கர்த்தர் உங்களுக்கு முன்பாக போவார்


"நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்;"
- ஏசாயா 45:2-3 - 

இன்று இந்தத் தியானத்தை நான் எழுதும்போது, என் வாழ்க்கையில் நான் முன்னேறிச் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்ற பல சூழ்நிலைகளின் நினைவுகள் என் மனதை நெருக்குகின்றன. அந்தத் தேக்கநிலைகள் எல்லாம் எனது ஆர்வமின்மையாலோ ஏற்பட்டவை அல்ல; மாறாக, எனக்கு முன்னால் என்ன காத்திருக்கிறதோ என்ற பயத்தினால் ஏற்பட்டவை! விளைவுகள் என்னவாகுமோ என்ற நிச்சயமற்ற நிலையில், யாராவது ஒரு நிச்சயத்தைத் தரமாட்டார்களா என்று நான் ஏங்கி நின்ற தருணங்கள் அவை.

உங்கள் வாழ்விலும் இப்படிப்பட்ட நினைவுகள் உண்டா? இது நம்மிடத்தில் காணப்படும் ஒரு பொதுவான போராட்டமாகும். இன்று நீங்களும் இதே போன்ற ஒரு சூழ்நிலையில் இருக்கலாம். அப்படியானால், சோர்ந்து போகாதீர்கள்; கர்த்தர் இன்று உங்களுக்கு ஒரு மகத்தான வாக்குறுதியை அளிக்கிறார்.

ஏசாயா 45:2-3 ஒரு வாக்குத்தத்தின் வசனம். யூதர்களை பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக பெர்சிய ராஜாவாகிய கோரேசை தேவன் அழைத்தபோது, அவருக்கு அளித்த உறுதிமொழி நிறைந்த வாக்குத்தத்தம் இது. இது கோரேசின் வாழ்வில் ஒரு அசாதாரணமான அழைப்பு, அதோடு இணைந்த ஒரு அசாதாரணமான உறுதியும் கூட. கோரேசை அழைக்கிற இஸ்ரவேலின் தேவன் சர்வவல்லமையுள்ளவர், சர்வ அதிகாரம் படைத்தவர் மற்றும் பராமரிக்கிறவர் என்பதை அவர் அறிய வேண்டும் என்று தேவன் விரும்பினார். இந்த வசனங்களில் தேவன் தரும் வாக்குறுதிகளை நாம் ஒவ்வொன்றாகக் கவனிப்போம்:

முதலாவதாக, கர்த்தர், "நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்..." என்று சொல்கிறார். இது நம்முடைய இலக்கை நோக்கிய பயணத்தை ஆண்டவர் சாத்தியமாக்கி, பாதையைச் சமமாக்குவார் என்பதை உறுதிப்படுத்துகிறது. இரண்டாவதாக, "வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறிப்பேன்..." என்று தேவன் உறுதியளிக்கிறார். நம்முடைய பணி நிறைவேற வேண்டிய இடத்தில் உள்ள அனைத்துத் தடைகளையும் தகர்க்கும் தேவனுடைய வல்லமையை இது குறிக்கிறது. அதேபோல, இறுதியாக, "அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்" என்றும் வாக்களிக்கின்றார். உலகத்தின் சாதாரண கண்களுக்குத் தெரியாத ஆசீர்வாதங்களை அந்த இடத்திலேயே தேவன் உங்களுக்குக் கட்டளையிடுவார் என்ற வாக்குறுதி இது. ஆகையால், கர்த்தர் நமக்கு முன்பாகச் செல்லும்போது நம் வாழ்வில், பணியில் நடக்கின்ற மூன்று முக்கிய காரியங்களை இங்கே காண்கின்றோம். 

முதலாவதாக, தடைகள் தகர்க்கப்படும். உங்களைப் பெயர் சொல்லி அழைத்து, ஒரு விசேஷித்த நோக்கத்திற்காக உங்களை நியமித்த ஆண்டவர் உங்களுக்கு முன்பாகச் செல்வார். அவர் செல்லும்போது, உங்கள் அழைப்பிற்குத் தடையாக இருக்கும் சிறு கல்லோ அல்லது பெரிய மலையோ, எதுவாக இருந்தாலும் அதை அவர் சமமாக்கி உங்கள் பாதையைச் செம்மையாக்குவார். இரண்டாவதாக, முன்கூட்டியே ஆயத்தம் செய்வார். நீங்கள் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு ஆண்டவர் ஏற்கனவே சென்றிருப்பார். அவர் உங்களுக்கு முன்பாகச் சென்றிருப்பதால், அந்த இடத்தில் உங்களுக்கு எதிராக நிற்கும் பலமான அரண்களை அவர் ஏற்கனவே முறித்திருப்பார். மற்றவர்களுக்குச் சாத்தியமற்றது என்று தோன்றிய காரியங்கள் உங்களுக்குச் சாத்தியமாகும், ஏனெனில் தேவன் உங்களுக்காகத் தடைகளைத் தகர்த்து வைத்திருப்பார். மூன்றாவதாக, மறைவான ஆசீர்வாதங்களால் நிரப்புவார். தேவன் நம்மை அழைத்த இடத்தில், தமது மேன்மையான ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்புவார். தேவன் தருவதாகச் சொல்லும் ஆசீர்வாதங்கள் "மறைத்து வைக்கப்பட்டவை". இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளுங்கள்! இவை நாம் அந்த இடத்திற்குச் செல்லும் முன் பார்த்த ஆசீர்வாதங்கள் அல்ல; நம்முடைய மட்டுப்படுத்தப்பட்ட மனித அறிவால் கற்பனை செய்ய முடியாதவை. இவை வெளிப்படையாகத் தெரிபவை அல்ல, தேவன் தமது பொக்கிஷங்களிலிருந்து எடுத்து நம்மை ஆசீர்வதிக்கும்போது மட்டுமே நாம் உணரக்கூடியவை.

இன்று கர்த்தர் உங்களுக்கு உறுதி அளிக்கிறார்: அவர் உங்களுக்கு முன்பாகச் செல்வார்! எனவே பயப்படாதீர்கள். தேங்கி நிற்காதீர்கள். அடுத்த கட்டத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் இலக்கில் என்ன காத்திருக்கிறது என்று கலங்காதீர்கள்.
நீங்கள் இருக்க வேண்டிய இடத்திலும், நீங்கள் செய்ய வேண்டிய பணியிலும், உங்களை ஆசீர்வதிப்பதற்காக கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சென்று, பாதையைச் சமமாக்கி, தடைகளை உடைப்பார். தேவனுடைய பிள்ளையாய், இந்த உறுதியோடு இன்று உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள்.

நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக்  கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்துதலும், நம்மனைவரோடும் கூட இருந்து, நம்மை வழிநடத்துவதாக.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் பிறேமன் வீரசிங்கம்



"ஆசீர்வாதங்கள்🎶"
by Tamil Gospel Singers & Worship Leaders

Subscribe

Subscribe
Subscribe to the Weekly Devotions with Ebenezer WhatsApp Channel to receive weekly updates

Popular Posts