நம்மைத் தீட்டுப்படுத்தாதபடி உறுதியாயிருத்தல்
இன்றைய வேதாகம வசனம்
"தானியேல், ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்."
(தானியேல் 01: 08)
சந்தர்ப்ப சூழ்நிலைகளும் சலனங்களும் சோதனைகளும் நிறைந்தே காணப்படும் இந்த உலகில், தானியேல் தீர்க்கதரிசி, ஒரு இளைஞனாக வாழ்ந்த வாழ்வு நமக்கு ஒரு பெரும் உதாரணமாக அமைகிறது. நாம் நம்புவதில் கடைசிவரை உறுதியாய் இருப்பது என்பது இக்காலத்தில் நம்முள் மிகக் குறைவாகவே காணப்படுகிறது. பெரும்பாலானோர் செய்கின்றனரே என்று நாமும் சேர்ந்து அவ்வழியே செல்லாமல் தனித்து நமது விசுவாசத்தில் உறுதியாய் இருப்பவர்கள் மிக மிகக் குறைவு. விருப்பங்களும் அவற்றிற்கான பாதைகளும் அநேகம் உள்ளன. சில நேரங்களில், கிறிஸ்து இயேசுவுக்காய் நாம் எழுந்து நிற்பது தேவையற்றது என்ற எண்ணமும், வெறுமனே மற்றவர்களைப்போல் நாமும் காரியங்களைச் செய்துவிட்டு கடந்து செல்லுவோம் என்ற எண்ணமும் நம்முள் எழுவதுண்டு. ஆனாலும், இன்று நம் கண் முன்னே, இத்தியானத்தில், யூதா நாட்டிலிருந்து சிறைப்பிடித்து பாபிலோனுக்கு கொண்டுவரப்பட்டவர்களுக்குள்ளே ஒருவனாகவும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் அரண்மனையில் சேவை செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டு, அவதானிக்கப்பட்டு, பயிற்சி பெறவும் காத்திருக்கும் இளைஞனான தானியேலை ஆன்மீக உறுதிக்கு ஒரு சிறந்த உதாரணமாக காண்கிறோம்.
"இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும், அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்." அது மாத்திரம் அல்லாது "ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான்" (தானியேல் 01: 03-05). இவ்வளவு பெரிதானதொரு சந்தர்ப்பமும், இராஜ சேவையில் தானும் ஒரு அதிகாரியாகும் எதிர்காலமும் கை எட்டும் தூரத்தில் இருக்க, "தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்" (தானியேல் 01: 08). தானியேலும், அவனது நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களும், தமக்கு முன்னே இருக்கும் எதிர்கால சந்தர்ப்பத்தைப் பார்க்கிலும் தேவனுக்காக வேறுபிரிக்கப்பட்டும் அவருக்காய் பரிசுத்தமாய் இருத்தலையும் தெரிந்துகொள்ளுவதைப் பார்க்கிறோம். தானியேல் புத்தகம், 1ம் அதிகாரத்தைத் தொடர்ந்து வாசிக்கையில் ஆன்மீக உறுதித்தன்மைபற்றி சில வேத ரகசியங்களைக் காண்கிறோம்.
தானியேல், கர்த்தருடைய பார்வையில் தீட்டானது யாது என்பதை அறிந்திருந்தான்.
தானியேல், ராஜாவின் கட்டளைக்கிணங்க வழங்கப்பட்ட உணவைத் தவிர்த்ததுக்கான காரணங்கள் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் காணப்பட்டாலும், இந்த அதிகாரத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒரு முக்கிய படிப்பினை என்னவென்றால், தானியேல் ஒரு இளைஞனாய் இருந்தும், யூதா நாட்டில் வளர்ந்த ஒருவனாய், கர்த்தருடைய பார்வையில் எது தீட்டானது என்பதைப் பற்றிய அறிவு அவனுக்கு இருந்தது என்பதேயாகும். தானியேலின் ஆன்மீக வளர்ச்சியின் உறுதியே இன்று அவனுக்கு ஒரு பலமான தூண் போல இந்த ஆன்மீக உறுதிக்கு பக்க பலமாய் நிற்பதைக் காண்கிறோம். இன்று இந்த படிப்பினை நமது வீடுகளிலும், திருச்சபைகளிலும், நமது சமூகத்திலும், இளம் சந்ததியினர் மத்தியில் கடவுளின் வார்த்தையின் விதை ஆழமாய் விதைக்கப்படுவதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
தானியேல் தன்னைத் தீட்டுப்படுத்தாமல் இருப்பதிலே உறுதியாயிருந்தான்.
