெபங்களாக இருக்கின்றன.
எவ்வாறாகிலும், ஞாயிற்றுகிழமைகளில், ஆலயத்தில், திருச்சபையாய் நாம் கூடும்போது, தனிஜெபம், குடும்ப ஜெபம், மற்றும் எதற்காக ஜெபிக்க கூடியிருக்கிறோம் என்பதில் உருவாகும் ஒருமனப்பாடு என்பதெல்லாம் உள்ளடங்குவதை நாம் உணர்ந்துகொள்கின்றோம். நாம் தனிநபர்களின்,குடும்பங்களின், சமுதாயத்தின், சமூகத்தின், தேசங்களின் தேவைகளுக்காக ஜெபிக்க ஒருமனப்படுகின்றோம். நாம் எல்லாவற்றையும் ஜெபத்தில் ஒப்புக்கொடுப்பதால் ஒருவரின் பாரத்தை ஒருவர் பகிர்ந்துகொள்கிறோம். இதனால்தான் ஞாயிறு ஆராதனையில் கலந்துகொள்வது என்பது ஒரு விசுவாசிக்கு அத்தியாவசியமாகின்றது. ஒரு பெரிய கூட்டமாய், திருச்சபை மக்களாய் ஜெபத்திலே காரியங்களுக்காக இணைந்துகொள்ளக்கூடிய ஆன்மீக சலாக்கியத்தையும் அது நமக்கு தருகின்றது. இதனால் தான் நாம் திருச்சபையாய் சேர்ந்து ஆண்டவருடைய மகிமையான பிரசன்னத்தை வேண்டி அவரை துதித்து, ஆராதிக்கும்போது, ஆண்டவருடைய அபிஷேகத்தை வல்லமையாக உணரமுடிகிறது. முன்னைய கிழமைகளில் முன்வைக்கபட்ட ஜெப விண்ணப்பங்களுக்கான சாட்சிகளை நாம் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் கேட்கக்கூடியதாகவும் இருக்கின்றது. பதில் கிடைக்கப்பெற்ற ஜெபங்களினால் அனேகருடைய வாழ்க்கையில் உண்டாகும் சந்தோஷத்தையும் ஆறுதலையும் நாம் அறிந்துகொள்கின்றோம்.
கிறிஸ்தவ விசுவாசம் ஐக்கியத்தில் கட்டப்படுகின்றதாய் இருக்கின்றது. என்னால் தனியாக வளரமுடியும் என்று எந்த விசுவாசியினாலும் கூறமுடியாது. அது அப்படி இருக்கமுடியாது. நாம் ஆலயத்திற்கு தனியாக சென்று தனிமையில் ஜெபிப்பது நமது கவலைகளை, தேவைகளை, விருப்பங்களை ஆண்டவருக்கு முன்பாக இறக்கி வைத்துவிட ஏற்றதாக இருந்தாலும், நாம் கிறிஸ்தவ விசுவாசிகளுடன் கண்டுகொள்ளும் ஐக்கியத்தினால் மாத்திரமே விசுவாசத்தில் வளரக்கூடியதாக இருக்கும். இந்த கிறிஸ்தவ ஐக்கியம் என்னும் பாலமானது நாம் ஜெபத்திலே கேட்டுக்கொள்பவற்றைக் குறித்ததான ஒருமனப்பாடு என்னும் தூண்களாலேயே தாங்கப்பட்டிருக்கின்றது.
கிறிஸ்து இயேசுவுக்கு, இந்த அன்பின் ஐக்கியமும் ஒருமனப்பாடும் அவசியமாய் இருந்தது. இயேசு, இப்படியான ஐக்கியத்தின் மீதே தன் சபையைக் கட்டவும், அன்பின் ஊழியத்தைத் தொடரவும் ஊக்குவித்தார். இவ்வுலகத்தில் அவருடைய ஊழியம் நிறைவடைந்தபோது, உயிர்த்தெழுதலின் பின்னராக, இயேசு தம்முடைய சீஷரில் ஒருவனான பேதுருவைப் பார்த்து ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கின்றார், "என்னை நேசிக்கிறாயா?" என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: "ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்" என்றான். இயேசு: "என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்" (யோவான் 21: 17). ஒருமனப்பாட்டின் ஜெபமானது வெறுமனே ஐக்கியத்தின் பிரதிபலிப்பு அல்ல, மாறாக நாம் பகிர்ந்துகொள்ளும் கிறிஸ்தவ அன்பின் வெளிப்பாடாகும். கிறிஸ்துவை மையமாகக்கொண்ட இந்த அன்பினால்தான் நாம் ஒருவரை ஒருவர் உணர்ந்து, மற்றவருடைய சூழ்நிலைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் பரிதபிக்கக்கூடியதாக இருக்கிறது. இதனால், ஒரு விசுவாசியினால் கிறிஸ்துவின் அன்பை பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும், பிறரோடு அதை ஐக்கியத்திலே பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட அன்பின் முக்கிய வெளிப்பாடு ஒருமனப்பாட்டின் ஜெபமாகும். இந்த அன்பு மற்றும் ஒருமனப்பாட்டின் வெளிப்பாடுதான் சபைக்கு பிரதான தூணாக அமைகின்றது.
கிறிஸ்து இயேசு, ஒருமனப்பாட்டின் ஜெபத்தை கிறிஸ்தவ விசுவாசத்தின் வளர்ச்சிக்கும் நன்மைக்கும் பிரதானமான பகுதியாக்கியிருக்கிறார். கிறிஸ்துவின் இந்த சிந்தையை நாம் சுருக்கமாக, உங்கள் முழு இருதயத்தோடும் என்னில் அன்புகூறுங்கள், ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்துங்கள், ஒருமனப்படுங்கள், பின் ஜெபத்தில் ஒன்றிணையுங்கள் என்று கூறலாம். இதுதான் கிறிஸ்தவ ஐக்கியத்தில் சேர்ந்து வளர்வதற்கான அடிப்படை செயல்முறையாக இருக்கவேண்டும். ஒரு சிறுவர் குழாமாகவோ, வாலிபர் குழுவாகவோ, பெண்கள் அல்லது ஆண்கள் ஒன்றுகூடலாகவோ, வேதப்படிப்பு குழுவாகவோ, ஞாயிறு ஆராதனை வழிபாட்டில் கலந்துகொள்ளும் திருச்சபையாகவோ அல்லது பெரும் திரளான விசுவாசிகள் கூட்டமாகவோ இருந்தாலும், அன்பும் ஒருமானப்பாடுமே நம் தேவனாகிய கர்த்தரைப் பிரியப்படுத்துவதாய் இருக்கும். ஆகையால், கிறிஸ்து இயேசுவின் விசுவாசிகளாய் உண்மையான கிறிஸ்தவ ஐக்கியத்தை நாடுபவர்களாய், அன்பு மற்றும் ஒருமனப்பாடு எனும் இந்த அவசியமான இரு பகுதிகளில் நமது சிந்தைகளை வைக்க ஜாக்கிறதையுள்ளவர்களாய் இருக்கும்போது, கிறிஸ்து இயேசு நமக்கு நியமித்திருக்கும் ஆன்மீக விசுவாச உயர்வுக்கும் வளர்ச்சிக்கும் நம்மை வழிநடத்தும்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
🎶
"ஒரு மனமாய்"
by ஜோன் ஜெபராஜ், ஸ்டீபன் ஜெயக்குமார், டெறிக் போல்.