கர்த்தர் உங்களைப் பெயர்சொல்லி அழைக்கும்போது
இன்றைய வேதாகம வசனம்
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
(1 சாமுவேல் 3: 10)
எனது வாழ்விலே ஒரு பெரிதான மாற்றத்தையும் கர்த்தருக்கான அர்ப்பணிப்பையும் கொண்டுவந்த சில வார்த்தைகள் என்றால் அவை கடந்த நூற்றாண்டின் மாபெரும் சுவிசேஷகர்களில் ஒருவரான றெயின்ஹாட் பொன்கே (Evangelist Reinhard Bonnke) அவர்களின் வரிகளே. அவர் கூறியதாவது, "கடவுள் உங்களை அழைக்கும்போது, உங்களிடத்திலே என்ன திறன் உள்ளது என்பதல்ல முக்கியம், மாறாக நீங்கள் எந்த அளவுக்கு அவரின் அழைப்பின் குரலுக்கு ஆயத்தமாய் இருக்கின்றீர்கள் என்பதே மிக முக்கியம். கர்த்தரின் அழைப்பை 'ஆம்' என்று சொல்லி உடன் ஏற்றுக்கொள்ளுங்கள். பின்னர், ஒவ்வொன்றாக, நாள்தோறும், உங்களால் கூடுமான எல்லா விதத்திலும் கர்த்தரின் வழிநடத்தலுக்கு கீழ்ப்படிந்து நடவுங்கள்." இதுவே இன்று சாமுவேல் தீர்க்கதரிசியின் வாழ்வில் நடந்த இந்தவொரு சம்பவத்தை படிக்கும் நமக்கு கிடைக்கும் பெரிதானதொரு அழைப்பு.
இன்று இதை வாசித்துக்கொண்டு இருக்கும் உங்களில் பலர், ஆண்டவர் என்னை தன்னுடைய பணியைச் செய்ய அழைக்கவில்லையே என்று கூறக்கூடும். சில வேளைகளில் உங்கள் மனதில் "நான் அவரின் கிருபையையும், இரட்சிப்பையும், நித்திய வாழ்வையும் நம்பியே வாழப்போகிறேன், வேறே எதுவும் என்னால் ஒரு கிறிஸ்துவின் விசுவாசியாக செய்ய முடியாது" என்று சொல்லிக்கொண்டிருக்கலாம். இப்படியான உங்கள் சிந்தனைக்கு ஒரு மிகப்பெரும் 'இல்லை' என்ற மறுப்பே உள்ளது. ஏனெனில், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைத்து, தன்னைக் கிறிஸ்தவள்/கிறிஸ்தவன் என்று அடையாளம் காட்டி, கிறிஸ்துவை மையமாய்க்கொண்ட ஒவ்வொருவரும் கர்த்தருக்குப் பணிசெய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை மறவாதிருப்போம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திருப்பணி உண்டு. ஆகையால் கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனித்தனியே இத்திருப்பணிக்கு அழைக்கின்றார்.
1 சாமுவேல் 03 ம் அதிகாரமானது, கர்த்தர் சாமுவேலை அழைத்ததைக்குறித்தும் சிறியவனான சாமுவேல் ஒவ்வொருமுறையும் ஏலியிடம் சென்று "இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே" என்று சொல்வதையும் விளக்கமாய் சொல்கின்றது. இவற்றின் பின்னர், ஏலி, கர்த்தர் சாமுவேலைக் கூப்பிடுகின்றார் என்பதை அறிந்து, சாமுவேலை நோக்கி: "நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்" (1 சாமுவேல் 3: 8 - 10).
கர்த்தர் உங்களைப் பெயர்சொல்லி அழைக்கும்போது, இதற்கே நீங்கள் ஆயத்தமாய் இருக்கவேண்டும் - அவருடைய குரலைக் கேட்பதற்கே! கர்த்தர் நம்மை அழைக்கிறார் என்று தெரிந்தவுடன், நாம் செய்யவேண்டிய முதல் காரியம், அவரிடம் நம்மை ஒப்புக்கொடுத்து, "ஆண்டவரே நீர் பேசும், நான் கேட்க ஆயத்தம்" என்று கூறி கர்த்தரின் வசனத்துக்காய்க் காத்திருக்கவேண்டும். கர்த்தரின் உரையாடல் தொடர நாட்கள் எடுக்கலாம், பல மாதங்களாகலாம், ஏன் சில வருடங்கள் கூட கடக்கலாம். ஆனால் நிச்சயமாகவே தனக்குக் காத்திருக்கின்ற பிள்ளையோடு கர்த்தர் பேசுவார் ஏனென்றால் அவர் உங்களை அழைத்திருக்கின்றார். ஆனால், ஒரு நாள் ஆரம்பிக்கும் இந்த உரையாடலானது, நித்திய காலமாய்த் தொடரும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை.
இன்று, கர்த்தரின் குரலைக் கேட்க நீங்கள் எவ்வளவு ஆயத்தமாய் இருக்கின்றீர்கள்? அவரின் சத்தம் கேட்க உங்கள் செவிகள் எவ்வளவு கவனித்தும், அவர் பேசும் ஆராய்ந்து முடியாத இரகசியங்களை விளங்கிக்கொள்ள உங்கள் இருதயம் எவ்வளவு ஆயத்தமாயும் இருக்கின்றது என்பதை சிந்தித்துப்பார்ப்போம். ஏசாயா 45: 3 ல் "உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்" என்று கர்த்தர் வாக்களிக்கின்றார்.
நாம் ஒவ்வொருவரும் கர்த்தரின் சத்தத்தைக்கேட்க ஆயத்தமாகவேண்டும் என்று நான் வாஞ்சிக்கின்றேன். நாம் நினைப்பதைவிடவும் பெரிதான காரியங்களைக் கர்த்தர் நமது வாழ்வில் வைத்திருக்கின்றார். நாம் சிந்தித்துக்கூட பார்க்காத அளவுக்கு கர்த்தர் நமக்கென பணிகளையும் தரிசனங்களையும் வைத்திருக்கின்றார். மனித எண்ணங்களால் முடியாததும் கர்த்தரின் பார்வையில் இலேசானதாயும் இருக்கும் அநேக காரியங்கள் நம்முன் வைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு இதுவே நமக்கு கொடுக்கப்படும் அழைப்பு. கர்த்தரின் அழைப்புக்கு ஆயத்தமாய் இருப்போம். இந்த உரையாடல் நித்திய நித்தியமாய்த் தொடரும்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
🎶
"கர்த்தாவே உம் சத்தம்"
by
சாமுவேல் ஜோசப்
பென்னி ஜொஷுவா
music by
டேவிட் செல்வம்