நீங்கள் காத்திருக்கும் குணமாக்குதல்



"அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது."
(அப்போஸ்தலர் 03: 16)

ஆரம்பகால கிறிஸ்தவ சகாப்தத்தின் மற்றொரு சாதாரண மதிய நேரம் அது. பேதுருவும் யோவானும் தங்களுடைய ஜெப நேரத்திற்காக தேவாலயத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் 'அலங்கார வாசல்' என்று அழைக்கப்பட்ட நுழைவாயிலைக் கடந்தபோது, தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷன் அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். பிச்சை எடுப்பதற்காக அவன் தினமும் அங்கே சுமந்து வரப்படுவது வழக்கம். அந்த மனுஷன் பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். அவர்களோ அவனை உற்று நோக்கினார்கள்.

'அப்போஸ்தலருடைய நடபடிகள்' புத்தகம் அந்த நிகழ்வை இவ்வாறு விவரிக்கிறது: "அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். (அப்போஸ்தலர் 3:6-8).

நிச்சயமாக இது நம் கண்கள் காண ஏங்கும் ஒரு நிகழ்வு. இத்தகைய வல்லமையானதும் அற்புதமானதுமான தருணங்களைக் காண நாம் வாஞ்சிக்கிறோம். இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, நமது சொந்த வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை நாம் நினைவு கூர்கிறோம். அந்த இடத்தில் நம்மை கற்பனை செய்து பார்க்கிறோம். நாம் எவற்றோடு போராடிக்கொண்டிருக்கிறோம் என்று யோசிக்கிறோம். மாதக்கணக்காக அல்லது பல ஆண்டுகளாக நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உடல் ரீதியான அல்லது மன ரீதியான குணமாக்குதலை நினைவுபடுத்துகிறோம். நீண்ட காத்திருப்பால் சோர்ந்து, "சாத்தியமற்றது" என்ற எண்ணங்களால் பாரப்பட்டு அங்கே நிற்பதை உணர்கிறோம். "இப்படிப்பட்ட ஒரு தருணம் என் வாழ்க்கையில் எப்போது வரும்?" என்று நாம் கேட்கலாம்.

அந்தச் சப்பாணி குதித்து நடந்ததைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளிலும் உரையாடல்களிலும், சுகமடைவதைப் பற்றிய இரண்டு ஆன்மீகப் பாடங்களைக் காண்கிறோம். நம் வாழ்வில் மிகவும் தேவைப்படும் சுகத்திற்காக நாம் கர்த்தருக்காகக் காத்திருக்கும்போது, இந்த இரண்டையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

அதே பகுதியைத் தொடர்ந்து வாசிக்கும்போது, "அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்" (அப்போஸ்தலர் 3:8-10) என்று அறிகிறோம்.

மக்கள் ஆச்சரியப்பட்டதில் வியப்பில்லை, 'ஸ்தம்பித்துப் போனார்கள்' என்பதே சரியான வார்த்தையாக இருக்கும்! இயற்கையின் விதிகளால் ஆளப்படும் சாதாரண வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று யார் தான் நம்புவார்கள்? அங்கே விவாதங்களும் தர்க்கங்களும் எழுந்தன. அதன் பிறகு, பேதுரு சபையின் முதல் பிரசங்கத்தை ஆற்றினார். சுகமளிப்பதைப் பற்றி பேதுருவின் வார்த்தைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த பாடம் இதுதான்: "...அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது" (அப்போஸ்தலர் 3:16).

ஆம்! இயேசுவின் நாமமும், மற்றும் அவர் மூலமாக வரும் விசுவாசமுமே ஆகும்!

பேதுரு இயேசுவை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்தவர். அவருக்கு அருகிலேயே நின்று, அவர் இரக்கத்துடன் சுகமளிப்பதைக் கண்டு, இயேசுவைப் புரிந்து கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக, சுகமளிப்பதற்கு 'விசுவாசமே' மையப்புள்ளி மற்றும் திறவுகோல் என்ற உண்மையை இயேசு மீண்டும் மீண்டும் கூறுவதை பேதுரு கேட்டிருக்கிறார்.

மத்தேயு 9:22-ல் இயேசு, "மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்கிறார்.

மத்தேயு 15:28-ல், "ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது" என்கிறார்."

மாற்கு 5:34-ல் இயேசு, "மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு" என்கிறார்.

மாற்கு 10:52-ல், பார்வையற்ற மனுஷனிடம், நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்கிறார்.

லூக்கா 5:20-ல், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தங்கள் நண்பனை இயேசுவிடம் கொண்டு வர முடியாமல், கூரையைப் பிரித்து படுக்கையோடு இறக்கிய நண்பர்களைப் பற்றி வாசிக்கிறோம். லூக்கா சுவிசேஷம் இந்த சம்பவத்தை விவரிக்கும்போது "அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்" என்று நமக்கு அறிவிக்கின்றது.

இன்றும் கூட, இயேசு அந்த விசுவாசத்தைத்தான் உங்களிடம் தேடுகிறார்! ஆம், இயேசு உங்களுடன் கூடவே இருக்கிறார், ஆனால் அவர் மூலமாக வரும் அந்த விசுவாசத்தைப் பெற்று அதை உங்கள் வாழ்வில் பெறுமதியானதாய் வைத்திருக்கின்றீர்களா?

ஆண்டவர் இன்று நமக்குக் கொடுக்கும் பெரிய அழைப்பு இதுதான். தேவன் நம்மைச் சுகப்படுத்துவார் என்று நாம் காத்திருக்கிறோம். ஆம், நாம் ஜெபித்திருக்கிறோம். இயேசுவின் நாமம் நம் மேல் இருக்கிறது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஆனால் நம் விசுவாசம் எங்கே?

இன்று நாம் தேவன் முன்பாக நின்று அவரின் குணமாக்குதலுக்காக  ஜெபிக்கும்போது, நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அந்த அற்புத சுகத்தின் இரண்டு கூறுகளை நினைவில் கொள்வோம்: அது இயேசுவின் நாமும் அவர் மூலம் நாம் பெறும் விசுவாசமுமே ஆகும். எனவே, இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிப்போம்! நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த அற்புத சுகம் இன்று உங்கள் வாழ்க்கையில் நிகழும்.

இயேசுவின் நாமத்தில் ஜெபியுங்கள். விசுவாசத்துடன் ஜெபியுங்கள். அற்புத சுகத்திற்காக நீங்கள் ஜெபிக்கும்போது இவற்றை உணர்வுப்பூர்வமாக நினைவில் கொள்ளுங்கள்!

நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக்  கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் பி. வீரசிங்கம்



"இயா-ஒ-மாய்... சுகம் தரும் தெய்வமே"
by Evang. David Vijayakanth & Dr. Jacinth David



Subscribe

Subscribe
Subscribe to the Weekly Devotions with Ebenezer WhatsApp Channel to receive weekly updates

Popular Posts