உன் நிலைமை நன்றாய் அறிந்த ஆண்டவர்
இன்றைய வேதாகம வசனம்
என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ,
கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
(சங்கீதம் 139: 04)
மனதின் எந்த யோசனையையும் யாருடனும் பகிர்ந்துகொள்ளப்போவதில்லை என்ற முடிவை எடுத்த கஷ்டமான இக்கட்டான நாட்கள் நமக்கு ஞாபகம் இருக்கும். நம்மை நாமே முடக்கி வைத்து, இந்த சூழ்நிலைகளுக்கூடாக நான் தனியாகத்தான் செல்வேன் என நாம் முடிவெடுத்திருக்கலாம். சில விடயங்களைக்குறித்து நாம் என்ன சிந்திக்கின்றோம் என்பதைக்கூட யாருக்கும் தெரியப்படுத்தப்போவதில்லை என்ற முடிவும் நம்முள் இருந்திருக்கும். நாம் என்ன கஷ்டத்துக்கூடாக செல்கிறோம் என்பதை யாரும் அறிந்திருக்கத்தேவையில்லை என்ற எண்ணமும் எழுந்திருக்கும். அதிலும் விசேடமாக, நாம் அடுத்ததாக என்ன செய்யப்போகின்றோம் என்பதைப் பற்றி யாரிடமும் ஒரு சொல்கூட வாய் திறந்து பேசிவிடக்கூடாது என்பதிலே நாம் உறுதியாய் இருந்திருக்கக்கூடும். நம்முள் சிலருக்கு, நமது ஜெப நேரங்கள், ஆண்டவருடன் மனம் திறந்து பேசும் அந்தப் பெறுமதியான நேரங்கள் கூட, அமைதியானதும் வெறுமையானதுமாய் இருந்திருக்கும். ஆண்டவருடன் என்னத்தைப் பேசுவோம், எப்படிப் பேசுவோம் என்று மனம் குழம்பிப்போய் இருந்தது இந்த ஜெப அமைதிக்கும் வெறுமைக்கும் காரணங்களாய் அமைந்திருக்கும்.
ஆனாலும், இப்படியான இக்கட்டான, முடக்கப்பட்ட, வாழ்வின் தனிமையின் பொழுதுகளின் முடிவிலே, யாரோ நமது எண்ணங்களையும் விருப்பங்களையும், சிந்தையிலிருந்த ஒவ்வொரு சிறு காரியத்தையும் அறிந்திருந்ததை விளங்கிக்கொண்டது மட்டுமல்லாது, நாம் விரும்பியவை சரியான விதத்திலும் சரியான நேரத்திலும் தானாகவே நிறைவுபெறுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டும் இருந்திருக்கக்கூடும். நீங்கள் உங்களது கஷ்டங்களையும் ஏக்கங்களையும் ஒருபோதும் சொல்லால் யாரிடமும் வெளிப்படுத்தியதில்லை. யாரிடமும் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று பேசியதுமில்லை. ஆனாலும், விரும்பியது செவ்வனே கண் முன் நிறைவேறுவதைப் பார்த்து வியப்படைந்திருப்பீர்கள். இஸ்ரவேலின் ராஜாவும் ஆண்டவரின் ஊழியனுமாயிருந்த தாவீதும் அநேகமாக இதே வியப்பை உணர்ந்தே 139ம் சங்கீதத்தில் "என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்" (4) என்பதை எழுதியுள்ளார் என்பதை இன்று உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். தாவீது கடந்து வந்த பாதை நாம் மேலே வாசித்த நம் வாழ்வின் நிலைமைகளுக்கு ஈடானதே. தாவீது கடவுளின் உதவியுடன் தாண்டிய இக்கட்டுகளும், மேற்கொண்ட ஏமாற்றங்களும் நம் வாழ்வின் நிலைமைகளை ஒத்தவையே. சங்கீதம் 139ஐ முழுமையாக வாசிக்கும்போது, தாவீது தனது வாழ்நாளிலே கடந்து வந்த பாதை என்னவென்பதையும் அவனது மெய்யான உணர்வுகளையும் அறிகின்றோம். இன்று, நாம் தியானத்துக்காக எடுத்துக்கொண்ட வசனமானது உயிரோடு ஜீவிக்கின்ற ஆண்டவரில் நம்பிக்கை வைத்திருக்கும் நமக்கு இரண்டு பெரும் உண்மைகளை எடுத்துக்கூறுகின்றது.
