பதிலளிக்கப்பட்ட ஜெபத்தை வாழ்தல்
இன்றைய வேதாகம வசனம்
அன்னாள்: "...இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான் தான்... இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்... ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்."
(1 சாமுவேல் 1: 26-28ன் பகுதிகள்)
வாழ்வின் அனைத்து வேளைகளிலும் பெலனுள்ளவர்களாய் வாழ்வது என்பது சவாலானதொன்றாகும். வாழ்வின் கடினமான பாதைகளுக்கூடாக தனியாக செல்வதற்கு அதிகமான வேளைகளில் பெலன் இருப்பதில்லை. எமக்கு உதவி தேவை. அதேபோன்றுதான், ஒரு தேவைக்காக ஜெபித்து பதிலுக்காக காத்திருப்பதும். நாம் தேடுவதுண்டு. நாம் கேட்பதுண்டு. நாம் ஜெபிப்பதுண்டு. நாம் கடவுளின் பதிலுக்காக காத்திருப்பதுமுண்டு. சிலவேளைகளில் நாம் நினைத்ததைவிடவும் அது அதிக காலம் எடுக்கலாம். ஆனாலும், இவை எல்லாவற்றின் பின்பும், கர்த்தர் நம் ஜெபத்துக்கு தன்னுடைய வழியிலே பதில் கொடுக்கும் நாள் வரும், பதிலும் கிடைக்கும். இப்பொழுது, பதிலளிக்கப்பட்ட இந்த ஜெபத்தை நாம் எப்படி வாழப்போகிறோம்? கர்த்தர் நமது வாழ்வின் மிகப்பெரிய தேவையை சந்தித்திருப்பதால் நிச்சயமாகவே இதற்கு முன் இருந்ததுபோல் வாழ்வின் நிலைமைகள் இருக்கப்போவதில்லை. ஆகையால், எமது வாழ்வும் இந்தப் பதிலளிக்கப்பட்ட ஜெபத்தினால் வந்த மாற்றத்தைப் பிரதிபலிக்க வேண்டும்! அன்னாளின் வாழ்வையும் அவளின் சாட்சியையும் இன்று கண் முன் நிறுத்துவோம்.
1 சாமுவேல், முதலாம் அதிகாரத்திலே, அன்னாளின் வாழ்விலே நடந்த முக்கியமான சம்பவங்களை மிகவும் தெளிவாகவும் முழுமையாகவும் வாசிக்கக்கூடியதாய் உள்ளது. அவற்றிலிருந்து இன்றைய கற்றுக்கொள்ளுதலுக்கென்று நாம் 26ம், 27ம் மற்றும் 28ம் வசனங்களிலிருந்து சில பகுதிகளைப் தெரிந்தெடுத்திருக்கிறோம். அன்னாள் ஒரு பிள்ளைக்காய் ஜெபம் பண்ணினாள்; ஒரு ஆண் பிள்ளைக்காய். ஒரு பிள்ளை இல்லாதவளாய் உலகத்தின் பார்வையிலே அவள் வாழ்ந்த சமூகத்திலே அவள் அநேக அவமானங்களை சந்திக்க நேர்ந்திருக்கும். தன் இதயத்தில் தாங்கமுடியா வேதனைகளோடு அவள் ஆண்டவரின் ஆலயத்துக்கு அவளை மிகவும் நேசிக்கும் அவளது கணவன் எல்கானாவோடு சென்றபோது, தனது இதயத்தை ஆண்டவரிடம் ஊற்றி ஜெபிக்கிறாள். அவளது ஜெபத்தை ஆசாரியனான ஏலி கூட கண்டு கவனித்து கேட்கின்றான். வேதம் சொல்லுகிறது "அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள் (1 சாமுவேல் 01: 10, 11). இதுவே அன்னாளின் ஜெபமாயிருந்தது. ஆண்டவர் அன்னாளின் ஜெபத்துக்கு அவரின் நேரத்தில், அவரின் வழியில், அவரின் சித்தத்துக்கு அமைய பதில் கொடுக்கின்றார். அன்னாள், தனது ஜெபத்திற்கான பதில் கிடைத்தபின்பு அவளின் வாழ்வு இருந்ததைப் பார்த்து இன்று மூன்று முக்கியமான கற்றுக்கொள்ளுதல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புவதோடு, அவை நமக்கு பயனுள்ளதாய் இருக்கும் எனவும் நான் நம்புகிறேன்.
