ஆண்டவர் உன்னோடுகூட நடப்பார்
இன்றைய வேதாகம வசனம்
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது
நான் உன்னோடு இருப்பேன்;
நீ ஆறுகளைக் கடக்கும்போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை;
நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்;
அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
(ஏசாயா 43: 02)
வாழ்க்கை என்னும் பெரும் பாதையிலே நடந்து செல்கையில், தனிமை என்பதை நினைத்து நாம் பயப்படுவது உண்டு. நாம் எம்மை ஒரு கணம் பார்க்கிறோம், நாம் சென்றுகொண்டிருக்கும் பயணத்தைப் பார்க்கிறோம், தூரத்தைக் கணக்குப் போடுகிறோம், எதிர்வரும் கடினமான காலங்களை பார்க்கிறோம், நம்முடன் என்ன இருக்கிறது என்பதை நினைத்து கவலைப்படுகிறோம், வீதியின் அடுத்த ஏற்றத்துக்கு அப்பால் என்ன உள்ளது என்பதை அறியாமையால், பயந்து குழம்பிப்போய்விடுகிறோம். ஆனாலும், நம்முடன் இந்த கடினமான பாதையை நம்முடன் சேர்ந்து நடக்க நம் தகப்பனாம் நம்முடைய ஆண்டவர் இருக்கிறார் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நினைவில் வைத்திருக்கத் தவறிவிடுகின்றோம். நாம் தனியாக இல்லை! நம்முடன் சேர்ந்து ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க தயாராக இருக்கும் நம் ஆண்டவர் எப்போதும் இருக்கிறார்.
ஏசாயா 43: 02ம் வசனமானது, நாம் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலைமை என்னவானாலும், எவ்வளவு கடினமும் நீளமுமானாலும், நமது ஆண்டவர் நம்முடனிருந்து நம்மைப் பாதுகாத்து வழிநடத்துவார் என்பதை ஞாபகப்படுத்துகிறது. இந்த வசனத்தின் வாக்குத்தத்தங்கள் எல்லாமே நம்முடன் தொடரும் ஆண்டவரின் பிரசன்னம் என்னும் ஒரே விடயத்தையே எடுத்து சொல்வதுபோல் இருந்தாலும், ஒரே சிப்பியினுள் ஆச்சரியமாக மூன்று முத்துக்கள் இருப்பதுபோல், நான் மூன்று முக்கியமான சத்தியங்களை இந்த ஒரு வசனத்தில் காண்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக பகிர்வதும், அவற்றின் உண்மையின் ஆழங்களை உணர்வதும் நாம் சேவிக்கும் ஆண்டவரின் மேன்மையை உணர உதவி செய்யும் என நம்புகிறேன்.
ஆண்டவர், நமது கஷ்டத்தின், சவால்களின் வேளைகளிலே நம்முடன் இருப்பார் என வாக்களிக்கின்றார்.
ஏசாயா 43: 02ம் வசனத்தின் முதல் பகுதியை கவனமாக வாசிக்கும்போது, ஆண்டவர் தன்னுடைய மாறாத பிரசன்னத்தை நம் வாழ்க்கைப் பயணத்தில் வாக்களித்திருப்பதைக் காண்கின்றோம். ஆண்டவர், "நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்" என வாக்களித்திருப்பதைக் காண்கின்றோம். அதற்கு ஒரு பெரிய "ஆமென்!" ஆண்டவர், நம் பயணப் பாதையிலே, ஒரு தடையோ சவாலோ இருக்காது என்று கூறவில்லை. மாறாக, நாம் செல்லும் பாதையிலே கஷ்டமான காலங்களான தண்ணீர்களைக் கடக்கும்போது அவருடைய பிரசன்னம் மாறாது நம்முடன் தொடரும் என்பதை நமக்கு வாக்களித்திருக்கிறார் என்பதை உணர்கிறோம். வாழ்வில் கஷ்டங்கள், சவால்களான சூழ்நிலைகள் தவிர்க்கமுடியாதவையே. அவை நாம் எதிர்கொள்ளவேண்டியவையே. ஆனாலும், நாம் நினைவில் வைத்திருக்கவேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால், நமது ஆண்டவர் நம்முடனிருந்து, இந்த கடினமான பாதையிலே நம்முடன் நடக்கப்போகிறார் என்பதே. பயமின்றி தொடர்ந்து பயணிக்க இந்த ஒரு வாக்குத்தத்தம் போதும். என்னதான் எதிர்கொண்டு வந்தாலும் நம் தேவன் நம்மோடு இருக்கிறார். அவர் நம்மோடு சேர்ந்து நடக்கும் இந்த பயணமானது, இந்த புவி வாழ்வு தாண்டி நித்தியம் வரைக்கும் தொடரும்.
