இடுக்கண்களின் காலங்களைத் தாண்டுதல்


"நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்."

(யோசுவா 01: 09)


இதுவரை என் வாழ்க்கையில், கடினமான சூழல்களைக் கடந்து செல்லும் என் அன்பிற்குரியவர்களுக்குப் பக்கபலமாக நிற்கும் வாய்ப்பு எனக்குக் அதிகம் கிடைத்துள்ளது. அவர்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்று நான் அவர்களை ஆர்வத்துடன் ஊக்கப்படுத்தியிருக்கிறேன்; தேக்கமடையாமல் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல அவர்களை உந்தித்தள்ளியிருக்கிறேன். இருப்பினும், அதே போன்ற கடினமான தருணங்கள் என் சொந்த வாழ்க்கையில் வந்தபோதோ, நான் நிலைகுலைந்து போனேன். நான் தேக்கமடைந்தேன். என் கண்களுக்குத் தெரிந்தவற்றிற்கு அப்பால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப எனக்கு உதவி தேவைப்பட்டது. இந்த அனுபவமானது, இடுக்கண்களின் மத்தியில் தப்பித் பிழைப்பது பற்றிய நமது நம்பிக்கைகளைப் பேணுவதும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும் எளிதாகத் தோன்றினும், அந்த நம்பிக்கைகளை வாழ்வில்  நடைமுறைப்படுத்துவது என்பது மிகக் கடினமானது என்பதை இது எனக்குப் புரியவைத்தது. எனவே, இந்த நம்பிக்கை பற்றிய சில கேள்விகளுக்கான பதில்களை அறிவது எமது ஆவிக்குரிய வாழ்வுக்கு மிகவும் உதவுவதாக அமையும்.

நம்மைத் தொடர்ந்து இயங்க வைப்பது எது? வாழ்க்கையின் கடினமான தருணங்களைத் தப்பிப்பிழைத்து வெற்றிபெற நமக்கு உதவுவது எது? இறுதியாக, நாம் பிழைப்போம் என்ற நம்பிக்கையை நமக்குத் தருவதும், இந்த நம்பிக்கையில் நடைமுறை உறுதியுடன் இருப்பதற்கான பலத்தை நமக்கு அளிப்பதும் எது? இதற்கான பதில்களை நாம் யோசுவா 1:09-இல் காண்கிறோம். அங்கே தேவனிடமிருந்து ஒரு கட்டளை வருகிறது; அந்த கட்டளைக்குள் ஒரு பெரிய அழைப்பு மறைந்திருப்பதை நாம் காண்கிறோம். பின்னர், பலமாகவும் தைரியமாகவும் இருக்க ஒரு நினைவூட்டல்; பயத்திலிருந்து விலகி, சோர்ந்து போகாமல் ஊக்கம் பெற ஒரு அழைப்பு; இறுதியாக, அவருடைய நித்திய பிரசன்னத்தின் உறுதிமொழி. இந்த வசனத்தில் உள்ள மூன்று கூறுகளையும் பற்றி விரிவாக தியானிக்க விரும்புகிறேன் - தேவனின் கட்டளை, அவரது நினைவூட்டல் மற்றும் கடினமான காலங்களுக்கான உறுதிமொழி.

தேவன் நம்மைப் பலங்கொண்டு திடமானதாயிருக்க கட்டளையிடுகிறார்

வாழ்க்கை எப்போதும் எளிதாக இருக்கும் என்றோ அல்லது நமது பயணம் எப்போதும் சீராக இருக்கும் என்றோ தேவன் கூறவில்லை. இருப்பினும், நாம் வாழ்க்கையின் இடுக்கண்களின் தருணங்களைக் கடந்து செல்லும்போது, நம்மைச் சுற்றியுள்ள இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், கர்த்தருக்குள் நாம் காணும் உறுதியுடன் பலங்கொண்டு திடமானதாயிருக்க நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. "நான் உனக்குக் கட்டளையிடவில்லையா?" என்று தேவன் கூறுகிறார். நாம் தொடர்ந்தும் தியானிப்பதற்கு முன், கட்டளை என்ற வார்த்தையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பலங்கொண்டு திடமானதாயிருப்பது தேவனின் கட்டளையாகும். அடிவானத்தில் ஒரு புயல் உருவாவதை நாம் காணும் தருணங்களிலும், கடினமான காலங்கள் வரப்போவதை நாம் உணரும்போதும், பயம் ஒரு இருண்ட மேகத்தைப் போல நம்மைச் சூழ்ந்து கொள்ளும்போதும், நமது தளபதியாகிய கர்த்தர் இட்ட கட்டளையை நாம் நினைவுகூர வேண்டும். கர்த்தரின் கட்டளையானது பலங்கொண்டு திடமானதாயிருப்பது இருப்பதே ஆகும், ஏனென்றால் நம்முடைய தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறார்.