அன்னாள், தான் முன்னர் யாராயிருந்தாள் என்பதை மறக்கவில்லை.
தனது ஜெபம் பதிலளிக்கப்பட்டுவிட்டதே என்ற சந்தோஷமும், தனது கையில் இப்பொழுது ஒரு ஆண் குழந்தை இருக்கிறானே என்ற ஆனந்த களிப்பும் அன்னாளை ஒருபோதும் தான் முன்னர் யாராயிருந்தேன் என்பதை மறக்கப்பண்ணவில்லை. தான் பிள்ளையில்லாதவளாய் எந்த ஆலயத்தில் நின்றுகொண்டு வேதனையிலே ஜெபித்தாளோ, அதே ஆலையத்தினுள் ஆசாரியனான ஏலியை அவள் சந்தித்தபோது, "என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான் தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்" (1 சாமுவேல் 01: 26) என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதைக் காண்கிறோம். அவளுடைய தற்கால மன நிறைவோ, மேன்மையோ சந்தோஷமோ அவளுடைய பழைய வாழ்வு எப்படியாயிருந்தது என்பதை ஒருபோதும் மறக்கப்பண்ணியதில்லை. உண்மையிலே பார்த்தால், தனது முன்னான நிலையை எப்போதும் மறவாமல் மனதில் வைத்திருந்து எப்போதும் தன்னை அவ்வாறே அடையாளம் காட்டியதே, இன்று நம் முன்னும், வேதாகமம் எங்கெங்கெல்லாம் நற்செய்தியோடு சென்றடைந்ததோ அங்கெல்லாமும், அன்னாளை ஒரு சாட்சியாக நிறுத்துகிறது. நாம், நம் கண் முன்னே, ஒரு வேதனையின் அன்னாளையும் சந்தோஷத்தின் அன்னாளையும், பிள்ளையில்லாத அன்னாளையும் தாயாகிய அன்னாளையும் ஒன்றாக ஒப்பிட்டுப் பார்த்து ஆண்டவரின் மேன்மையை உணர்வதற்கு காரணம் அன்னாளில் இருந்த இந்த அருமையானதொரு குணமே. இன்று நமக்கு இது ஒரு முக்கிய படிப்பினையாகும். கடவுள் நமது பல நாள் ஜெபத்துக்கு பதில் கொடுக்க முன் நாம் யாராயிருந்தோம், எப்படி வாழ்ந்தோம் என்பதை நம்மில் எத்தனை பேர் இன்றுவரை நினைவில் வைத்திருந்து நம்மை மற்றவர்கள் முன் அடையாளம் காட்டத் துணிகின்றோம்? நமது பழைய வாழ்வின் நிலைமைகள் நினைவில் இல்லாவிட்டால், நமது புதிய வாழ்வு ஒருபோதும் ஆண்டவருக்கென்று சாட்சியாய் இருக்க முடியாது.
அன்னாள், தனது இப்போதைய வாழ்வு ஒரு பதிலளிக்கப்பட்ட ஜெபம் என்பதை மறக்கவில்லை.