வீட்டிலிருந்தும், சொந்த தேசத்திலிருந்தும், சொந்த சூழலிலிருந்தும் தொலைவிலும் , கேள்வி கேட்க யாருமில்லை என்ற இடத்திலும், ஆன்மீகக் கட்டுப்பாடுகள் மற்றும் தூய்மை என்பவற்றைப் பற்றி அவதானிக்கவும் யாருமில்லை என்ற இடத்திலும்கூட தானியேல் கர்த்தருக்காக தான் வேறுபிரிக்கப்பட்டவனாய் தீட்டுப்படாது வாழவேண்டும் என்று மனதிலே உறுதிகொண்டான். தானியேல், இந்த ராஜ கட்டளையின் உணவைத் தீட்டானது என்று சிந்தித்தமைக்கு இஸ்ரவேலரின் உணவு பற்றிய கட்டளைகளும், இந்த உணவுகள் பாபிலோனிய விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவையாக இருந்திருக்கலாம் என்பதும், சடங்கு ரீதியான தூய்மைப்படுத்தாமையும், உணவு ரீதியான ஒரு கற்பைப் பேணுதலும் காரணங்களாக இருந்திருக்கலாம். காரணங்கள் எதுவாக இருந்தாலும், தானியேல் தான் தன்னை எவ்விதத்திலும் தீட்டுப்படாது கர்த்தருக்காக பரிசுத்தமாய் வாழவேண்டும் என்ற தீர்மானத்திலே உறுதியாய் இருந்தான் என்பது திட்டவட்டமானதொன்றாகும். இன்று, இது நம் மத்தியிலும் ஒரு பெரும் கேள்வியை ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா சந்தர்ப்பங்கள், வழிகள், மற்றும் எதிர்கால இலட்சியங்களின் மத்தியிலும், தானியேல் நம்முன்னே ஒரு ஆன்மீக உதாரணமாக நிற்பதைக் காண்கிறோம்.
தானியேல் தனது உறுதியான எண்ணத்தை சுமூகமாக வெளிப்படுத்தினான்.
தமக்கு இணக்கமில்லாத, தங்களுடைய விருப்புகளுக்கு ஒவ்வாத விடயங்களுக்கு எதிராக அணி திரட்டுவதும், கொடி உயர்த்துவதும், குரலெழுப்புவதும், கூச்சலிடுவதும், எள்ளிநகையாடுவதும், தமது ஈடுபாட்டை முழுவதுமாக தவிர்த்தலும் இன்று நம் இளம் சமூகத்தினர் மத்தியில் வீடு தொடக்கம் நாடு வரையும், எல்லா நிலையிலும் ஒரு சாதாரணமான விடயமாகிவிட்டது. ஆனாலும், தானியேலிலும் அவனின் நண்பர்களிலும் இந்த பக்குவத்தையும், தங்களின் ஆன்மீக உறுதியை அவர்கள் வெளிப்படுத்தின விதத்தையும் காண்கிறோம். தானியேல் தனது ஆன்மீக உறுதியை தெளிவாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது, அதற்கான ஒரு அணுகு முறையையும் சுமூகமாக தெரிவிக்கின்றான். "தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்" (தானியேல் 01: 08). அதனைத் தொடர்ந்து, மேலும் தேவை ஏற்பட சுமூகமாக மீண்டும் "பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை" (தானியேல் 01:11) சந்தித்து பேசுகின்றான். இன்று இது நம்முன் வைக்கப்படும் ஒரு முக்கியமான படிப்பினை. நமது விசுவாசத்தையும் ஆன்மீக உறுதியையும் நமது சமூகத்திலும் தேவை ஏற்படும் இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இல்லாது சுமூகமாக தெரியப்படுத்த அழைக்கப்படுகிறோம்.