பயப்படாமலும் கலங்காமலும் இருக்க தேவன் நமக்கு நினைவூட்டுகிறார். 

"திகையாதே, கலங்காதே" என்று கர்த்தர் நினைவவூட்டுவதைக் காண்கின்றோம். தேவன் நம்மேல் அக்கறை கொண்டுள்ளார். நாம் மனிதர்கள் என்பதை அவர் நினைவில் வைத்திருக்கிறார். நாம் பலவீனமானவர்கள் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். நாம் எளிதில் மனச்சோர்வடைவோம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். நமது பலவீனங்களை நன்கு அறிந்த நம் அன்புள்ள கர்த்தர், நம்மிடம் உள்ள அனைத்தையும் ஆக்கிரமிக்கக்கூடிய இரண்டு விஷயங்களைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டுள்ளார் - அவை பயம் மற்றும் மனச்சோர்வு. வரவிருக்கும் கடினமான காலங்களைக் கண்டு பயப்பட வேண்டாம் என்று தேவன் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பயத்திலிருந்து விலகி அவர் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எந்தவிதமான மனச்சோர்விலிருந்தும் நாம் விலகி இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கடந்த காலங்களில் நாம் கடினமான காலங்களை எதிர்கொண்டபோது அவர் செய்த வல்லமையான செயல்களை மறக்காமல், ஊக்கத்துடன் இருக்க அவர் நம்மை அழைக்கிறார்.

கடினமான தருணங்களில் தேவன் தனது பிரசன்னத்தை நமக்கு உறுதிப்படுத்துகிறார். 

"நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்ற நிச்சயத்தை நாம் வாசிக்கின்றோம். கடினமான காலங்களை எதிர்கொள்ள நாம் தயாராகும் போது, நம்மிடம் உள்ளவற்றைக் கணக்கிடுவது எளிதல்ல. நம்மைச் சுற்றியுள்ள பொருட்களுக்கு மதிப்பீடு செய்யும் நேரமும் அதுவல்ல. அத்தகைய நேரங்களில், பயத்தினாலும் மனச்சோர்வினாலும் நாம் மூழ்கடிக்கப்படுகிறோம், உதவிக்கு எங்கு செல்வது என்று நமக்குத் தெரிவதில்லை. நமது விலையேறப்பெற்ற இரட்சகரும் புகலிடமுமான தேவன், நம்மைப் பலமாகவும் தைரியமாகவும் இருக்கக் கட்டளையிட்டு, பயம் மற்றும் மனச்சோர்விலிருந்து விலகி இருக்க நினைவூட்டுவது மட்டுமல்லாமல், வரவிருக்கும் புயலுக்கு மத்தியிலும் தனது பிரசன்னத்தை நமக்கு உறுதிப்படுத்துகிறார். தேவன் நம்மோடு இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! இந்த ஒரு உறுதிமொழி, ஏற்கனவே நம்மோடு இருப்பவர், நம்மை நெருங்கி வரும் சூழ்நிலையை விட மிகப் பெரியவர் என்பதை அறிய நமக்கு உதவுகிறது. கர்த்தர் நமக்கு எவ்வளவு பெரிய நிச்சயத்தைத் தருகிறார்!

நாம் தேவனோடு நெருங்கி நடக்கும்போது, மீண்டும் ஒருமுறை யோசுவா 1:09-ஐத் திரும்பிப் பார்க்க உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். நமது பிதாவாகிய தேவன் நமக்குக் கொடுத்துள்ள கட்டளை, நினைவூட்டல் மற்றும் நிச்சயத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். அடுத்த முறை, உங்கள் கப்பலில் இருந்து அடிவானத்தில் ஒரு புயல் உருவாவதைக் காணும்போது, உங்கள் மாலுமியின் உபகரணப் பெட்டியிலிருந்து இந்த மூன்று கருவிகளையும் எடுக்க ஓடுங்கள். பலங்கொண்டு திடமனதாயிரு என்ற தேவனின் கட்டளையையும், திகையாதே, கலங்காதே, என்ற நினைவூட்டலும், நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்ற நிச்சயமும் உங்களைத் தாங்குவதாக.

நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக்  கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் பி. வீரசிங்கம்


"எழும்பி வரும் புயல்களிலே"
by Benny John Joseph & Anne Cinthia




Subscribe

Subscribe
Subscribe to the Weekly Devotions with Ebenezer WhatsApp Channel to receive weekly updates

Popular Posts