ஆண்டவர், எந்தவொரு நிலைமையும் நம்மை சடுதியாக, பலமாக பாதிக்க ஒருபோதும் விடமாட்டார் என வாக்களிக்கின்றார்.
ஏசாயா 43: 02ம் வசனத்தின் இரண்டாம் பகுதியானது, "நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை" என்ற ஆண்டவரின் வாக்கை நமக்கு தெரிவிக்கிறது. என்னவொரு ஆச்சரியமான வாக்குத்தத்தம். ஒரு கஷ்டமான காலம் நம்மை நெருங்கும்போதோ, அல்லது ஒரு கஷ்டமான பாதைக்கூடாக நாம் செல்லும்போதோ, நமக்கு வரும் மிகப்பெரிய பயம் என்னவென்றால், இந்த நிலைமை நம்மை எந்த அளவிற்கு பாதித்துவிடுமோ என்பதே. இந்த கஷ்டம் நம்மை பாதித்து, முடங்கடித்து, நிலைகுலையப்பண்ணி நம்மை வெறுமையாக்கிவிடுமோ என்று நாம் சிந்தித்துப் பயப்படுவது உண்டு. நாம் அப்படியே முடங்கிக் கிடந்து, கொஞ்சம் கொஞ்சமாக அரித்து செல்லப்படும் நிலைக்கு வந்துவிடுவோமோ என்ற சிந்தனை நமக்குள் இருக்கும். ஆனாலும், ஆண்டவர் இன்று நமக்கு எதை வாக்களிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுவோம். "அவைகள் உன்மேல் புரளுவதில்லை" என்ற ஆண்டவரின் வாக்கை மறவாதிருப்போம். ஆம்! எந்தவொரு நிலைமையும் நமது அளவுக்கு மீறி நம் மேல் புரண்டு, நம்மை சடுதியாக சீர்குலைக்க ஆண்டவர் ஒருபோதும் விடமாட்டார். ஆண்டவர் நம்மோடு சேர்ந்து நடப்பார். நமது கரங்களை இறுகப் பிடித்து நம்மை ஆறுகள் புரண்டு ஓடுவது போன்ற நிலைமைகளுக்கூடாகவும் பத்திரமாக வழி நடத்துவார்.
ஆண்டவர், எந்தவொரு நிலைமையும் நம்மை முற்றாய் அழிக்க ஒருபோதும் விடமாட்டார் என வாக்களிக்கிறார்.
ஏசாயா 43: 02ம் வசனத்தின் மூன்றாம் பகுதியானது, ஆண்டவர் நமக்கு அளித்திருக்கும் இன்னுமொரு பெரிய வாக்குத்தத்தத்தை நினைவுபடுத்துகிறது. ஆண்டவர் நமக்கு, "நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது" என்ற ஒரு ஆச்சரியத்தின் வாக்கைக் கொடுக்கிறார். சில வேளைகளில் நம்மை நெருங்கும் கஷ்டமான நிலைமையோ அல்லது நாம் கடக்கும் மிக மோசமான சூழ்நிலையோ நம்மை அப்படியே அழித்துவிடுமோ என்று நாம் பயப்படுவதுண்டு. இதுவே நம் முடிவு என்று நாம் பயந்திருக்கக்கூடும். ஆனாலும், ஆண்டவர், எந்தவொரு இன்னலோ, திடீர் சூழ்நிலையோ, பயங்கரமோ நம்மை முழுவதும் அழித்துப்போடாதபடி காப்பார் என வாக்களிக்கிறார். இவ் வாழ்வின் முடிவோ, இந்த புவியிலே நாம் செய்யும் பயணத்தின் முடிவோ ஒரு கிறிஸ்து இயேசுவின் விசுவாசிக்கு முடிவல்ல என்பதையும் நாம் மனதில் வைத்திருப்போம். மரணம் கூட நம்மை அழிக்க முடியாது. ஆண்டவர் நம்மை அழியாது, நித்தியத்திலே கொண்டு சேர்க்கும் தகப்பன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆண்டவரோடு நாம் நடக்கும் இந்த பயணமானது எப்போதும் தொடரும்.
நமக்கெதிரே என்ன வந்தாலும், ஆண்டவர் நம்முடன் பயணிக்கிறார். அவர் வழி நடத்துகிறார். அவரின் வாக்குத்தத்தங்களை நம்பி அவருடன் பயணிப்போம்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து, தண்ணீர்களுக்கூடாகவும், ஆறுகளுக்கூடாகவும், அக்கினிக்கூடாகவும் நம்மை வழிநடத்துவாராக.
கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
ஜஸ்மின் பெFய்த் அவர்களின் பாடல்
"என்னை நடத்துபவர் நீரே 🎶"