மனம்வருந்துதலின் வெளிப்பாடுடன் கர்த்தரிடத்தில் திரும்புதல்
தொடர்
"கர்த்தரிடத்தில் திரும்புதல்"
"கர்த்தரிடத்தில் திரும்புதல்"
இன்றைய வேதாகம வசனம்
"வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்;
அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும் [...] என்று சொல்லுங்கள்."
(ஓசியா 14: 02)
இந்த வாரத்தில், "கர்த்தரிடத்தில் திரும்புதல்" என்ற தொடரின் முதல் பகுதியை தியானிக்க நினைக்கும்போது, நாம் மனம்வருந்துதலின் வெளிப்பாட்டுடன் கர்த்தரிடத்தில் திரும்பும்படி அழைக்கப்படுகின்றோம் என்பது நம் நினைவுக்கு வருகின்றது. கர்த்தரிடத்திலிருந்து விலகிச் சென்ற பின், அவரிடத்தில் மீண்டும் திரும்புவது என்பது நாம் இலகுவில் செய்துவிடக்கூடிய காரியம் என்று நாம் நினைத்தாலும், அதில் நமது நேர்மையான சில முயற்சிகளும் அடங்குகின்றன என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு அனாதையாய், பாவத்தின் பாரத்தால் கஷ்டப்பட்டு, கர்த்தரிடத்திலிருந்து தூர நிற்பதைவிட, அகன்று விரிந்து அரவணைக்க ஆயத்தமாய் இருக்கும் கர்த்தரின் கரங்களுக்குள்ளே திரும்பி ஓடி வந்து சேருதலானது, நமது வாழ்விலும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுவதாய் அமையவேண்டும். இந்த நிரந்தர மாற்றத்துக்குக் ஒரு முக்கிய காரணமாய் அமைவது, நமது பாவத்துக்கான நமது மனம் வருந்துதலாகும். நாம் கர்த்தரிடத்தில் திரும்புவதை நினைவில் வைக்கும்போது, எப்படி திரும்புகின்றோம் என்பதும், இந்த திரும்புதல் நமது வாழ்வில் எப்படியானதொரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பதையும் மனதில் கொள்ளுதல் அவசியமாகும்.
ஓசியா 14: 02ம் வசனமானது "வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்" என்று கூறுகின்றது. இவை மனம் வருந்துதலுக்கான வார்த்தைகள். இவை, நம் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கும் வெளிப்பாடுகளும் ஆகும். இவை, நாம் ஆண்டவருடைய அன்பும் கிருபையும் நிறைந்த பிரசன்னத்துக்குள்ளே ஓடும்போது, அவரை நோக்கி நம்மேல் இரங்கும்படியாக நாம் கேட்கும் வார்த்தைகளுமாகும். நாம் ஆண்டவரிடத்தில் திரும்பும்போது வார்த்தைகளோடு வர அழைக்கப்படுகின்றோம். நாம் ஆண்டவரிடத்தில் திரும்பும்போது, உணர்வுகளோடு மட்டுமல்ல, மாறாக, மனம் வருந்துதலுக்கும் ஆண்டவர் மேல் வைத்திருக்கும் விசுவாசத்திற்குமான வார்த்தைகளோடெ செல்லவேண்டும்.
நமது ஆண்டவர் நம்மை, மனதின் உணர்வுகளோடு மட்டுமல்லாது, அவ்வுணர்வுகளை வெளிப்படுத்தும் திறனுடனும் நம்மைப் படைத்திருக்கின்றார். ஆகையால், நாம் அவரிடத்தில் வரும்போது, நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளோடு வர அழைக்கப்படுகின்றோம். நாம் ஆண்டவரை துதிக்க ஆராதிக்க அவருடைய பிரசன்னத்துக்குள் வரும்போது, நாம் வெறுமனே மனதின் உணர்வுகளோடு இருந்துவிடுவதில்லை. நாம் வார்த்தைகளின் வெளிப்பாடினாலே, வரை நேசிக்கின்றோம் வணங்குகின்றோம் என்று தெரியப்படுத்துகின்றோம். அதுபோலவே, நாம் மனம்திரும்புதலோடு கர்த்தரிடத்தில் வரும்போது, வார்த்தைகளோடு திரும்ப அழைக்கப்படுகின்றோம்.
ஓசியா 14ம் அதிகாரத்தின் அதே வசனம் (02) நம்மை "அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்" என்று வழிநடத்துகின்றது. இதுவே மனம் வருந்துதலுக்கான மிகவும் பொருத்தமான வெளிப்பாடாக அமைகின்றது. "தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி...", என்று நாம் கேட்கும்போது, முதலாவது நாம் அக்கிரமத்தை செய்திருக்கின்றோம் என்றும், இரண்டாவது அவை அநேகம் என்பதையும், கடைசியாக கர்த்தரிடத்தில் மன்னிப்புக்காக கெஞ்சி நிற்கின்றோம் என்பதையும் அறிக்கையிடுகின்றோம். இந்த மூன்று அறிக்கையும் இந்த ஒரு சொற்றொடரிலே வேரூன்றியிருப்பதை நாம் காண்கின்றோம்.
ரோமர் 10: 08-10 வசனங்களில், அப்போஸ்தலனாகிய பவுல் இதே சிந்தனையை இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணுவதைப்பற்றி கூறுகையிலும் காண்கின்றோம். பவுல் சொல்லுவதாவது, "இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." இதுவே நாவின் அறிக்கையினதும் வெளிப்படினதும் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் இன்னுமொரு தருணம்.
இன்று, மனம்வருந்துதலின் வார்த்தைகளோடு கர்த்தரிடத்தில் திரும்புதலுக்கான அழைப்பு நமக்கு தெளிவாகின்றது; இவையே நாம் பாவமன்னிப்புக்காக கெஞ்சுகின்றோம் என்பதின் வெளிப்பாடாகும். நம்மை எப்பொழுதும் ஏற்று அரவணைக்க ஆயத்தமாய் இருக்கும் ஆண்டவரிடத்தில் நிச்சயத்தைக் காண்போமாக.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
🎶
"நான் நானாகவே வந்திருக்கிறேன்"
by
ரவி பாரத்