வந்த வழிகளை திரும்பிப் பார்க்கும்போது


அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபனேசர் என்று பேரிட்டான்.

 - 1 சாமுவேல் 7: 12 - 

ஒவ்வொரு முறையும் 'எபனேசர்' என்ற வார்த்தையை நான் வாசிக்கும்போதோ அல்லது கேட்கும்போதோ, மெய்யாகவே என் இதயம் ஒரு கணம் மிகையாக  துடிக்கிறது. ஏனெனில், அந்த வார்த்தை என் பெயரின் ஒரு பகுதியாக இருப்பதோடு, இதுவரை அந்தப் பெயர் என்னைத் தாங்கி நடத்தியும் வந்திருக்கிறது! இந்த வார்த்தையுடனான எனது தனிப்பட்ட மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பைக் கடந்து சிந்தித்தால், 'எபனேசர்' என்பது வல்லமைமிக்க ஒரு வார்த்தையாகும்; அந்த வார்த்தையை உச்சரிக்கும்போதோ அல்லது கேட்கும்போதோ, அது நம் இதயங்களில் நன்றியுணர்வையும் ஸ்தோத்திரத்தையும் கண்ணீராகக் கொண்டுவருகிறது. நாம் கடந்து வந்த பாதையை எபனேசர் நமக்கு நினைவூட்டுகிறது. நம் வாழ்வின் மிகத் தாழ்ந்த நிலையில் தேவன் நம்மைக் கண்டுகொண்ட தருணத்தை எபனேசர் நினைவூட்டுகிறது. நம் வாழ்வில் தேவன் செய்த உதவியை எபனேசர் நினைவூட்டுகிறது. நமக்கு முன்பாக இருக்கும் பாதையை நோக்கி நாம் பார்க்கும்போது, நம் வாழ்வில் நமக்குள்ள உறுதியான நம்பிக்கையை எபனேசர் நினைவூட்டுகிறது. நம் வாழ்வில் தேவனுடைய உண்மையுள்ள தன்மையை எபனேசர் நினைவூட்டுகிறது.

மிஸ்பாவுக்கும் சேனுக்கும் இடையில் சாமுவேல் நிறுவிய அந்த கல்லின் அருகே நாம் நிற்பதாகக் கற்பனை செய்து பார்த்தால், அவருடன் இணைந்து ஒரே குரலில், 'மெய்யாகவே, இதுவரைக்கும் கர்த்தர் நமக்கு உதவி செய்தார்!' என்று சொல்ல முடியும். நாம் அப்படிச் சொல்லும்போது, தேவைப்படும் காலங்களில் நமக்கு உதவும் என்று நாம் நம்பியிருந்த உலகப்பற்றுகளைப் பற்றி நாம் நினைவு கூருகிறோம். அது நம் கல்வியாகவோ, வேலையாகவோ, செல்வமாகவோ, சேமிப்பாகவோ, காப்பீட்டுத் திட்டமாகவோ, முதலீடுகளாகவோ அல்லது நம்மைச் சுற்றியுள்ள செல்வாக்கு மிக்க மனிதர்களாகவோ இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும், ஆம், இவை ஒவ்வொன்றும் நம்மை மீண்டும் எழுந்து நிற்கச் செய்ய முடியாமல் தோற்றுப்போன தருணங்களை நாம் திரும்பிப் பார்க்க முடியும். அந்த நேரங்களில் ஆண்டவரின் சமுகமும், அவருடைய தூக்கிவிடும் கரங்களும், அவருடைய அன்பான அரவணைப்பும் மட்டுமே நம்மைச் சூழ்ந்து நின்று, நாம் மீண்டும் உறுதியாக நிற்க உதவியது!

இதுவே 'எபனேசர்' என்பதன் உண்மையான அர்த்தம். இதுவரை கர்த்தர் நமக்கு உதவி செய்தார் என்பதை நாம் திரும்பிப் பார்த்து உணரும்போது, நாம் மிகவும் தாழ்ந்த நிலையில், வழுக்கி விழுந்து, அவமானப்பட்டு, உதவியற்றுக் கிடந்தபோது ஆண்டவர் நம்மைக் கண்டுகொண்ட அந்தத் தாழ்வின் தருணங்களின் நினைவுகள் நம்மை நிரப்ப வேண்டும். அங்கிருந்து, சாமுவேலுக்கு அருகே நின்று நன்றியுள்ள இதயத்தோடு ஆண்டவரைத் துதிக்கும் இந்த இடத்திற்கு நம் பயணத்தில் வந்து சேர அவர் நமக்கு உதவி செய்து வருகிறார். 

ஆண்டவர் தொடர்ந்து நமக்கு உதவி செய்து நம்மை வழிநடத்துவார். முடிவில்லாத நம் பாதையில் முன்னோக்கிப் பார்க்கும்போது நமக்குள்ள உறுதி இதுவே. இந்தப் பாதை நம்மை நித்திய ஜீவனுக்குள் நடத்துகிறது, அந்த வழி நெடுகிலும் ஆண்டவர் நமக்குத் துணையிருப்பார். ஒரு நாள், நமது உலக வாழ்க்கை முடிந்து, பரலோக நித்தியம் தொடங்கும் தருணத்தில் நாம் நிற்கும்போது, மீண்டும் ஒருமுறை நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, 'எபனேசர்! இதுவரைக்கும் கர்த்தர் நமக்கு உதவி செய்தார்' என்று சொல்லுவோம்."

நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக்  கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் பிறேமன் வீரசிங்கம்



"வந்த வழிகளை நினைக்கின்றபோது 🎶"
by வினீதா பிரின்ஸ்



Topics Popular Among the Readers