நிறைந்த தொட்டிலுக்கும் வெற்றுக்கல்லறைக்கும் இடையே
"அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்."
- (மத்தேயு 28: 06) -
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறந்த அந்த இரவில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் கவனத்துடன் நினைவுகூருவோம். வயல்வெளியில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை இரவுநேரத்தில் காத்துக்கொண்டிருந்தபோது, அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான் (லூக்கா 2:9-12).
ஒரு வாரத்திற்கு முன்பு, நற்செய்தி நூல்களில் மற்றுமொரு முக்கியமான நிகழ்வை நாம் சந்தித்திருப்போம். மத்தேயு நற்செய்தியின்படி, மதலேனா மரியாளும் மற்ற மரியாளும் இயேசுவை அடக்கம் செய்த கல்லறையைப் பார்க்கச் சென்றபோது நடந்ததை அது விவரிக்கிறது. அங்கே அந்தக் கல்லறையில் ஒரு தேவதூதன் இருந்தான். அந்தத் தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; என்றான் (மத்தேயு 28:5-6) என்பதை வாசிக்கின்றோம்.
இந்த வார்த்தைகளும் நிகழ்வுகளும் உங்கள் இருதயத்தில் நம்பிக்கையின் ஒலியை எழுப்புகின்றனவா? கிறிஸ்துவின் பிறப்பையும், அவரது உயிர்த்தெழுதலையும் பாருங்கள். பெத்லகேமின் மேய்ப்பர்களையும், எருசலேமின் பெண்களையும் கற்பனை செய்து பாருங்கள். இந்த இரண்டு நிகழ்வுகளும் நம்பிக்கையற்ற உலகிற்கு நற்செய்தியைக் கொண்டு வருகின்றன. இந்த இரண்டு சூழல்களிலும் தாழ்வாகக் கருதப்பட்டவர்களும், ஓரங்கட்டப்பட்டவர்களுமே முதன்மையாக இருந்தனர். கிறிஸ்துவின் பிறப்பின்போது, முன்னணையில் கிடத்தியிருக்கும் குழந்தையைச் சென்று தேடுமாறு தேவதூதர்கள் மேய்ப்பர்களிடம் கூறுகிறார்கள்; ஆனால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில், இயேசு இங்கே இல்லை என்று கூறி, வெறுமையான கல்லறையை வந்து பார்க்குமாறு தேவதூதர்கள் அந்தப் பெண்களை அழைக்கிறார்கள்.
"பயப்படாதிருங்கள்" என்ற நம்பிக்கையூட்டும் ஆறுதல் மொழி இந்த இரண்டு வரலாற்றுத் தருணங்களிலும் மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. இந்த நம்பிக்கையின் எதிரொலி நம் மனதிலும் வலுப்பெறுகிறது. பெத்லகேமின் நிறைந்திருந்த தொட்டியும், எருசலேமின் வெறுமையான கல்லறையும் உலகிற்குத் தரும் நிறைவு இதுவே. இந்த இரண்டு நிகழ்வுகளுக்குள்தான் ஒரு கிறிஸ்தவனின் சாட்சி தொடங்கி, இவ்வுலகில் கிறிஸ்துவின் நித்தியமான பிரசன்னத்தில் அது நிறைவு பெறுகிறது.
கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக, இந்த இரண்டு அற்புதமான நிகழ்வுகளால் நாம் சவாலுக்கு உட்படுத்தப்படுகிறோம். இந்த இரண்டு சம்பவங்களும் நாம் கண்டதைச் சாட்சியாகக் நம் வாழ்வில் நிறுத்தவும், பின் அதைப் பகிர்ந்து கொள்ளவும் நம்மை அழைக்கின்றன. கிறிஸ்துவின் பிறப்பிற்கும் அவரது உயிர்த்தெழுதலுக்கும் நாம் சாட்சிகளாக இருக்கிறோம்,
மேலும் "பயப்படாதிருங்கள்" என்ற நற்செய்தியை முன்னெடுத்துச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம். முன்னணையில் அவர்கள் குழந்தையைக் கண்டார்கள், ஆனால் கல்லறையில் அவர்கள் அவரைக் காணவில்லை. எனினும், பெத்லகேமின் மேய்ப்பர்களுக்கும் எருசலேமின் பெண்களுக்கும் பொதுவான ஒன்று உண்டு: அது, அவர்கள் சாட்சிகளாக இருக்க அழைக்கப்பட்டார்கள் என்பதே. தங்களுக்குள் கிடைத்த நம்பிக்கையின் கனத்தைத் தாங்க முடியாமல், அந்த மேய்ப்பர்களும் பெண்களும் ஓடிச் சென்று, தாங்கள் கண்ட நம்பிக்கையின் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கிறிஸ்து பிறப்பு மற்றும் கிறிஸ்து உயிர்ப்புக் காலங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, கிறிஸ்துவின் உலக வாழ்விலும் அவரது ஊழியத்திலும் நாம் காணும் நம்பிக்கையில் எந்தளவுக்கு நாம் உறுதியாக இருக்கிறோம் என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம். மேலுமாக, அவரில் நாம் காணும் நம்பிக்கையை எந்தளவுக்கு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்? என்பதையும் சிந்திக்க வைக்கின்றது.
நம்பிக்கையோடு இருக்கவும், அந்த நம்பிக்கையைப் பகிரவும் கிறிஸ்து நம்மை அழைக்கிறார். அவரது பிறப்பு மற்றும் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சிகளாக இருக்க அவர் நம்மை அழைக்கிறார். தொட்டில் முதல் கல்லறை வரை நாம் காணும் அந்த முழுமையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, அவரது உண்மையான ஊழியர்களாக இருக்க அவர் நம்மை அழைக்கிறார். இந்த உன்னத அழைப்பிற்குச் செவிசாய்த்து, ஊக்கத்துடன் பணியாற்றுவதே நம் வாழ்வில் கடவுளின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமையும்.