ஆண்டவர் நமது இருதயத்தின் ஆழங்களை அறிந்திருக்கிறார். நாம் சொற்களால் அவற்றைச் சொல்கின்றோமோ அல்லது மனதில் மறைக்கின்றோமோ, உணர்வுகளால் வெளிப்படுத்துகின்றோமோ அல்லது முடக்கி வைக்கின்றோமோ, மகிழ்ச்சியோ கவலையோ, ஆதாயமோ இழப்போ, நன்மையானதோ தீமையானதோ, நமது மனதின் ஆழத்தில் என்ன இருக்கின்றது என்பதை நமது கர்த்தர் நன்கு அறிந்திருக்கிறார் என்பதை மனதில் நினைவுபடுத்திக்கொள்ளுவோம். ஆண்டவரிடமிருந்து நாம் எதையும் மறைக்கமுடியாது. இன்றைய வசனத்தை மீண்டும் ஒரு தடவை பார்ப்போமானால், "என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே.." (சங்கீதம் 139: 04) என்று தாவீது சொல்வதைப் வாசிக்கின்றோம். இதைப்பற்றி நான் தியானித்தபோது என் மனதில் எழுந்த ஒரு விளங்கிக்கொள்ளுதல் என்னவெனில், இது நாவில் இருந்து புறப்பட்டு நாம் பேசிய வார்த்தைகளை மாத்திரம் கூறவில்லை என்பதையே. மாறாக, நமக்கு நாமே நமது உணர்வுகளை நமது குரலில் நமது மனதில் பேசிக்கொள்ள முன்னரே (நமக்கு நாமே நமது குரலில் பேசுவது ஞாபகம் உள்ளாதல்லவா?), முதலாவதாக நாம் பேசப்போகின்றோம் என்பதையும், என்னத்தைப் பேசப்போகின்றோம் என்பதையும் நம் ஆண்டவர் நன்கே அறிந்திருக்கிறார். ஆகையால், அன்பின் அரவணைப்பின் ஆண்டவரின் பிள்ளைகளாய், நமது இருதயத்தின் ஒவ்வொரு எண்ணத்தையும், ஏக்கத்தையும், விருப்பத்தையும் நம் ஆண்டவர் அறிந்திருக்கிறார் என்ற உண்மையை உணர்வோம். இந்த உண்மையின் உணர்வு நம்மை அடுத்த முக்கியமானதொரு ஆன்மீக நிலைக்கு வழிநடத்தும்.
நம்மைத் திறந்த உள்ளத்தோடு ஒப்புக்கொடுப்போம். ஆண்டவர் நம் இருதயத்தின் சிந்தனைகளையெல்லாம் அறிந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட நாம் அடுத்ததாக அவரிடம் திறந்த உள்ளத்தோடு நம்மை அவர் சித்தத்துக்கு ஒப்புவிப்போம். தாவீது செய்ததும் இதுவே. 139ம் சங்கீதத்தை முழுமையாக வாசிக்கும்போது தாவீது கர்த்தரின் தன்மையையும் அவரின் ஆச்சரியமான வழிகளையும் உணர்ந்து கடைசியிலே, 23ம் 24ம் வசனங்களில் உள்ளபடி, "தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்" என்று தன் உள்ளத்தைக் கர்த்தருக்கு திறந்து கொடுத்து ஒப்புவிப்பதைக் காண்கின்றோம். இதுவே நாம் செய்ய வேண்டிய ஜெபமும் பண்ணவேண்டிய ஒப்புக்கொடுத்தலும். கர்த்தர் நமது இருதயத்தின் ஆழத்திலுள்ள ஒவ்வொன்றையும் அறிந்திருக்கிறார் என்பதை உணர்ந்த நாமும், தேவனின் சித்தம் நமது எண்ணங்களின் துவக்கத்திலேயே, அவற்றின் பிறப்பிலேயே இருக்கவும், அவரால் நம் உள்ளங்கள் ஆளப்படவும் நம்மை ஒப்புக்கொடுப்போம்.
நமது நிலைமைகள், நமது இருதயத்தின் எண்ணங்கள், நமது உணர்வுகள் அனைத்தையும் நம் ஆண்டவர் அறிந்திருக்கிறார் என்பதை உணர்ந்து, அவருடைய கிருபாசனத்தின் முன் எம்மைத் தாழ்த்தி விசுவாசத்தோடு தேடி வருவோமாக.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
ஜோன்சாம் ஜோய்சன் அவர்களின் பாடல்
"என் நிலைமை நன்றாய் அறிந்தவர்"