தானியேல் கர்த்தரில் முழு நம்பிக்கை வைத்திருந்தான்.
தானியேல், கர்த்தர் மேலே வைத்திருந்த விசுவாசத்தின் உறுதி நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. தானியேல், தனது விசாரிப்புக் காரணிடம் சென்று ஒரு பயமும் இல்லாமல் ஒரு வழியைக் கூறுகின்றான், ஒரு கட்டுப்பாட்டுப் பரிசோதனை என்றே கூறலாம். இந்தப் பரிசோதனையின் கருதுகோள் ராஜாவின் பணியாளருக்கே தவிர, கர்த்தரிடத்தில் முழு நம்பிக்கையாயிருந்த தானியேலுக்கு இந்த பரிசோதனை ஒரு நிலையான கோட்பாடு சார்ந்ததே. இன்னும் இலகுவாக சொல்லுவதானால் பரிசோதனையின் முடிவு என்னவாயிருக்கும் என்பது தானியேலுக்கு எந்தவித சந்தேகமுமின்றி தெரியும். "அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி: பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான். அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான். பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது. ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்" (தானியேல் 01: 11-16). என்னவொரு நம்பிக்கை! என்னவொரு நிச்சயம்! நாமும் கர்த்தரில் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளோம் என சிந்தித்துப் பார்ப்போம்.
தானியேல் கர்த்தரிடத்திலிருந்து வெகுமதியைப் பெற்றுக்கொண்டான்.
தானியேலின் ஆன்மீக உறுதியும், அவனது சுமூகமான வெளிப்படுத்தலும், கர்த்தர் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் வீண்போகவில்லை. கர்த்தர் தானியேலுக்கும் அவனது நண்பர்களான அனனியா (சாத்ராக்), மீஷாவேல் (மேஷாக்) மற்றும் அசரியா (ஆபேத்நேகோ) ஆகியோருக்கும் மிகுந்த வெகுமதியை இறுதியில் வைத்திருந்தார். வேதம் சொல்லுகிறது "இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான். ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள். ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்" (தானியேல் 01: 17-21) என்று. என்னவோரு ஆச்சரியமான மேன்மையானதொரு வெகுமதி.
இன்று கர்த்தர் நம்மையும் தானியேலைப்போல அழைக்கிறார். எம்மைச் சூழவுள்ள சந்தர்ப்பங்கள், பாதைகள் மற்றும் இலட்சியங்களின் மத்தியில், கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாக வாழ அழைக்கிறார். நாம் கர்த்தருக்காக வெறுபிரிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து அவருக்காக தீட்டுப்படாத தூய்மையான வாழ்வை வாழ நம்மை ஆண்டவர் அழைக்கிறார். கர்த்தரின் பார்வையில் சரியானது தீங்கானது யாதென அறிந்து அதிலே கவனமாய் இருப்போம். சுமூகமாக நமது விசுவாசத்தையும் ஆன்மீக உறுதியையும் எடுத்துரைப்போம். கர்த்தரில் எப்பொழுதும் முழு நம்பிக்கையாய் இருப்போம். அவர் நமக்காக வைத்திருக்கும் வெகுமதியை சந்தோஷத்தோடும் ஆச்சரியத்தோடும் பெற்றிடுவோம்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து நாம் அவரிடத்தில் வரவும், அவரின் மகிமையிலே பங்கெடுக்கவும் நம்மை வழிநடத்துவதாக.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
ஆன் சிந்தியாவின் பாடல்
"அர்ப்பணித்தேன்"