உதடுகளின் பலிகளோடு கர்த்தரிடத்தில் திரும்புதல்
தொடர்
"கர்த்தரிடத்தில் திரும்புதல்"
"வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்."
(ஓசியா 14: 02)
உதடுகளின் பலிகளோடு கர்த்தரிடத்தில் திரும்புதலே நாம் தொடர்ச்சியாக தியானித்துவரும் "கர்த்தரிடத்தில் திரும்புதல்" என்னும் தொடரின் மூன்றாவது தியானமாகும். கடந்த வாரங்களில் ஓசியா 14 ம் அதிகாரத்தினை நாம் மீளவும் தியானிக்கையில் இந்த வசனத்தின் ஆழங்கள் நம்மைக் கிறிஸ்துவினிடம் கொண்டு சேர்ப்பதாய் அமைகின்றன என நான் விசுவாசிக்கின்றேன்.
உதடுகளின் பலிகளோடு கர்த்தரிடத்தில் திரும்ப நாம் அழைக்கப்படுகின்றோம். உதடுகளின் பலிகள் என்றால் என்ன? ஓசியாவின் வார்த்தைகளில் இந்த பலியானது காளை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசியா தீர்க்கதரிசியின் காலங்களில் காளைகளே பலிகளாக அதிகம் செலுத்தப்பட்டு வந்ததை மனதில் கொண்டு, பலிகளையே ஓசியா குறிப்பிட்டுள்ளார் என்பதை நாம் விளங்கிக்கொள்ளக் கூடியதாய் உள்ளது. ஆகையால், கர்த்தரிடத்தில் நாம் திரும்பும்போது நமது உதடுகளின் பலிகளாகிய துதி, ஆராதனை, பாவமன்னிப்பு, மன்றாடல் போன்றவற்றோடு நாம் கர்த்தரண்டையில் கிட்டிச் சேர அழைக்கப்படுகின்றோம்.
வேதத்தின் பல இடங்களில், விஷேடமாக பழைய ஏற்பாட்டிலே, பலியிடுவதானது ஆராதனையையும் ஒப்புக்கொடுத்தலையும் உணர்த்தி நிற்பதை நாம் காணலாம். இதுபோன்றே, கர்த்தரிடத்தில் திரும்பும்போது, நாமும், துதி, ஆராதனை, மன்னிப்பு, மன்றாடல், ஒப்புக்கொடுத்தல் ஆகிய இவைகளோடு கர்த்தரின் பிரசன்னத்திற்குள் வருவோமாக.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
🎶
"என் முழுமையும் உமக்குத்தான்"
by
ரொபேட் றோய்