கர்த்தரின் கிருபையை நம்பி கர்த்தரிடத்தில் திரும்புதல்.
தொடர்
"கர்த்தரிடத்தில் திரும்புதல்"
இன்றைய வேதாகம வசனம்
"வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்;
அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும் [...] என்று சொல்லுங்கள்."
(ஓசியா 14: 02)
கடந்த சில வாரங்களாக, கர்த்தரிடத்தில் திரும்புதலைக் குறித்து தொடராக தியானித்து வருகிற நமக்கு இந்த வாரம் கர்த்தருடைய கிருபை நினைவுபடுத்தப்படுகிறது. நாம் கர்த்தருடைய என்றும் மாறாத கிருபையில் தங்கி கர்த்தரிடத்தில் திரும்ப அழைக்கப்படுகின்றோம். இந்த அழைப்பின் வார்த்தையானது வழக்கமாக நாம் கேட்கும் ஒரு அழைப்பாக இருக்கலாம் ஆனாலும், அந்த அழைப்பு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. கர்த்தர் கிருபையின் ஊற்றாக இருக்கிறார் என்பதை நாம் முழுவதுமாக ஏற்றுக்கொண்டால்தான் நம்மால் கர்த்தரிடத்தில் திரும்பமுடியும். கர்த்தருடைய கிருபையின் நிச்சயம் தான், கர்த்தருடைய பார்வையில் நமக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை உணர்த்தி அவரிடத்தில் நம்மை திரும்பச் செய்கிறது.
நாம் கர்த்தரிடத்தில் திரும்பும்போது நம்முடைய பாவங்களை கர்த்தர் மன்னிக்கும்படியான வார்த்தைகளோடும், அவர் நம்மைக் கிருபையாய் ஏற்றுக்கொள்ள நாம் வேண்டி நிற்கும் வார்த்தைகளோடும் கர்த்தரிடத்தில் திரும்பவேண்டும் என்று ஓசியா 14:2 நமக்கு நினைவுபடுத்துகிறது. "வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும் [...] என்று சொல்லுங்கள் என்று எழுதியிருப்பதைப் பார்க்கின்றோம். கடந்த வாரம், நம்முடைய தியானமானது கர்த்தரிடத்தில் நாம் நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிக்கும்படியாக வெளிப்படுத்தும் வார்த்தைகளைப்பற்றியதாயிருந்தது. இன்றைய நாளில் நம்முடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும்போது நாம் பெற்றுக்கொள்ளும் கிருபையைப் பற்றி தியானிக்க அழைக்கப்படுகிறோம். கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் என்று சங்கீதப் புத்தகம் நமக்குக் கூறுகின்றது (சங்கீதம் 103:08). அதேபோலவே, யோவேல் 02:13 ல், சங்கீத புஸ்தகத்தில் நமக்கு நினைவுபடுத்தப்படும் விடயத்தோடு இணைந்ததாக அதே அழைப்பைப்பற்றி இருப்பதை நாம் காண்கிறோம். அந்த வசனமானது, "நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்" என்ற நிச்சயத்தை நமக்குக் கூறுகின்றது. ஓசியாவிலும் சங்கீத புஸ்தகத்திலும் "திரும்பு, " "உங்கள் பாவங்கள்", "கிருபையுள்ள கர்த்தர்" என்ற வார்த்தைகள் மிகவும் முக்கியமானவையாக இருப்பதை நாங்கள் காணலாம்.
நாம் நம்முடைய சொந்த பெலத்தில் அல்ல மாறாக கர்த்தருடைய கிருபையில் தங்கியே அவரிடத்தில் திரும்புவதற்கு அழைக்கப்படுகின்றோம். நாம் கடந்த வாரத்தில், எவ்வாறு பாவமன்னிப்பின் வார்த்தைகளோடு கர்த்தரிடத்தில் திருப்புதலைக் குறித்த்துப் பார்த்தோமோ, அதேபோலவே இவ்வாரமும் கர்த்தர் எம்மை ஏற்றுக்கொண்டு கிருபையினால் அரவணைக்க வேண்டி அவரிடத்தில் சேர நினைவுபடுத்தப்படுகின்றோம். நிச்சயமாகவே, கிருபையால் நம்மை ஏற்றுக்கொள்ள நம் கர்த்தர் ஆயத்தமாக இருக்கிறார். நாம் எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலுமிருந்து கர்த்தரிடத்தில் திரும்ப ஆயத்தமாக இருக்கிறோமா? நாம் கர்த்தருடைய கிருபையில்தாமே தங்கி அவரிடத்தில் திரும்புவோமாக.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
🎶
"கிருபை புரிந்தெனை ஆள்"
by
பென்னி ஜொசுவா