கர்த்தரிடத்தில் திரும்புவதற்கான அழைப்பு

தொடர்
"கர்த்தரிடத்தில் திரும்புதல்"


இன்றைய வேதாகம வசனம்
இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; 
நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.
(ஓசியா 14: 01)


இன்றைய நாள் தியானத்தின் ஒலிப்பதிவை கேட்டவாறு வாசிக்கலாம்.
கீழ்க் காணப்படும் காணொளியை அழுத்தவும்.

நாம் கர்த்தருடைய பிரசன்னத்தை விட்டு தூரமாய் அலைந்து திரியும்போதும், கர்த்தருடைய பரிசுத்தத்தை தரிசிக்க முடியாதபடி நம்முடைய பாவங்களால் நாம் குற்றப்படுத்தப்படும்போதும் நாம் எதனை இழந்துவிட்டோம் என்பதை உணரமுடிகின்றது. நாம் கர்த்தரைவிட்டு தூரமாய் வந்திருப்பதை காண்கின்றோம். கர்த்தர் நம்முடன் எவ்வாறானதொரு மகிமையைப் பகிர்ந்துகொண்டார் என்பதையும், அதை நாம் அற்பமாக எண்ணியதையும் நாம் கண்டுகொள்கின்றோம். ஒரு கஷ்டத்தின் நிலைமையாகின்றது. கர்த்தரிடத்தில் நாம் எவ்வாறு திரும்புவது என்று அறியாது தவிக்கின்றோம். நம்மில் சிலர், இந்தக் குற்ற உணர்வின் காரணமாக ஜெபத்தைத் தவிர்க்கின்றோம். கர்த்தரிடத்தில் போய்ப் பேசவும் வெட்கப்படுகின்றோம். பரிசுத்த தேவனுக்கு முன்பாக போய் நிற்பதற்குத் தகுதியுடையவளா/தகுதியுடையவனா என்று கேள்வி கேட்கின்றோம். நாம் அடுத்த சில நாட்களுக்கோ, வாரத்திற்கோ, மாதத்திற்கோ பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்து பின்னர் கர்த்தரிடத்தில் திரும்புவோம் என தீர்மானிக்கின்றோம். ஆனாலும் மீண்டும் மீண்டும் தோற்றுப்போகின்றோம். இது, இன்று நம்மில் பலரின் நீண்ட வருட கால வாழ்க்கைக் கதையாக இருக்கலாம்!

வேதத்தின் அநேக இடங்களிலே, வெவ்வேறு சந்தர்ப்பங்களிலே, "திரும்பு" என்ற வார்த்தை, பாவத்தின் மத்தியில் வாழ்ந்தவருக்கு கிடைக்கும் ஒரு விழிப்பின் சத்தமாய் இருந்தது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமானால், யோவேல் 02: 13 ல் "நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்" என்று அழைக்கப்படுவதைக் காணலாம். சகரியா 01: 03 ல் "என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" என்பதை வாசிக்கின்றோம். யோபு 22: 23 ல் "நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்"என்பதைக் காண்கின்றோம். புலம்பல் 03: 40 ல் "நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்" என்றிருப்பதைக் காணலாம். எரேமியா 04: 01 ல் "இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்பதை வாசித்தறிகின்றோம். 

கர்த்தரிடத்தில் திரும்புதலே ஒரு பாவிக்கான முதலுதவி! இன்று கர்த்தரிடத்திலிருந்து நீங்கள் தூரப்போயிருப்பதாய் உணர்ந்தால், உங்களுக்கு இன்று கிடைக்கும் அழைப்பின் சத்தம் "கர்த்தரிடத்தில் திரும்புங்கள்!"

ஓசியா 14ம் அதிகாரமானது, கர்த்தரிடத்திலே நாம் திரும்பும்போது நினைவில் வைக்கவேண்டிய நான்கு முக்கிய காரியங்களை ஞாபகப்படுத்துகின்றது. ஓசியா 14: 02 ம் 03 ம் வசனங்கள் இப்படியாக சொல்லுவதை வாசிக்கலாம் - "வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம். அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்." கர்த்தருடைய கிருபையோடும் உதவியோடும் இந்த நான்கு காரியங்களைக்குறித்தும் பின்வரும் தலைப்புக்களில் ஒவ்வொன்றையும் குறித்து விளக்கமாக வருகின்ற நான்கு வாரங்களிலும் "கர்த்தரிடத்தில் திரும்புதல்" என்ற தியானத் தொடரை எழுத நான் விருப்பமாயிருக்கின்றேன். 

1. மனம்வருந்துதலின் வெளிப்பாடுடன் கர்த்தரிடத்தில் திரும்புதல்.
2. கர்த்தரின் கிருபையை நம்பி கர்த்தரிடத்தில் திரும்புதல். 
3. உதடுகளின் பலிகளோடு கர்த்தரிடத்தில் திரும்புதல்.
4. உலக சார்ந்திருத்தலை துறந்து கர்த்தரிடத்தில் திரும்புதல்.

இன்றைய தினம், "திரும்பு" என்பதே நமக்குக் கிடைக்கும் அழைப்பாய் இருக்கின்றது. இது உங்களுக்கே கொடுக்கப்பட்ட ஒரு விசேட அழைப்பாக இருக்கலாம். கர்த்தரிடத்திலே திரும்பி வருவதற்கு மனதில்லாமல் வெட்கப்பட்டு மனம் கசந்து இருக்கும் ஒரு நிலை இன்று உங்களில் இருக்கலாம். உங்களில் உள்ள பாவப்பாரமும் குற்றவுணர்வும் உங்களை கர்த்தரிடத்திலிருந்து தூரப்படுத்தலாம். கர்த்தரிடத்தில் திரும்புவதை தடுக்கலாம். ஆனாலும் கர்த்தரின் அழைப்பு இன்று தெளிவாய் உள்ளது. வேறு எதையும் நினைத்து வருந்தாமல், கர்த்தரிடத்திலே இன்றே திரும்புங்கள்! அதுவே ஒரே வழி. அதுவே பாவத்திலிருந்து மீள்வதற்கு முதல் படி. எதிர்வரும் வாரங்களில் கர்த்தரிடத்தில் நீங்கள் திரும்புவதற்கு இந்த தியானங்கள் உதவியாய் இருக்கும் என நான் ஜெபிக்கின்றேன். அகன்று விரிந்த கரங்களோடு உங்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருக்கும் கர்த்தரின் கிருபையான அன்பு உங்கள் சிந்தையில் பதிந்திருக்கட்டும். 

நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக்  கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்

🎶
"திரும்பிப் போகிறேன்"
by 
கோட்சன் GD


Global Reach of 'Weekly Devotions with Ebenezer'

Like and Follow Our Facebook Page For Regular Updates

Like and Follow Our Facebook Page For Regular Updates
Click on the picture above to reach our FB page

Popular Posts