தான் ஜெபத்தில் கேட்டது தற்போது தன் கைகளில் இருக்கிறதே என்பது அன்னாளை ஒருபோதும் சாமுவேல் தனது பதிலளிக்கப்பட்ட ஜெபம் என்பதை மறக்கப் பண்ணவில்லை. அவள் ஏலியைப் பார்த்து "இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்" (1 சாமுவேல் 01: 27) என்று நன்றியறிதலோடு சொல்லுகிறாள். இதுவே எப்போதும் அவளுடைய ஜெபமாயிருந்தது; அது இன்று அவள் கரங்களில் உள்ளது. இன்று தன்னுடன் இருக்கும் இந்தச் சின்ன சாமுவேல் ஒரு காலத்திலே தன்னுடைய ஜெபமாயிருந்தான் என்பதை அன்னாள் மறக்கவில்லை. இந்த சாமுவேல் ஒரு காலத்திலே தன்னுடைய கண்களிலிருந்து வடிந்த கண்ணீர் என்பதையும், தன்னுடைய இதயத்திலிருந்த வேதனையும் என்பதை அன்னாள் மறந்துவிடவில்லை. சாமுவேல் தன்னுடைய பதிலளிக்கப்பட்ட ஜெபம் என்பதை அன்னாள் ஒருபோதும் மறக்கவில்லை. இன்று, நம்மைச் சுற்றி இருக்கும் நமது ஆசீர்வாதங்களெல்லாம் ஒரு காலத்திலே நமது ஜெபங்களாய் இருந்தன என்பதை நாம் எந்த அளவுக்கு நினைவில் வைக்கின்றோம்? நமக்கு இன்று கிடைத்திருக்கும் ஆசீர்வாங்கள் நமது வாழ்வில் பதிலளிக்ப்பட்ட ஜெபங்கள் என்பதை மறவாதிருப்போம்.
அன்னாள், தான் தேவையோடு இருந்தபோது கடவுளுடன் பண்ணிய பொருத்தனையை மறக்கவில்லை.
அன்னாள், ஒரு பிள்ளைக்காக ஜெபித்தபோது கடவுளுடன் ஒரு பொருத்தனையை பண்ணுகிறாள். "சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்" (1 சாமுவேல் 01: 11). தான் பண்ணிய பொருத்தனையை அவள் நினைத்திருந்தால் மறைத்திருக்கலாம். அவள் பொருத்தனை செய்ததை யாரும் அறியாதிருந்தார்கள். சாமுவேலும் அவள் நீண்ட நாள் காத்திருந்து பெற்றுக்கொண்ட பிள்ளை. அவளுக்கு எல்லாமே சாமுவேல்தான். ஆனாலும் அன்னாள் கடவுளுக்குப் பயந்தது மட்டுமல்லாது, தனது சந்தோஷத்தினாலும் நிறைவினாலும் நன்றியறிதலோடு அந்தப் பொருத்தனையை நிறைவேற்றுகிறாள். இன்று, நம் வாழ்விலும் கடவுளுடன் நாம் பண்ணிய பொருத்தனைகளை நினைவில் வைப்போம். நாம் தேவையுடன் கடவுளிடம் ஜெபித்த நேரங்களில் அவரிடம் பண்ணின பொருத்தனைகளை, தேவை நிறைவேறியதும், ஜெபத்திற்கு பதில் கிடைத்ததும் நமது பொருத்தனைகளை மறவாது நன்றி உள்ள இருதயத்தோடு நிறைவேற்றுகிறோமா? சிந்திப்போம்.
அன்னாளைப்போல ஆண்டவர் நம் ஜெபங்களுக்கு கொடுக்கும் பதில்களுக்காக அவருக்கு என்றும் நன்றியுடன் வாழ்ந்து, நமது முன்னைய நிலைமைகளையும், நம்முடன் இன்று இருக்கும் அசீர்வாதங்களின் பெறுமதியையும் நினைந்தவர்களாக வாழ்ந்து, கடவுளிடத்திலே நம் பொருத்தனைகளை நிறைவேற்றி நிறைவுகாண்போமாக. இதுவே உண்மையான பதிலளிக்கப்பட்ட ஜெபத்தை வாழ்வதாகும்.
நம்முடைய தந்தையாம் கடவுளின் ஆசீர்வாதமும், மைந்தனாம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும், பரிசுத்த ஆவியானவரின் சமூகமும் வழிநடத்தலும், நம்மனைவரோடும் கூட இருந்து வழிநடத்துவாராக.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பின்,
எபனேசர் வீரசிங்கம்
பென் சாமுவேல் இன் பாடல்
"உங்கள் கிருபை மட்டும் இல்லையென்றால்.."